Tuesday 25 November 2014

நான் எழுதிய ‘நனவோடை நினைவுகள்’ நூலில் இருந்து


திராவிட இயக்கம் தோன்றிய காலத்தில், அந்த இயக்கத்தைச் சேர்ந்த பலரும் நல்ல தமிழ்ப் பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று, தங்கள் பெயரை மாற்றிக் கொண்டனர். அன்பழகன், அறிவழகன், மதியழகன் என பலர் பெயர் வைத்துக்கொண்டனர்.

இதுபற்றி கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன், ’அன்பழகன்றான்... அறிவழகன்றான்...போற போக்கைப் பார்த்தா மயிரழகன்னு பேர் வச்சுப்பானோ போலிருக்கே’ என்று கிண்டலடித்தார்.

இதற்கு பதில் சொன்ன அண்ணா, ‘எங்கள் பெயர் அப்படியில்லை. உங்களுடைய பெயர்தான் அப்படி இருக்கிறது. உங்கள் பெயரின் பொருள் என்ன என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்..உங்களுக்குப் புரியும்’ என்றார்.

அளகம்+ஈசன், என்பதுதான் அளகேசன். ஆனது. அளகம் என்றால் தலைமுடி.சடாமுடியை உடையவன் ஈசன். சடாமுடிக்கடவுள் என்பதைத்தான் அளகேசன் என்று அழைக்கிறார்கள். இப்போது பலர் ‘அழகேசன்’ என எழுதுகின்றனர். ஒருவிதத்தில் இது தவறில்லை. அழகிய ஈசன் என பொருள் படும். ஆனலும் அளகேசன் என்பதுதான் அழகேசன் ஆகிவிட்டது.
---- நான் எழுதிய ‘நனவோடை நினைவுகள்’ நூலில் இருந்து...


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_