Sunday, 30 November 2014

எடுத்தது எங்கே -3


ராஜபார்வை படத்தில் வைரமுத்து எழுதிய அந்திமழை பொழிகிறது பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அதே நேரத்தில், அதிக விமர்சனத்துக்கும் ஆளானது.
“இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே”
என்று எழுதியிருந்தார் வைரமுத்து.
அது என்ன இந்திரன் தோட்டத்து முந்திரி? என்று கேட்டார்கள். “ஆண்மையை அதிகரிக்கும் சக்தி முந்திரிக்கு உண்டு. இந்திரன் அதிக ஆண்மை உள்ளவன். அதனால் அவன் தோட்டத்து முந்திரிக்கு அதிகமான ஆண்மை சக்தி இருக்கும் என்ற பொருள்பட எழுதினேன்” என்று ஒரு விளக்கம் அளித்தார் வைரமுத்து. முந்திரிக்கு எப்படியோ ஒரு விளக்கம் கொடுத்துவிட்டார்.
சரி; அது என்ன மன்மத நாட்டுக்கு மந்திரியே .. . மன்மத தேசம் என்பது அவன் மட்டுமே ஆளக்கூடியது. அதில் யாரும் மந்திரி வைத்துக்கொள்ளமாட்டார்கள். ஏதோ முந்திரியே மந்திரியே என்று இயைபுக்காக எழுதிவிட்டார் வைரமுத்து.
இப்படி இயைபுக்காக அவர் அடிக்கடி இடறி விழுவதுண்டு.
இளமைக்காலங்கள் படத்தில் ‘ஈரமான ரோசாவே என்னைப் பார்த்து ஏங்காதே’ பாடலில்
“தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து”
என்று எழுதியிருக்கிறார். இந்த இரண்டு அடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
“சாத்துக்குடி துõத்துக்குடி
என்ன நீயும் ஏத்துகடி”
என்ற பாடலைப் போன்றதுதான் இது.
“தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
எந்நாளும் மாறாது நான் கொண்ட அன்பு”
என்று எழுதியிருந்தாலும் ஓர் அர்த்தம் இருந்திருக்கும். பாவம் அவருக்கு ஏனோ அப்படி தோன்றவில்லை. முதல் அடி ‘பந்து’ என்று முடிந்ததால் அடுத்த அடி ‘சிந்து’ என்று முடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி எழுதியுள்ளார்.
சரி; ராஜ பார்வை பாடலுக்கு வருகிறேன்.
“தொட்டியில் நீர் கொதிக்குதடி- நீ
தொட்ட இடம் மட்டும் சில்லென்றிருக்குதடி”
என்று எழுதுவார் பாரதிதாசன்.
இதையே எதிர்மறையாக சிந்தித்து,
அந்தி மழை பொழிகிறது பாடலில் பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து.
தண்ணீ ர் கொதிக்கிறது. அவள் உடல் சில்லென்று இருக்கிறது. அதாவது கொதிக்கின்ற நீரில் கூட அவள் தொட்ட இடம் சில்லென்று ஆகிற அளவுக்கு அவள் குளிர்ச்சியாக இருக்கிறாள் என்று பாவேந்தர் எழுதியதை, அப்படியே திருப்பிப் போடுகிறார் வைரமுத்து.
“தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது”
என்று எழுதுகிறார்.
பாவேந்தர் பாடலில் நீர் கொதிக்கிறது.<உடல் சில்லென்று இருக்கிறது. வைரமுத்து அதை, தண்ணீர் சில்லென்று இருக்கிறது. அதில் நிற்கும்போதும் வியர்க்கும் அளவுக்கு அவன் உடல் கொதிக்கின்றது என்று எழுதுகிறார்.
“பருவம் ஒரு சிறகுதான்
வானில்
பறக்க வழியில்லாதபோது
சிறகே ஒரு சுமைதான்”
என்று எழுதியுள்ளார் மு. மேத்தா.
சிறகு இருந்தால் பறக்க வேண்டும். பறக்க முடியாத போது? பயன்படாத எந்த ஒன்றையும் துõக்கிச் சுமப்பது சுமைதானே.
இதையே இமையில் கொண்டுபோய் வைக்கிறார் வைரமுத்து. இமை என்பது, கண்மூடி உறங்குவதற்கு. உறங்க முடியாதபோது இமையும் சுமைதானே. ‘சிறகே ஒரு சுமைதான்’ என்று மேத்தா சொன்னதை
“இமைகளும் சுமையடி இளமையிலே”
என்று அந்தி மழை பொழிகிறது பாடலில் எழுதுகிறார் வைரமுத்து.
(எடுத்தது வரும்)

