Saturday 29 November 2014

வலியே வளர்ச்சி

நிறையன்றி வேறில்லை -2

தாயின் தாலாட்டைக் கேட்டு
இதயம் இன்பத்தில் மிதந்திருக்கும்.
இமைகள் இரண்டையும்
நித்திரை தழுவியிருக்கும் நிச்சயம்.

உறங்கவைத்த தாலாட்டு
உள்ளம் குளிர்வித்த மகிழ்ச்சி
நினைவுகளில் ஏனோ
நிலை கொள்ளவில்லை.
சிறுவயதில் கேட்டதால்
சிந்தையில் படியவில்லை.

ஓதற்கரியவனே...!
உலகம்இதுவென
உணரும் வயதினில்
ஊருக்கு வெளியே என்னை
தனியே விட்டுவிட்டாய்...
பாலுக்கு ஏங்கும் குழந்தையாய்...
கொழுவுக்கு ஏங்கும் கொடியாய்...
அன்புக்கு ஏங்கும் அனாதையாய்...

புத்தகம் சுமக்கும் வயதில்
புத்தகம் சுமந்தேன்- கூடவே
சோகத்தையும் அல்லவா
சுமக்கவிட்டாய்...

அன்பைச் சுவைத்து
ஆதரவைப் பெறும் வயதில்
அன்புக்கு ஏங்கித் தவிக்கும்
அவலம் கொடுத்தாய்.

அவலம் மட்டுமே என்
அடிமனதில் ஆழப் பதிந்தது.
அன்றாட வாழ்க்கையாயும்
ஆகிப் போனது ...

மறதியைக் கொடுத்திருந்தால்
மனதுக்கு நிம்மதி.
எல்லையற்ற நினைவாற்றலை
எனக்குக் கொடுத்தாய்.
எல்லாரும் வியக்கிறார்கள்.
என்னால் மட்டும் அதில்
லயிக்க முடியவில்லை.

மகிழ்ச்சி மட்டுமே என்
மனதில் நின்றிருந்தால்
மகிழ்ந்திருப்பேன் நானும்...
வலியும் சேர்ந்தே அல்லவா
வரிசை கட்டி நிற்கிறது.

வரிசையில் நிற்பவற்றை
வகைப்படுத்திப் பார்க்கிறேன்...
மகிழத் தக்கதைக் காட்டிலும்
மறக்கத் தக்கவைகளே
அதிகம் நிற்கின்றன...
ஆதிக்கம் செலுத்துகின்றன.

வசைபாடல்கள் மட்டுமே
வரிசை கட்டி நின்று
நினைவுகளில் எப்போதும்
நிலை பெற்றிருக்கின்றன.

வலியின் நடுவில்
வருகிறது ஒரு மகிழ்ச்சி
குளிர்விக்க வந்த
கோடை மழை போல...
வானத்து மின்னல் போல
வந்த வேகத்தில் மறைகிறது

வலி மட்டும் ஏனோ
வடுவாகத் தங்கிவிடுகிறது...
வடு மறைந்தாலும்
வாழ்நாள் முழுவதும்
வலி தொடர்கிறது.

வலியில்லாத வாழ்க்கையில்லை- அதற்கும்
வயது ஒன்று இருக்கிறதல்லவா?
உலகம் இதுவென உணரும் வயதில்
உலகமே எனக்கு வலியாகிப் போனதே...

வலியின் தவிப்பால் நான்
வழி தவறியதுண்டு...
ஆண்டு பலவாக சேர்த்த பெயரெல்லாம்
அடித்து நொறுக்கப்பட
அடித்தளம் போட்டதும் நானே ஆனேன்...

வண்டியை இயக்குவது என்னவோ
நான்தான்... ஆனால்
பின் இருக்கையில்
முதலாளியாய் அமர்ந்து
என்னை இயக்குவது நீதானே...
போகும்பாதை தவறென்றால்
யார் பொறுப்பு?

இயக்குவது நீ...
இழப்பு மட்டும் எனக்கு...
என்ன உன் திருவிளையாடல்...

தள்ளிவிடுகிறாய்...
ஆனாலும் தாங்கிப் பிடிக்கிறாய்.
அதுதான் உன்
தயாள குணம்...

விழ வைத்தாய்...
விழுந்தேன்...
விழுந்தாலும்...எழ வேண்டும் என்ற
வேகத்தைக் கொடுத்தாய்..
வீறுகொண்டுதான் எழுந்தேன்...

எழுந்தாலும் விழுந்தாலும்
என்றும் நிலைப்பது வலிதான்...
ஆனாலும்....
வலியைச் சுமந்தே
வாழப் பழகியதால்
வாழ்க்கை இதுவென்றுணர்ந்தேன்.

இறைவா...!
வலியைக் கொடுத்ததும் நீதான்...
வாழ்வைக் கொடுத்ததும் நீதான்...
வலியும் வாழ்வும் கலந்ததுதான்
வாழ்க்கை என்பதை உணரவைத்தாய்...
உள்ளம் தெளிய வைத்தாய்...

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_