Friday, 16 January 2015

வாழ்த்துங்கள்...வளம் பெறட்டும்மதச்சார்பற்று கடவுளைப் ப்பாடியவர்
மனம் சர்புடைய காதலையும் பாடினார்.

துறவின் தூய்மையைச் சொன்னவர்
இல்லற உறவின் இன்பத்தையும் சொன்னார்.

மன்னனின் நெறியை உரைத்தவர்
மக்களின் பணியையும் உரைத்தார்.

அறிவின் ஆற்றலை எழுதியவர் - காதலில்
பிரிவின் தூற்றலையும் எழுதினார்.

பெண்ணின் அழகை வர்ணித்தவர்
பெருங்குண பெருமையையும் வர்ணித்தார்.

ஊடல் வகை நமக்குஉணர்த்தியவர்
கூடலிலும் நம்மை கொள்ளை கொண்டார்.

அறத்தின் திறம் எடுத்துரைத்தவர்
மறத்தின் மாண்பையும் உரைத்தார்.

எக்காலத்துக்கும்
முக்காலத்துக்கும்
முப்பாலில் கருத்துகளை
அதிகாரமாய்
அழகாய்
ஆணித்தரமாய்
அருளிச் சென்றவர்
ஐயன் திருவள்ளூவர்.

ஐயனின் குறளை
அனைவரும் அறிய
அழகாய் புரிய
கனித் தமிழில்
கவிநடையில்
எழுத எனக்கு அருளினாள்
என் தமிழன்னை.

ஆயிரத்து முன்னூற்று முப்பது...
அன்னாந்து பார்க்க வைக்கிறது..

ஐயன் சொல்லும் பொருள் மாறாமல்
அவன் உணர்த்தும் சுவை குறையாமல்
அத்தனையும் வரவேண்டும்
அடிகள் சிலவற்றுள்....

அன்னை அருளால்
அடியெடுத்து வைத்தேன்....
இருநூறு படிகள் ஏறிவிட்டேன்
இன்னும் இருக்கிறது
ஈரைநூறுக்குமேல்....

ஐய்யன் வள்ளுவரும்
அன்னை தமிழ்த்தாயும்
அருள் புரிந்து துணை நிற்க....
அகரம் தொடங்கியவன்
சிகரம் தொடுவேன்.......

இருக்கின்ற தலைமுறைக்கும் - வர
இருக்கின்ற தலைமுறைக்கும்
இனிதாய் எளிதாய் தருவேன்
வள்ளுவன் வழங்கிய குறளை.

வாழ்த்துங்கள் நட்புகளே....
வருங்காலம் வளம் பெறட்டும்.


Thursday, 15 January 2015

தமிழர் திருநாள் வாழ்த்துகள்மாடுகட்டி போரடித்தால்
மாளாது செந்நெல் என
ஆனை கட்டி போரடித்த
அழகான தமிழ் நிலத்தில்
பொங்கி வரும் புதுப் புனலாய்..- மணம்
தங்கி வரும் புதுமலராய்..வரம்
வாங்கி வரும் வசந்தமாய்
பொங்கட்டும் இன்பம் - என்றும்
தங்கட்டும் வளமெலாம்
நலம் சேர்ந்து வளம் சூழ
பொங்கட்டும் மகிழ்ச்சியென
வாழ்த்துகிறேன் பொங்கல் திருநாளில்...

தாய்மொழியாம் தமிழ் போல் வாழ்க வாழ்க...

நட்புகள் அனைவருக்கும் என்
இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்..
பொங்குக பொங்கல்...
பொங்குக மகிழ்ச்சி
தமிழர் திருநாள் வாழ்த்துகள்..

Wednesday, 14 January 2015

அழியாத் தடங்களாய்

அன்றாடம்
நடந்தவளின்
காலடிச் சுவடுகள்....

அழியாத் தடங்களாய்
ஆழ்மனத்தில்....

ஏதுமற்றவனாகவே..ஏதுமற்றவனாகவே
இருக்கிறேன்....

என்
எண்ணத்தைக்கூட
உனதாக்கிவிட்டு...
ஏதுமற்றவனாகவே..