Saturday, 29 November 2014

கண்ணனே! என் கள்வனே!!திருமேனி கரியமலை தித்திக்கும்
திருக்கண்ணும் கரமும் திருவடியும்


தினம் மலரும் செந்தாமரை! குழல்
கானம் இசைத்தென்னை கவர்ந்திழுத்த

கள்வனே! நப்பிண்ணை கேள்வனே!
கள்ளூறும் இதழ்சுவைக்கும் குழலாய்

திருச்சங்காய் பிறந்திலனே! உள்ளூறும்
காதலினால் மாலே மனம் இளைத்தேனே

வலியே வளர்ச்சி

நிறையன்றி வேறில்லை -2

தாயின் தாலாட்டைக் கேட்டு
இதயம் இன்பத்தில் மிதந்திருக்கும்.
இமைகள் இரண்டையும்
நித்திரை தழுவியிருக்கும் நிச்சயம்.

உறங்கவைத்த தாலாட்டு
உள்ளம் குளிர்வித்த மகிழ்ச்சி
நினைவுகளில் ஏனோ
நிலை கொள்ளவில்லை.
சிறுவயதில் கேட்டதால்
சிந்தையில் படியவில்லை.

ஓதற்கரியவனே...!
உலகம்இதுவென
உணரும் வயதினில்
ஊருக்கு வெளியே என்னை
தனியே விட்டுவிட்டாய்...
பாலுக்கு ஏங்கும் குழந்தையாய்...
கொழுவுக்கு ஏங்கும் கொடியாய்...
அன்புக்கு ஏங்கும் அனாதையாய்...

புத்தகம் சுமக்கும் வயதில்
புத்தகம் சுமந்தேன்- கூடவே
சோகத்தையும் அல்லவா
சுமக்கவிட்டாய்...

அன்பைச் சுவைத்து
ஆதரவைப் பெறும் வயதில்
அன்புக்கு ஏங்கித் தவிக்கும்
அவலம் கொடுத்தாய்.

அவலம் மட்டுமே என்
அடிமனதில் ஆழப் பதிந்தது.
அன்றாட வாழ்க்கையாயும்
ஆகிப் போனது ...

மறதியைக் கொடுத்திருந்தால்
மனதுக்கு நிம்மதி.
எல்லையற்ற நினைவாற்றலை
எனக்குக் கொடுத்தாய்.
எல்லாரும் வியக்கிறார்கள்.
என்னால் மட்டும் அதில்
லயிக்க முடியவில்லை.

மகிழ்ச்சி மட்டுமே என்
மனதில் நின்றிருந்தால்
மகிழ்ந்திருப்பேன் நானும்...
வலியும் சேர்ந்தே அல்லவா
வரிசை கட்டி நிற்கிறது.

வரிசையில் நிற்பவற்றை
வகைப்படுத்திப் பார்க்கிறேன்...
மகிழத் தக்கதைக் காட்டிலும்
மறக்கத் தக்கவைகளே
அதிகம் நிற்கின்றன...
ஆதிக்கம் செலுத்துகின்றன.

வசைபாடல்கள் மட்டுமே
வரிசை கட்டி நின்று
நினைவுகளில் எப்போதும்
நிலை பெற்றிருக்கின்றன.

வலியின் நடுவில்
வருகிறது ஒரு மகிழ்ச்சி
குளிர்விக்க வந்த
கோடை மழை போல...
வானத்து மின்னல் போல
வந்த வேகத்தில் மறைகிறது

வலி மட்டும் ஏனோ
வடுவாகத் தங்கிவிடுகிறது...
வடு மறைந்தாலும்
வாழ்நாள் முழுவதும்
வலி தொடர்கிறது.

வலியில்லாத வாழ்க்கையில்லை- அதற்கும்
வயது ஒன்று இருக்கிறதல்லவா?
உலகம் இதுவென உணரும் வயதில்
உலகமே எனக்கு வலியாகிப் போனதே...

வலியின் தவிப்பால் நான்
வழி தவறியதுண்டு...
ஆண்டு பலவாக சேர்த்த பெயரெல்லாம்
அடித்து நொறுக்கப்பட
அடித்தளம் போட்டதும் நானே ஆனேன்...

வண்டியை இயக்குவது என்னவோ
நான்தான்... ஆனால்
பின் இருக்கையில்
முதலாளியாய் அமர்ந்து
என்னை இயக்குவது நீதானே...
போகும்பாதை தவறென்றால்
யார் பொறுப்பு?

இயக்குவது நீ...
இழப்பு மட்டும் எனக்கு...
என்ன உன் திருவிளையாடல்...

தள்ளிவிடுகிறாய்...
ஆனாலும் தாங்கிப் பிடிக்கிறாய்.
அதுதான் உன்
தயாள குணம்...

