Sunday 30 November 2014

எடுத்தது எங்கே -3


ராஜபார்வை படத்தில் வைரமுத்து எழுதிய அந்திமழை பொழிகிறது பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அதே நேரத்தில், அதிக விமர்சனத்துக்கும் ஆளானது.
“இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே”
என்று எழுதியிருந்தார் வைரமுத்து.
அது என்ன இந்திரன் தோட்டத்து முந்திரி? என்று கேட்டார்கள். “ஆண்மையை அதிகரிக்கும் சக்தி முந்திரிக்கு உண்டு. இந்திரன் அதிக ஆண்மை உள்ளவன். அதனால் அவன் தோட்டத்து முந்திரிக்கு அதிகமான ஆண்மை சக்தி இருக்கும் என்ற பொருள்பட எழுதினேன்” என்று ஒரு விளக்கம் அளித்தார் வைரமுத்து. முந்திரிக்கு எப்படியோ ஒரு விளக்கம் கொடுத்துவிட்டார்.
சரி; அது என்ன மன்மத நாட்டுக்கு மந்திரியே .. . மன்மத தேசம் என்பது அவன் மட்டுமே ஆளக்கூடியது. அதில் யாரும் மந்திரி வைத்துக்கொள்ளமாட்டார்கள். ஏதோ முந்திரியே மந்திரியே என்று இயைபுக்காக எழுதிவிட்டார் வைரமுத்து.
இப்படி இயைபுக்காக அவர் அடிக்கடி இடறி விழுவதுண்டு.
இளமைக்காலங்கள் படத்தில் ‘ஈரமான ரோசாவே என்னைப் பார்த்து ஏங்காதே’ பாடலில்
“தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து”
என்று எழுதியிருக்கிறார். இந்த இரண்டு அடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
“சாத்துக்குடி துõத்துக்குடி
என்ன நீயும் ஏத்துகடி”
என்ற பாடலைப் போன்றதுதான் இது.
“தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
எந்நாளும் மாறாது நான் கொண்ட அன்பு”
என்று எழுதியிருந்தாலும் ஓர் அர்த்தம் இருந்திருக்கும். பாவம் அவருக்கு ஏனோ அப்படி தோன்றவில்லை. முதல் அடி ‘பந்து’ என்று முடிந்ததால் அடுத்த அடி ‘சிந்து’ என்று முடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி எழுதியுள்ளார்.
சரி; ராஜ பார்வை பாடலுக்கு வருகிறேன்.
“தொட்டியில் நீர் கொதிக்குதடி- நீ
தொட்ட இடம் மட்டும் சில்லென்றிருக்குதடி”
என்று எழுதுவார் பாரதிதாசன்.
இதையே எதிர்மறையாக சிந்தித்து,
அந்தி மழை பொழிகிறது பாடலில் பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து.
தண்ணீ ர் கொதிக்கிறது. அவள் உடல் சில்லென்று இருக்கிறது. அதாவது கொதிக்கின்ற நீரில் கூட அவள் தொட்ட இடம் சில்லென்று ஆகிற அளவுக்கு அவள் குளிர்ச்சியாக இருக்கிறாள் என்று பாவேந்தர் எழுதியதை, அப்படியே திருப்பிப் போடுகிறார் வைரமுத்து.
“தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது”
என்று எழுதுகிறார்.
பாவேந்தர் பாடலில் நீர் கொதிக்கிறது.<உடல் சில்லென்று இருக்கிறது. வைரமுத்து அதை, தண்ணீர் சில்லென்று இருக்கிறது. அதில் நிற்கும்போதும் வியர்க்கும் அளவுக்கு அவன் உடல் கொதிக்கின்றது என்று எழுதுகிறார்.
“பருவம் ஒரு சிறகுதான்
வானில்
பறக்க வழியில்லாதபோது
சிறகே ஒரு சுமைதான்”
என்று எழுதியுள்ளார் மு. மேத்தா.
சிறகு இருந்தால் பறக்க வேண்டும். பறக்க முடியாத போது? பயன்படாத எந்த ஒன்றையும் துõக்கிச் சுமப்பது சுமைதானே.
இதையே இமையில் கொண்டுபோய் வைக்கிறார் வைரமுத்து. இமை என்பது, கண்மூடி உறங்குவதற்கு. உறங்க முடியாதபோது இமையும் சுமைதானே. ‘சிறகே ஒரு சுமைதான்’ என்று மேத்தா சொன்னதை
“இமைகளும் சுமையடி இளமையிலே”
என்று அந்தி மழை பொழிகிறது பாடலில் எழுதுகிறார் வைரமுத்து.
(எடுத்தது வரும்)

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_