Sunday, 11 January 2015

உயிர் கலந்த தமிழேஎனை இயக்கும் எரிபொருளே! என்றும்
ஏற்றம் தரும்என் வாழ்வே! எந்நாளும்
மாற்றமிலா இளமையே! என்உயிரே
மெய்யே! உயிர்மெய்யாய் என்னின்
உயிர் கலந்த தமிழே! உனையன்றி
உண்டோ ஒரு வாழ்வு எந்தனுக்கே.

தமிழ் விளையாட்டு -20திரு எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, திரு அவ்வை நடராசன் அவர்கள், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக இருந்தார்.
ஒரு கடிதத்ததில்,, “காரோட்டி” என்று அவ்வை எழுதியிருந்ததைப் படித்த எம்ஜிஆர் அவர்கள், அவ்வையைப் பார்த்து, “அது என்ன காரோட்டி? கா...ரோட்டி? கார் ஓட்டி என்றுதானே எழுத வேண்டும்?” என்று கேட்டார்.

அவ்வை உடனே சிரித்துக்கொண்டே, “ எனக்கென்னங்க தெரியும்? படகோட்டிதான் தெரியும் எனக்கு” என்றார். இதைக் கேட்ட எம்ஜிஆர் அவர்கள், “ஆஹா....தமிழே... தமிழே...” என்று சொல்லி அவ்வையை அணைத்துக்கொண்டார்.
எம்ஜிஆர் நடித்த படம் படகோட்டி. அதற்கு “படகு ஓட்டி” என்று பெயர் வைக்கவில்லை. “படகோட்டி” என்றுதான் பெயர் வைத்தார்கள். அவர் நடித்த படத்தின் பெயரையே சொல்லி பதில் அளித்த அவ்வையின் திறமையை மிகவும் ரசித்தார் எம்ஜிஆர்.

தமிழ் விளையாட்டு -19ஒரு விழாவில் பேசிய தமிழறிஞர் திரு அவ்வை நடராசன் அவர்கள், “மின்னலைப் போல் ஒரு பெண் வந்தாள்” என்றார்.
அருகில் இருந்த கவிஞர் திரு நா. காமராசன் அவர்கள், “இந்த வயதில் இப்படி ஒரு வர்ணனை உங்களுக்குத் தேவையா?” என்று கேட்டார்.

அவ்வை உடனே, “ வந்தாள்...வந்த வேகத்தில் போய்விட்டாள். அதைத்தான், மின்னலைப் போல் வந்தாள் என்றேன்” என்றார்.

அடடா..அவ்வை என்றாலே தமிழல்லவா? சுவைக்கு கேட்கவா வேண்டும்?

தமிழ் விளையாட்டு -18வயதான புலவர் ஒருவர் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருந்தார். அவரால் பால்கூட குடிக்க முடியவில்லை.அவருடைய மகள், ஒரு துணியை பாலில் நனைத்து, அதைப் பிழிந்து அவர் வாயில் பாலை விட்டாள். அந்தத் துணி அழுக்காக இருந்தது. அதை சகிக்க முடியாத புலவர், முகம் சுளித்தார்.

“ஏன் அப்பா....பால் கசக்கிறதா?” என்று கேட்டாள் மகள்.
அதற்கு புலவர் சொன்ன பதில்....

“பாலும் கசக்கவில்லை. துணியும் கசக்கவில்லை”
=============================================

அடடா..தமிழ்ச் சுவையே சுவை..

Wednesday, 7 January 2015

தமிழ் விளையாட்டு -17சிலரின் இயல்பை மாற்றவே முடியாது. எதை எழுதினாலும் ஏதாவது ஒரு கருத்தில் வந்து நிற்பார்கள். அந்த குறிப்பிட்ட கருத்து இல்லாமல் அவர்களால் எழுதவோ பேசவோ முடியாது. இயல்பாகவே அவர்கள் மனதில் உள்ள கருத்து வந்து விழுந்துவிடும்.
கண்ணதாசனும் அப்படித்தான். கவியரசரிடம் ஒருமுறை, கவிதை கேட்டார்கள். கவிதையில் பாலியல் தொடர்பான் கருத்து வரக் கூடாது என்பதற்காகவே ‘மறுமலர்ச்சி’ என்று தலைப்பு கொடுத்து எழுதச் சொன்னார்கள். எது எதெல்லாம் எது எதற்கு மறு மலர்ச்சி என்று சொல்லிக் கொண்டே வந்த கவியரசர்,

“பூப்பெய்தும் காலம்தான்
பெண்ணுக்கு மறுமலர்ச்சி”

என்று கவிதையை முடித்தார்.