விழ வைத்தாய்...
விழுந்தேன்...
விழுந்தாலும்...எழ வேண்டும் என்ற
வேகத்தைக் கொடுத்தாய்..
வீறுகொண்டுதான் எழுந்தேன்...

எழுந்தாலும் விழுந்தாலும்
என்றும் நிலைப்பது வலிதான்...
ஆனாலும்....
வலியைச் சுமந்தே
வாழப் பழகியதால்
வாழ்க்கை இதுவென்றுணர்ந்தேன்.

இறைவா...!
வலியைக் கொடுத்ததும் நீதான்...
வாழ்வைக் கொடுத்ததும் நீதான்...
வலியும் வாழ்வும் கலந்ததுதான்
வாழ்க்கை என்பதை உணரவைத்தாய்...
உள்ளம் தெளிய வைத்தாய்...

Tuesday, 25 November 2014

வலியும் வாழ்வும் ...

நிறையன்றி வேறில்லை -1

இறைவன் படைப்பில்
இரண்டும் உண்டு.
இரவு - பகல்
இருள்- வெளிச்சம்
இன்பம் - துன்பம்
இப்படி...

என் வாழ்க்கையும்
இதற்கு விதிவிலக்கல்ல...

நான் மகிழந்ததை...
உள்ளம் நெகிழ்ந்ததை..
நனவோடை நினைவுகள்
என்று எழுதினேன்.
என் மறு பக்கத்தை
மனம் திறக்கும் நூல் இது.

உன் வலியை
வார்த்தைகளாக்குவாய்
அதை நாங்கள்
வாசிக்க வேண்டுமா?
என்ற கேள்வி எழலாம்.

வார்த்தைகளாக
இந்நூலில் கிடப்பது
வலிகள் மட்டுமல்ல...
படைத்தவனுக்கும்
படைப்பாளிக்கும்
நடக்கும் உரிமைப் போராட்டம்.

இந்த நூலின் வரிகளை
வாசிக்கும்போது அதில்
உங்களை நீங்கள் பார்க்கலாம்...
இறுதியில் உங்கள்
இதயம் வருடப்படுவதை உணரலாம்.

வாசியுங்கள்...
நேசிப்பீர்கள்
என்னையும்
என் எழுத்தையும்.


கற்கண்டே.. தேனே...கற்கண்டே தேன்பாகே கலைத்தெழுதா
ஓவியமே உயிரே என் உணர்வே உன்

குறும்பாத நடையழகும் கொள்ளைச்
சிரிப்பழகும் சிறுகண்ணும் நான்பாட

சிறிதேனும் முடியுமோ சிறுதேர்
ஓட்டிவரும் பேரழகே பெருமையே

ஓருருண்டை வெண்ணைநான் தரவே
உனைப்பாடத் தந்திடுவாய் தமிழெனக்கே!!


கமலம்... பாதகமலம்...


கமலம்... கண்ணா உன் பாத
கமலம், காண மயங்கிடுதேயென்
இதயம், உன் விழியம்பு தந்திடும்
சுகதாகம், தாங்குமோ தளிர்மேனி
விரகம், வேண்டுமே இப்பிறவி நானும்
உனைச் சேர ஒரு தருணம்.

கண்ணன் அமுது


மாயப் பெருமானே மாலே
மரிகடலே வஞ்சப் பேயாள்

தூயக் குழவியாம் உனக்கு
நஞ்சுப் பாலூட்ட அமுதாய்

ஆயனே அமுது செய்தாய்
அழித்திட்டாய் அரக்கியை

தூயனே தாயோனே தண்
துழாய் மார்பனே போற்றி!!


தீ ராப் பசிதின்னக் கொடுத்தோம்
தீராப் பசிக்கு
ஆயினும்

தீய்க்கிறது
தீ
அத்தீ
ராத் தீ
அத்தீராத் தீ.

தமிழே! என் தாகமே!!


என்னுள் புரளும்
காவிரியே!

மலர்ந்து மணக்கும்
மனோரஞ்சிதமே!


அன்பில் ஆழப்பதிந்த
ஆலவிருட்சமே!

தண்ணென்ற ஓடையே
தமிழே! என் தாகமே!!

எடுத்தது எங்கே 2இலக்கிய விழா ஒன்றில் பேசிய தமிழறிஞர் ஒருவர், “பொன்மாலைப் பொழுது என்று எழுதிய வைரமுத்துவைப் பாரட்டுகிறேன். மாலைப் பொழுதின் மகத்துவத்தை ‘பொன்மாலை’ என்று சொல்லியிருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது... இரண்டாயிரம் ஆண்டு இலக்கியத்தில் இல்லாத ஒரு சொல்லாட்சி இது” என்று சொல்லி வைரமுத்துவைப் பாராட்டினார்.