‘ஒருகையில் மதுவும்
மறுகையில் மங்கையும்
சேர்ந்திருக்கும் வேளையில்
என்னுயிர் பிரிந்தால்தான்
என்வாழ்க்கை நிஜமாகும்.
இல்லையேல்
ஏனடா பிறந்தாய் என்று
எமன் எனைப் பார்த்துச் சிரிப்பான்”

என்று எழுதியவரல்லவா கவியரசர். அவர்கிட்டேவா?

தமிழ் விளையாட்டு-16கவியரசர் கண்ணதாசன் ஒருநாள், திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் போன் செய்து குரலை மாற்றிப் பேசி ஒரு தகவல் சொன்னார். போனில் அவர் சொன்ன தகவல் என்ன தெரியுமா?

‘கண்ணதாசன் இறந்துவிட்டார்’

என்பதுதான். பல சினிமா பிரபலங்களும் அலறியடித்துக் கொண்டு கண்ணதாசன் வீட்டுக்குச் சென்றனர். அவர் அங்கே நாற்காலியில் ஜாலியாக உட்கார்ந்திருந்தார். சென்றவர்கள் ஒன்றும் கேட்க முடியாமல், சும்மா பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கண்ணtதாசன் சொன்னார்,

‘கண்ணதாசன் இறந்துவிட்டார்’ என்று நானேதான் உங்களிடம் சொன்னேன். குரலை மாற்றிப் பேசினேன் என்றார்.
‘ஏன் இப்படி சொன்னிங்க? எவ்வளவு பய்ந்துட்டோம்’ என்று வந்தவர்கள் கேட்டனர்.
அதற்கு கண்ணதாசன், ‘ இருக்கும்போதே செத்துவிட்டதாக வதந்தி பரவினால் நீண்ட ஆயுள் கிடைக்குமாம். அதனால்தான் அப்படிச் சொன்னேன்’’ என்றார்.
அதிக நாள் வாழவேண்டும் என ஆசைப்பட்டார் கண்ணதாசன். சே...56 ஒரு வயசா?


தமிழ் விளையாட்டு-15

தை மகள் வருகின்றாள்- அத்
தை மகள் வருகின்றாள்

அந்தத் தை மகள் வருகின்றாள் என்றும் அத்தை மகள் வருகின்றாள் என்றும் இரு பொருள்பட பொங்கல் வாழ்த்துக் கவிதை ஒன்றில் எழுதியுள்ளார் கவியரசர் கண்ணதாசன்.

இன்னொரு பாடலில்

மார்கழிக்குப் பெண்ணாக
மாசிக்குக்த் தாயாக
பேர் கொழிக்க வந்த
பெட்டகமே தைப் பாவாய்

என்று, தை மாதத்தை ஒரு பெண்ணாக வர்ணிப்பார். அதில் சிறப்பு என்ன வென்றால், ஒரு மாதம், அதன் அடுத்த மாதத்தை பெற்றெடுக்கும் தாய் என குறிப்பிட்டுள்ளார். மார்கழி மாதத்தின் மகளாம் தை மாதம் (மார்கழிக்குப் பெண்ணாக). அதே நேரம் மாசி மாதத்துக்கு தாயாம் (மாசிக்குத் தாயாக). என்னே கவியரசரின் கற்பனை.

இதே கவிதையில்

நெய்வார் கை நூலை
நிலத்தே விரித்ததுபோல்
கை நீட்டி வாராயோ கதிரொளியே

என்கிறார் கவியரசர். கதிரவன் ஒளி நிலத்தில் படர்வது எப்படி இருக்கிறது என்றால், நெசவாளர்கள், பாவு நூலை நிலத்தில் விரித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது என்று சொல்கிறார். என்ன அருமையான் ஒப்பீடு...


பாவேந்த பாரதிதாசன் ஒரு பொங்கல் வாழ்த்துக் கவிதையில்,

மார்கழி உச்சியில்
மலர்ந்தது பொங்கல்

என்று எழுதுகிறார். மார்கழி மாதம் ஒரு செடி போலவும் அதன் உச்சியில் மலர்கின்ற மலர் தை மாதம் என்றும் கற்பனை செய்கிறார் பாவேந்தர்.