அடுத்து பேசிய நான். “வைரமுத்துவைப் பாராட்டவேண்டும் என்று விரும்பினால், வேறு எதாவது ஒரு வரியைச் சொல்லி பாராட்டுங்கள். ‘பொன்மாலைப் பொழுது’ என்று சொல்வது புதிதல்ல.

“ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம்

கை மூடுதே வெட்கம்

பொன்மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்”

என்று வாலி ஏற்கனவே எழுதிவிட்டார் என்று சொன்னேன்.

வைரமுத்துவை கவிஞர் நா.காமராசன் ஒருமுறை மனம் திறந்து பாராட்டினார். விழா ஒன்றில் பேசிய நா.கா.,

“எனக்கு மட்டும் சொந்தம் -உன்

இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும்- எனது

உயிர் உருகும் சத்தம்”

என்ற வரிகளைத் தந்த வைரமுத்துவைப் பாராட்டுகிறேன் என்று மனம் திறந்து பாராட்டினார்.

முதன் முதலில் திரைப்பாடலுக்குப் பாட்டெழுத பாரதிராஜாவிடம் இருந்து வைரமுத்துவுக்கு அழைப்பு வந்தது. முதல் பிரசவத்துக்காக மனைவி பொன்மணியை யை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பாராதிராஜாவை பார்க்கச் சென்றார் வைரமுத்து. நிழல்கள் திரைப்படத்துக்காக இளையராஜாவின் இசைக்கு பாடல் எழுதினார்.

மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. “எனக்கும் முதல் பிரசவம் ஆயிற்று” என்று, திரைப்படத்துக்கு தான் முதல் பாடல் எழுதியதை மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார் வைரமுத்து. “அந்தப் பாடல் உன் பெயரில்தான் தொடங்குகிறது” என்றும் சொன்னார்.

பொன்மாலைப் பொழுது என்ற அந்தப் பாடலிலேயே, அவர் ரசித்துப் படித்த பாரதிதாசன் தெரிவார்.

ஆம்.

அழகின் சிரிப்பில் கடலைப் பற்றி வர்ணிப்பார் பாவேந்தர். அந்திக் கருக்கல் நெருங்கியது. கறுப்பாக காட்சியளித்த கடல், நிலவு தோன்றியதும், அதன் ஒளிபட்டு பொன்னிறமாக ஜொலித்தது. இதை,

“அதோ பார் கடல்மகள்

தன்னுடை களைந்து

பொன்னுடை பூண்டாள்

என்னென்று கேள்

நிலவுப் பெண் ஒளிகொட்டிற்று”

என்று எழுதுவார் பாவேந்தர்.

இந்த வரிகள் வைரமுத்து மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதே கருத்து அவருடைய முதல் பாடலிலேயே உருமாற்றம் பெற்றுள்ளது. ஆம். பாவேந்தர் சொன்னதையே எதிர்மறையாக சிந்தித்துள்ளார் வைரமுத்து. கடல் என்று சொன்னதை, வானம் என்று சொல்கிறார் வைரமுத்து.

“கடல்மகள் தன்னுடை களைந்து

பொன்னுடை பூண்டாள்”

என்பதைத்தான்

“வானமகள் நாணுகிறாள்

வேறு உடை பூணுகிறாள்”

என்று சொல்கிறார் வைரமுத்து.

(எடுத்தது வரும்)


எடுத்தது எங்கே 1படிப்பாளி ஆகாத எவர் ஒருவரும் படைப்பாளி ஆக முடியாது. அந்த வகையில் படைப்பாளிகள் படித்தவை பலவும் அவர்களின் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்தும் படிந்தும் கிடக்கின்றன. படைக்கின்றபோது அவை, சில நேரங்களில் அவனை அறிந்தும் பல நேரங்களில் அவனை அறியாமலும் அவனது படைப்புகளில் தலை காட்டும். பல இடங்களில் உருமாறியும் சில இடங்களில் உள்ளபடியும் இடம் பெறுவதைக் காணமுடியும்.

கருத்து ஒன்றானாலும் கவிஞன் தன்

கவித்துவத்தை அதில் காட்டியிருப்பான். சொல்வது அவன் ரசித்ததன் எச்சம் எனினும் அதில் அவனது கற்பனையின் உச்சம் இருக்கும். இலக்கியத்தை எளிமைப்படுத்தி, பாமரனுக்குப் புரியவைப்பதாகவும் இருக்கும். அந்த வகையில், கண்ணதாசனின் பல பாடல்களைக் கூறலாம். ஆனால், அந்தக் கருத்துக்கு அவர் என்றுமே உரிமை கொண்டாடியதில்லை. அடுத்தவன் பெற்ற பிள்ளையை தன் பிள்ளை என்று அவர் சொல்லிக்கொண்டதில்லை.

வியட்நாம் வீடு படத்தில் வரும் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்ற பாடலில் வரும் இந்த முதலடி,பாரதியார் பாடலில் இருந்து எடுத்தது. அடுத்து வரும் அற்புத வரிகள் அனைத்தும் கண்ணதாசன் எழுதியவை. பாடலை எழுதி முடித்த கண்ணதாசன், படத்தின் டைட்டிலில் பாடல் பாரதியார் என்று போடுங்கள் எனச் சொன்னாராம்.முதல் வரிதான் பாரதியார் எழுதியது என்றாலும், அடுத்து வந்த வைர வரிகளுக்கு வழி ஏற்படுத்தியது பாரதியாரின் வரிகள்தான். அந்த நன்றியை வெளிப்படுத்தத்தான், ‘பாடல் பாரதியார்’ என்று போடச் சொன்னார் கண்ணதாசன். இன்று எத்தனை பேருக்கு இந்த மனம் இருக்கிறது?

திரையுலகில் கண்ணதாசன் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், திரைப்பாடல் எழுதத் தொடங்கியவர் வைரமுத்து, கண்ணதாசன் மறைவு, வைரமுத்துவுக்கு வசதியான பாதையை போட்டுக்கொடுத்தது. பாரதிராஜாவும் இளையராஜாவும் பக்கத்துணையாக இருந்ததால், அவருக்கு வானமும் வசப்பட்டது.

பல ஆயிரம் பாடல்களை எழுதியுள்ள வைரமுத்துவின் பாடல்களிலும் அவர் ரசித்த, புசித்த பல வரிகள் வந்து தலை காட்டுவதைக் காணமுடியும்.

உருமாற்றம் என்பது தடுமாற்றம் அல்ல. உள்ளதை ஒப்புக்கொண்டுவிட்டால். ஒப்புக்கொள்ளாதபோதுதான், உருவல் என்று விமர்சிக்கப்படுகிறது. அந்த வகையில் வைரமுத்து ரசித்த பலவற்றை திரையுலகு புசிக்கக் கொடுத்தது பற்றி அலசுவதுதான் இந்த தொடர். ஒப்புநோக்கி ரசிப்பதுதான் இந்த தொடரின் நோக்கம். சொல்வதல்ல. தொடர்ந்து வரும் கருத்துகளை வாசியுங்கள். எழுத்தை நேசியுங்கள்.

எடுத்தது வரும்...

குறும்பு -4அதே விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி. அதே பேராசிரியர். என் குறும்புகளை சகிக்க முடியாத அவர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்னை மட்டம் தட்ட ஆரம்பித்தார். நானும் விடுவதில்லை. ஒரு நாள்,

“மாகவிஞன் கீட்ஸ் எது வரைக்கும் வாழ்ந்தான்?” என்று கேட்டார்.

நான் உடனே, ‘சாகுற வரைக்கும் வாழ்ந்தான்’ என்றேன்,

அவர், ‘பதில் தெரிஞ்சா சொல்லு. இல்லன்னா சுழியை அடக்கிகிட்டு சும்மா இரு’ என்றார்.
நான் சொன்னேன். ’எனக்கு பதில் தெரியும். நீங்க கேட்ட கேள்வி அப்படி. அதுக்கு ஏத்த மாதிரி பதில் சொன்னேன்’ என்றேன்.
‘என்ன கேட்டேன்?’ என்று கேட்டார்.
‘எத்தனை வருடம் வாழ்ந்தான் என்றோ, எத்தனை வயது வரை வாழ்ந்தான் என்றோ கேட்டிருந்தால் 30 ஆண்டுகள் வாழ்ந்தான் என சொல்லியிருப்பேன். எதுவரை வாழ்ந்தான்னு நீங்க கேட்டிங்க. சாகுற்வைக்கும்தானே ஒருத்தன் வாழ முடியும். அதனால அப்படி சொன்னேன். இனிமேல் கேள்வியை சரியா கேளுங்க’ என்றேன்.
பாவம் அவர் இப்ப நினைச்சா எனக்கே வருத்தமாதான் இருக்கு

எரிகிறது ...


எரிகிறது ஒரு தீ

நிலவாக அல்ல..

நிலவைத் தொடுகின்ற

நீள் இரவாக..