படிக்கப் படிக்க இன்பம் என் பைந்தமிழ்
எழுத எழுத இன்பம் என் தமிழ்


தமிழ் விளையாட்டு-14

இங்கே சொல்லப்போவது ஒரு அரசியல் நிகழ்வு என்றாலும், இதில் தமிழ் விளையாடும். அந்த சுவாரசியம் கருதியே இங்கே பதிவிடுகிறேன். அதற்கு முன் ஒரு கதையை சொன்னால்தான், திருவிளையாடல் புராணம் தெரியாதவர்களுக்கு புரியும். கதையை சொல்லிவிடுகிறேன்.

திருவாசகம் எழுதிய மணிவாசகப் பெருமான், பாண்டிய மண்னனிடம் அமைச்சராக இருந்தார். குதிரை வாங்கி வரும்படி பணம் கொடுத்தனுப்பினான் மன்னன். சென்ற இடத்தில், அந்தப் பணத்தை கோயில் திருப்பணிக்கு செலவிட்டுவிட்டார் மாணிக்கவாசகர். மன்னனுக்கு என்ன பதில் சொல்வதென்று மனம் கலங்கி சிவனை வேண்டினார். சிவன் உடனே நரிகளை பரி(குதிரை) ஆக்கி மாணிக்க வாசகரிடம் கொடுத்தார். அவற்றைக் கொண்டுபோய் மன்னனிடம் கொடுத்தார் மாணிக்கவாசகர். கொட்டடியில் அடைக்கப்பட்ட அந்த பரிகள்(குதிரைகள்) மறுநாள் காலையில் மீண்டும் நரியாகிவிட்டன்.

இதுதான் கதை. இப்ப விஷயத்துக்கு வரேன்.

அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து, எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு திமுகவில் சேர்ந்தார். பிறகு, மதுரையில் ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவில் மீண்டும் சேர்ந்தார். இது பற்றி கலைஞரிடம் நிருபர்கள் கேட்டபோது,

‘நரி பரியாவதும் பரி நரியாவதும் மதுரையில் இயல்புதானே” என்றார் கலைஞர்.

கலைஞர் இப்படிச் சொல்கிறாரே என்று காளிமுத்துவிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், ‘ நான் பரியானேனோ நரியானேனோ...இப்போது சரியாகிவிட்டேன்’’ என்றார். எப்படி விளையாடுறாங்க பாருங்க தமிழ்ல.

Tuesday, 6 January 2015

எடுத்தது எங்கே 207ஜி ரெயின்போ காலனி’ படத்தில் வரும் ‘கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ பாடல் சூப்பர் ஹிட் ஆனது. நண்பர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் இது. காரைக்காலைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் பேசிக்-கொண்டிருந்தபோது, இந்தப் பாடல் பற்றி அவர் சொன்னார்.

‘முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றுக்கொடுத்த பாடல் ‘கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’. இதற்காக அவருக்கு பாராட்டு விழா நடந்-தது. அதில் பேசிய முத்துக்குமார், ‘கண்களின் வார்த்தைகள் புரியாதோ; காத்திருந்தால் பெண் கனியாதோ’ என்ற பாடலை உல்டா பண்ணித்தான் இந்தப் பாடலை எழுதினேன்’ என்றார். எவ்வளவு நேர்மை பாருங்கள்’ என்று வியந்து பாராட்டினார்.

இப்படி ஒப்புக்கொண்டவர்கள் பலர் உண்டு. திருமூலர் எழுதிய பாடலின் கருத்துதான், பட்டினத்தார் எழுதிய...

‘அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம்பொழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு

கைத்-தலை மேல்வைத்தழும் மைந்-தரும் சுடுகாடுமட்டே

பற்றித் தொடரும் இரு-வினைப்-புண்ணிய பாவமுமே...’

என்ற பாடல்.

இதே பாடல்தான் பாதகாணி-கை படத்தில் வரும்,

‘வீடு வரை உறவு

வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை

கடைசி வரை யாரோ...

என்ற பாடல். கவியரசு கண்ணதாசன் எழுதியது. ஆனால், இதை ஒப்புக்கொண்டிருக்கிறார் கண்ணதாசன். இலக்கியம் சாதாரண மக்களைப் போய்ச் சேராது. அதை எளிமைப்படுத்தி பாமர மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன் என்பார் கண்ணதாசன். பல திரைப்படப் பாடலாசிரியர்கள் இப்படி செய்திருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல.