குறும்பு-3விருத்தாசலம் அரசு கலைகல்லூரியில் நான் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தபோது மருதூர் இளங்கண்ணன் என்றொரு பேராசிரியர் இருந்தார். ஆழ்ந்த புலமை மிக்கவர். பாடல் எழுதி சங்க இலக்க்கியத்தில் கலந்துவிட்டால், வேறுபாடு காண முடியாது. அப்படி எழுதுவார். அவருடைய உரைநடையை புரிந்துகொள்ளவே சிரமப்படணும். கொஞ்சம் பழமை வாதி. படித்து முடித்து 20ஆண்டுகளுக்குப் பிறகும் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளேன். அக்கரையோடு விசாரிப்பார். ஆனால், படிக்குபோது அவருக்கும் எனக்கும் ஒத்துப் போகாது.
அவர் எங்களுக்கு நடத்திய பாடம் சிலப்பதிகாரம் . ஒரு நாள் வகுப்புக்கு வந்தார்,
‘போன வகுப்புல கடைசியா என்ன சொன்னேன்?’ என்று கேட்டார்.

‘அடுத்த வகுப்புல பார்க்கலாம்னு சொன்னிங்க’ என்றேன்.

வந்ததே கோபம் அவருக்கு, வழக்கமாக என்னப் பார்த்து அவர் சொல்லும் வாழ்த்துச் சொல்லை சொன்னார். அட அதாங்க....

‘நீ உருப்படவே மாட்ட...


புதுக்கவிதை

நீ என்றால்
நீ

நான் எனில்
நான்

நாம் எனச் சொன்னால்
இருவர்

இருவரும்
ஒருவர் என்று சொல்ல

ஒரு சொல் இல்லையே.

உன் சுவாசம்

என்னுள் உள்வாங்கிய
உன் சுவாசம்
என்
ஒவ்வொரு
நொடியையும்
உயிர்ப்பிக்கிறதடி

நட்பென்றால்...


குற்றம் புரியினும்
கோபம் கொள்ளினும்
குணத்தை இகழாது...

உயர்ந்தால் மகிழும்
தளர்ந்தால் தட்டிக் கொடுக்கும்...

வேண்டும்போது விட்டுக் கொடுக்கும்
வேண்டாதபோதும் கட்டிக் கொள்ளும்

எழுந்தால் மகிழும்
விழுந்தால் தாங்கும்

சிரித்தால் சிரிக்கும்
அழுதால்....
கண் துடைக்கும்

அதுதான் நட்பு...
இல்லையேல் வெறும் நடிப்பு

புதுக்கவிதை

விளம்பரத்துக்குதான்
வெளிச்சம் வேண்டும்.
வெளிச்சத்துக்கு
விளம்பரம் தேவை இல்லை.

நான் எழுதிய ‘நனவோடை நினைவுகள்’ நூலில் இருந்து


திராவிட இயக்கம் தோன்றிய காலத்தில், அந்த இயக்கத்தைச் சேர்ந்த பலரும் நல்ல தமிழ்ப் பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று, தங்கள் பெயரை மாற்றிக் கொண்டனர். அன்பழகன், அறிவழகன், மதியழகன் என பலர் பெயர் வைத்துக்கொண்டனர்.

இதுபற்றி கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன், ’அன்பழகன்றான்... அறிவழகன்றான்...போற போக்கைப் பார்த்தா மயிரழகன்னு பேர் வச்சுப்பானோ போலிருக்கே’ என்று கிண்டலடித்தார்.

இதற்கு பதில் சொன்ன அண்ணா, ‘எங்கள் பெயர் அப்படியில்லை. உங்களுடைய பெயர்தான் அப்படி இருக்கிறது. உங்கள் பெயரின் பொருள் என்ன என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்..உங்களுக்குப் புரியும்’ என்றார்.

அளகம்+ஈசன், என்பதுதான் அளகேசன். ஆனது. அளகம் என்றால் தலைமுடி.சடாமுடியை உடையவன் ஈசன். சடாமுடிக்கடவுள் என்பதைத்தான் அளகேசன் என்று அழைக்கிறார்கள். இப்போது பலர் ‘அழகேசன்’ என எழுதுகின்றனர். ஒருவிதத்தில் இது தவறில்லை. அழகிய ஈசன் என பொருள் படும். ஆனலும் அளகேசன் என்பதுதான் அழகேசன் ஆகிவிட்டது.
---- நான் எழுதிய ‘நனவோடை நினைவுகள்’ நூலில் இருந்து...


கவிதை

உன் மோனப் புன்னகையின்
மொழி எனக்குப் புரிகிறது...
இந்த ஆண்டு
உன் வீட்டிலும்
என் வீட்டிலும் தீபாவளி...

அடுத்த ஆண்டு
நம் வீட்டில் அல்லவா தீபாவளி...

வார்த்தைப் பூ

அமைதியான குளத்தில்
வட்டம் வட்டமாய் அலைகள்...
வார்த்தைப் பூ

குறும்பு-2

தமிழ் இலக்கியத்தின் பா வகைகளில் நீரோட்ட யமக அந்தாதி’ என்றொரு வகை உண்டு. இதன் சிறப்பு என்னவென்றால், இந்தப் பாடலை பாடும்போது உதடுகள் ஒட்டவே ஒட்டாது. அப்படி, உதடுகள் ஒட்டாமல் உச்சரிக்க கூடிய சொற்களை வைத்தே பாடல் புனைவார்கள். இது மிகவும் சிரமம்.
நான் பி.ஏ. படிக்கும் போது நீரோட்ட யமக அந்தாதி பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் ஆசிரியர்(அந்தாதி பற்றி சொன்ன அதே ஆசிரியர்தான்)அப்போது நான், ‘இதுபோல உதடு ஒட்டாமல் பாடக்கூடிய குறள் ஒன்றும் இருக்கிறது ஐயா என்றேன். உற்சாகமான அவர், ;அப்படியா? எந்தக் குறள் சொல்லு” என்றார்.

‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்’

என்ற குறளைச் சொல்லி இதுதான் அந்தக் குறள் என்றேன்.(குறளை சொல்லிப் பாருங்கள் உதடுகள் ஒட்டாது) ‘சபாஷ். எனக்கே இப்பதான் தெரியுது” என்று பாராட்டினார் ஆசிரியர்.
தொடர்ந்து நான், ‘இந்தக் குறளில் இன்னொரு சிறப்பும் உண்டு ஐயா’ என்றேன். ‘அப்படியா? என்ன சொல்’ என்றார்.

இந்தக் குறளின் பொருள், ‘எதை எதையெல்லாம் விட்டு விலகுகிறோமோ அதிலிருந்து பெறும் துன்பத்தில் இருந்து விடுபடுகிறோம்’ என்பதுதான். இந்தக் குறளைச் சொல்லும்போது இதழ்கள் (உதடுகள்) ஒட்டுவதில்லை. எனவே இந்தக் குறளைச் சொல்லும் போது இதழோடு இதழ் சேரும் துன்பத்தில் இருந்து விடுபடுகிறோம்’ என்று சொன்னேன். இதற்கும் அவர் கொடுத்த பரிசு..

‘நீ உருப்படவே மாட்ட’ என்பதுதான்

கலைஞரின் தமிழ் விளையாடல்


கவிக்கோ அப்துல் ரகுமான் என்றால் கலைஞருக்கு மிகவும் பிடிக்கும். ஒருமுறை ஒரு கவியரங்கில்,

’’வெகுமானம் எது வேண்டும் எனக்கேட்டால்
ரகுமானைக் கொடு என்பேன்’’

என்றார் கலைஞர். அப்படிப்பட்ட அப்துல் ரகுமானின் மணிவிழா நிகழ்ச்சியில் கலைஞ்ரும் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேராசிரியர் மா. நன்னன் பேசுகையில், ‘மேடையில் தயக்கம் இல்லாமல் பேசவேண்டும் என்றால், முன்னால் இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என நினைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். மேடையில் இருந்த கலைஞர் உடனே
‘’ நல்ல வேளை நாமெல்லாம் பின்னல்தான் உட்கார்ந்திருக்கோம்’
என்றாரே பார்க்கலாம். மேடையில் இருந்த அத்தனை பேருக்கும் சிரிப்பு.

உள்ளக்கதவு

நான் மெல்லத் தட்டியது
உன்
மெல்லிய இதயத்தைத்தான்
உடைபடுவது என்னவோ
என்
உள்ளக்கதவு

புன்னகைப் பூ

நீரின் வாசம்
நிச்சயம் தொலையாது
உலகுள்ளவரை...
உயிருள்ளவரை...
பூத்துச் சிரிப்பாய்
ஒருநாள்
புன்னகையால் எனை வரவேற்க

தவிக்கும் மனம்

கேள்வியும் நீ
பதிலும் நீ
கிடந்து
தவிப்பதென்னவோ...

வார்த்தைப் பூ

சலனமற்ற
மனக்குளத்தில்
வட்டம் வட்டமாய்
அலைகள்
வார்த்தைப் பூ ஒன்றால்

புதுக்கவிதை

புன்னகைக்குள்
புதைத்து வைத்திருக்கிறாய்
ஆயிரம் அர்த்தங்களை
உதடு பிரிக்காமல்
ஒரு வார்த்தை சொல் போதும்
உடைந்த இதயமும்
உயிர் பெற்று
உயரப் பறக்கும்

நினைவுகளின் ஆழத்தில்

கார் முகில் கூட
கைக்கெட்டும் தூரத்தில்
என்
நெஞ்சம் மட்டும்
நெடுந்தூரத்தில்
உன்
நினைவுகளின் ஆழத்தில்

தீஞ்சுவைத் தமிழே!!