ஆனால், இவர்கள் யாரும் ‘தமிழுக்கு நான் சோறு போடுகிறேன்’ என்று சொன்னதில்லை. தமிழ்தான் தங்களுக்கு சோறு போடுகிறது; சோறு போடுவது மட்டுமல்ல, காரும் சீரும் கொடுத்து பேரும் புகழும் கிடைக்கச் செய்துள்ளது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

திரைத்துறையை தீக்குச்சிக்கு தின்னக்கொடுப்போம் என்று சொன்ன வைரமுத்து, அதே திரைத்துறை மூலம்தான் உச்சம் பெற்றார். தீக்குச்சிக்குத் தின்னக் கொடுக்க வேண்டிய திரைத்துறையை திருத்தினாரா என்றால்,

‘கண்ணா என் சேலைக்குள்ள

கட்டெறும்பு புகுந்திடுச்சி...’

என்று எழுதி அவரும் அதில் அமுங்கிப் போனார்.

அவரது ‘ஆயிரம் பாடல்கள்’ நூலின் முன்னுரையில், ‘ஒரு தலைமுறை தமிழை தந்துவிட்டு அடுத்த தலைமுறை தமிழுக்கு தயாராகியிருக்கிறேன்’ என்று எழுதியுள்ளார் வைரமுத்து. அவர் அடிக்கடி ‘எனது தமிழாசான்’ என்று சொல்லிக்கொள்ளும் முன்னாள் முதல்வர் கலைஞ்ர் கூட, ‘ஒரு தலைமுறைக்கான தமிழை தந்திருக்கிறேன்’ என்றோ, ’தமிழுக்கு சோறு போடுகிறேன்’ என்றோ சொன்னதில்லை.

வைரமுத்து புதிதாக எதையும் கொடுத்துவிடவில்லை. இருப்பதை எடுத்துத்தான் கொடுத்தார் என்பதை இந்தத் தொடரைப் படிப்பவர்களுக்குப் புரிந்திருக்கும்.

கடந்த 19 வாரங்களாக நான் ஒப்பிட்டு எழுதிய பாடல்கள், என் நினைவில் இருந்தவைதான். இதற்கென்று தனியாக எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. அப்படி ஒரு ஆய்வை மேற்கொள்வதானால், தமிழ் இலக்கியம், தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் மட்டுமல்ல, உலக இலக்கியங்கள் பலவற்றையும் படித்துவிட்டுத்தான் ஒப்பாய்வு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், இந்தத் தொடர் 100 வாரங்களையும் கடக்கக்கூடும். இந்தத் தொடருக்கு முகநூல் நண்பர்கள் கொடுத்த வரவேற்பு நெகிழச் செய்தது. வைரமுத்துவின் தீவிர ரசிகர்கள்கூட என் எழுத்தை வரவேற்றது, எனது விமர்சனத்தின் நேர்மைக்கு கிடைத்தபரிசு எனக் கருதுகிறேன். என்னை ஊக்குவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சு நிறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.

(எடுத்தது நிறைந்தது.)

எடுத்தது எங்கே 19கோடை வெயில் கொளுத்துகிறது. ஒரு பாறை மேல் ஒரு பெரிய வெண்ணை உருண்-டை வைக்கப்பட்டுள்ளது. வெயி-லில் அது உருகுகிறது. அதன் முன் ஒருவன் நிற்-கிறான். அந்த வெண்ணை உருகி வீணா-கா-மல் பாதுகாக்க வேண்டும். அவனுக்கோ இரண்டு கைகளும் இல்லை.

வெண்--ணை-யை அவனால் வேறு

இடத்-துக்கு எடுத்துச் செல்ல முடியாது. யாரையாவது அழைத்து அதை எடுத்து நிழலில் வைக்கச் சொல்லலாம் என்றால், அவன் பேசும் திறன் அற்றவன். கையில்-லாத-தால் சைகையாலும் யாரையும் அழைக்க முடியவில்லை.