திருவரங்கம் ஆனேன்
தேனே நீ காவிரியாய்
தினம் எனைச் சூழ்வதாலே...

திருமலையாய்
திமிராக நின்றேன்
திரவியமே நீ எனக்குத்
தேடக் கிடைத்ததாலே....

திருவல்லிக்கேணியானேன்
தீஞ்சுனை நீராக நீ
தினம் என்னில் உறைவதாலே..

சுடர்மாலும் ஆனேனே
சூடிக்கொடுத்த
சுடர்க்கொடியாய்
சுந்தரத் தமிழ் நீ ஆனதாலே!!

பார்வை பரிசத்தால்

மனம் முழுக்க
மவுனம் என்கிறேன்.

இட்டு நிரப்புகிறாய்
அன்பின் அடைமொழிகளை...
உன்
பார்வை பரிசத்தால்

தமிழ் விளையாட்டு -1ஒருவரை கீழே போடுவது எனபதை விடவும் 
உயரத்துக்கு கொண்டு போய் கீழே போட்டால் 
எப்படி இருக்கும். ராஜாஜியை அண்ணா
 ஒருமுறை அப்படித்தான் செய்தார்.

முதல்வராக ராஜாஜி இருந்தபோது 
குலக்கல்வித்திட்டத்தை கொண்டுவந்தார். 
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 
அப்போது ராஜாஜி பற்றி அண்ணா சொன்னது....

’’ராஜாஜிக்கு
உடம்பெல்லாம் மூளை.
மூளையெல்லாம் சிந்தனை
சிந்தனையெல்லாம்
வஞ்சனை’’

எவ்வளவு உயரத்துக்கு கொண்டு போய் 
கீழே போட்டிருக்கார் பாருங்க, யப்பா,

Monday, 24 November 2014

குறும்பு-1

நான் பி. ஏ. தமிழ் இலக்கியம் படித்த போது, எங்கள் வகுப்பில் மொத்தமே 9 பேர்தான். அதனால், ஆங்கிலம், தமிழ் வகுப்புகள் எங்களுக்கென்று தனியாக நடக்காது. பி.எஸ்சி. பிசிக்ஸ் மாணவர்களுடன் சேர்த்துவிட்டுவிடுவார்கள்.

ஒரு நாள் அவர்களுக்கு லேப் என்பதால் தமிழ் வகுப்புக்கு வரவில்லை அவர்கள். என்னை எப்போது வாழ்த்தும் பேராசிரியரின் வகுப்பு. நாங்கள் மட்டும் வகுப்புக்கு போனோம். கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம், பேராசிரியர் வந்தார். ;ஏன் கடைசி பெஞ்ச்ல உட்கார்ந்திருக்கிங்க? எல்லாரும் முன்னுக்கு வாங்க’ என்றார்.

எல்லாரும் முதல் பெஞ்சில் போய் உட்கார்ந்தாங்க. நான் மட்டும் மூணாவது பெஞ்சில் உட்கார்ந்தேன். பேராசிரியர், மட்டம்தட்ட வாய்ப்புகிடைத்ததே என்று.’என்னைப் பார்த்து, ‘உனக்கு மட்டும் முன்னுக்கு வருவதே பிடிக்காதே’ என்றார்.
நான் எழுந்து, ‘படிப்படியா முன்னுக்கு வரனுங்க ஐயா..அதுதான் நிலைக்கும்’ என்றேன்.

கடுப்பாகிப் போன அவர், ‘சரி..சரி..நீ அறிவாளிதான். உட்கார்’ என்றார். நான் உடகாராமல், ‘அதை நீங்க சொல்லக் கூடாது” என்றேன்.
‘வேற யார் சொல்லணும்?’ என்று கேட்டார்.
‘இன்னொரு அறிவாளிதான் சொல்லணும்” என்றேன்.

அவருக்கு வந்த கோபத்தில் வகுப்பை கேன்சல் செய்துவிட்டு போய்விட்டார். மாணவர்களுக்கு மகிழ்ச்சி. இப்ப நினைத்தால் எனக்கே மனசு கஷ்டமாத்தான் இருக்கு. மானசீகமாக அவரிடம் நான் கேட்கும் மன்னிப்புதான் இந்தப் பதிவு.

தமிழே! என் தவிப்பே!

உழுத வயல் காயாது
எழுந்து பாயும்
காவிரியே!

அழுத மழலை
அணைத்தெடுத்து
அமுதூட்டும் தாயே!

எழுத வரும் கவிதையே!
எதுகையே! மோனையே!
தமிழே! என் தவிப்பே!