கைகள் இல்லாத, வாய் பேசமுடியாத ஒருவன், பாறைமீது வெயிலில் உருகும் வெண்ணையை பாதுகாக்க முடியாமலும், அதைப்பற்றி பிறரிடம் சொல்லவும் முடியா-மலும் எப்படி தவிக்கிறானோ அதைப் போல, காதல் நோயைப் பொறுத்-துக் கொள்ள முடியாமலும், யாரிடமும்

சொல்ல முடியாமலும் தவிக்கிறான் தலை-வன்.

இது சங்க இலக்கியப் பாடல் ஒன்றின் கருத்து இது. வெள்ளிவீதியார் என்ற புலவர் எழுதியது.

குறிஞ்சித் திணையின் அந்தப் பாடல் இதோ...

இடிக்கும் கேளிர்! நும்குறை யாக

நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன், தில்ல

ஞாயிறு காயும் வெவ்அறை மருங்-கில்

கை இல் ஊமன் கண்ணின் காக்கும்

வெண்-ணெய் உணங்கல் போலப்

பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே.

இதே பொருள் கொண்ட திரைப்பாடல் ஒன்று உண்டு. அது இதோ...

செந்தீ விழுந்த

செம்-பொற் பாறையில்

மந்தி உருட்டும் மயிலின்

முட்டையாய் இதயம்

உடலில் இருந்து விழுந்து

உருண்டு புரண்டு போகுதே

மேலே சொன்ன சங்கப்பாடலின் உருமாற்றம்தான் இந்தப் பாடல் என்பது படிக்கும்போதே புரிகிறதல்லவா? இந்தப் பாடல் எங்கோ கேட்ட மாதிரி இருக்கி-றதா? நிச்சயமாக நீங்கள் கேட்டிருக்க மாட்-டீர்கள். காரணம், இந்தப் படமே இன்னும் வெளியாகவில்லை. ஆனால் படித்திருப்பீர்கள்.

ஆமாம், கோச்சடையான் படத்துக்கு வைரமுத்து எழுதியுள்ள பாடல்தான் இது. சமீபத்தில் வார இதழ் ஒன்றில், தான் எழுதிய அற்புதமான பாடல் என்று சிலா-கித்து, இந்தப் பாடலை கொடுத்திருந்தார் வைரமுத்து.

இந்த பாடலில் அடுத்த பகுதி இதோ....

சிறுகோட்டுப் பெரும்பழம்

துõங்கியாங்கு

என் உயிரோ சிறிதே

என் காதலோ பெரிதே

இந்த வரிகளும் எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா? இருக்கும்.

மண்வாசனை படத்தில் வரும் ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ பாடலில்,

‘சின்னக் காம்புதானே பூவத் தாங்குது’ என்ற கருத்து கபிலர் எழுதிய குறுந்தொகைப்பாடலின் உரு-மாற்-றம் என்று ஏற்கனவே சொல்லி-யிருக்-கி-றேன் அல்லவா? அதுதான் இது.

கோச்சடையானில் குறுந்தொகைப் பாடல் வரிகளை அப்படியே எடுத்துப் போட்டுள்ளார்.

வரல் வேலி வேர்கோட் பலவின்

சார னாட செவ்வியை யாகுமதி

யாரஃ தறிந்திசி னோரே சாரற்

சிறுகோட்டுப் பெரும்பழந் துõங்கி யாங்கிவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

இதுதான் அந்தக் குறுந்தொகைப் பாடல். ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தப் பாடலின் கடைசி இரண்டு வரிகள்தான் வைரமுத்துவின் பாடல். சங்க இலக்கியம் போல பாடல் இருக்கவேண்டும் என்று இயக்குனர் கேட்டிருப்பார் போலும். போல எதற்கு சங்க இலக்கியத்தையே தருகிறேன் என்று எடுத்துக்கொடுத்துவிட்டார் கவிப்பேரரசு.

(எடுத்தது வரும்).
குறும்பு-14

அதே பேராசிரியார்...அதாங்க அன்பா வாழ்த்துவாரே அவரேதான்... அந்தாதி பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்தாதின்னா என்னன்னு சொல்லிடுறேன்.அந்தம் என்றால் முடிவு. ஆதி என்றால் தொடக்கம். அதாவது, முடிவை முதலாகக கொண்டு தொடங்க்குவது அந்தாதி.ஒரு வரியோ அல்லது பாடலோ எந்த சொல்லில் முடிகிறதோ அந்த சொல்லை தொடக்கமாகக் கொண்டு அடுத்த வரியோ அல்லது அடுத்த பாடலோ தொடங்கும். இதைத்தான் அந்தாதி என்று சொல்வார்கள்.
இப்படி அந்தாதி பற்றி விளக்கிய பேராசிரியர், என்னைப் பார்த்து அந்தாதிக்கு ஒரு உதாரணம் சொல்லு என்றார். நான் உடனே

என்னடி மீனாட்சி
மீனாட்சிக் குங்குமம்
குங்குமம் கதை சொல்கிறது
சொல்லத்தான் நினைக்கிறேன்
நினைத்தாலே இனிக்கும்
இனிக்கும் இளமை
இளமை ஊஞ்சலாடுகிறது

என்று சினிமா பெயர்களை அந்தாதியில் சொன்னேன். அவ்வளவுதான். அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லணுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


குறும்பு-13அதே வாழ்த்தும் பேராசிரியர். ஒரு நாள் இலக்கண வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். பேராசிரியர் பாடம் நடத்தும்போது, இலக்கண நூலை மாணவர்களும் வைத்துக்கொண்டு கவனித்தால்தான் பாடம் புரியும். ஒரு மாணவர், இடம் மாறி இன்னொரு மாணவர் அருகில் போய் அமர்ந்தார். ‘வகுப்பு நடக்கும்போது எதுக்கு இடம் மாறின?” என்று கேட்டார் பேராசிரியர். ‘என்னிடம்புத்தகம் இல்லைங்க ஐயா. அவன் புத்தகத்தை பார்த்துக்கலாம்னு இடம் மாறினேன்’’ என்றார் அந்த மாணவர்.
உடனே இன்னொரு மாணவி ‘எங்கிட்டயம் புத்தகம் இல்லை சார்’ என்றார். நான் உடனே, ‘’புத்தகம் இல்லாதவங்க எங்கிட்ட வந்து உட்காரலாம்” என்றேன். வந்தது கோபம் பேராசிரியருக்கு. ‘இது வகுப்புன்னு நினைச்சியா? என்ன நினைச்ச?” என்று கோபமாக கேட்டார்.
‘என்னங்கய்யா தப்பா சொல்லிட்டேன்?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘’உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கலாம். அதெல்லாம் வகுப்புல வச்சுக்க கூடாது” என்றார்.
‘’ஐயையோ அபாண்டமா பேசுறிங்களே...ஒரு ஆசிரியர் பேசுற பேச்சா இது?” என்று பதறினேன் நான்.
‘’என்ன அபண்டமா சொல்லிட்டேன்?’ என்று கேட்டார்.
ஒரு பொண்ணையும் பையனையும் பார்த்து, உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கலாம்னு சொன்னா என்னங்கய்யா அர்த்தம். கேட்கிறவங்க என்ன நினைப்பாங்க? என்னைவிடுங்க... அந்தப் பொண்ணோட வாழ்க்கை என்னாகிறது?” என்று கேட்டேன்.
அந்தப் பெண்ணும், ‘அதானே..அவர் தப்பு செய்தா அவரை மட்டும்தானே நீங்க கண்டிக்கணும். எனையும் சேர்த்து எப்படி அபாண்டமா சொல்லலாம்?’ என்று பிடித்துக்கொண்டார்.
‘இப்ப என்ன பண்ணனும்னு சொல்றிங்க இரண்டு பேரும்?” என்று கேட்டார் பேராசிரியர். ”சொன்னதை வாபஸ் வாங்கணும். மண்ணிப்பு கேட்கணும்” என்றேன். அவருக்கு கோபம் இன்னும் அதிகமானது.

பிறகென்ன? மூன்று மணிக் காட்சிதான். நானும் இன்னொரு மாணவரும்தாங்க.


குறும்பு-12விருத்தாசலம் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்றுகொண்டிர்ந்தபோது, விலங்கியல் பேராசிரியர் ஒருவர் என்னோடு நன்றாக பழகுவார். சில நாட்கள் மதியம் சாப்பாடு வாங்கி வரசொல்வார். டவுனுக்குப் போய் சாப்பாடு வாங்கிவர அவருடைய சைக்கிளைக் கொடுப்பார். போய் வாங்கி வந்து தருவேன். ஒரு நாள், நான் சாப்பிடப் போக சைக்கிள் கேட்டேன். தர மறுத்துவிட்டார்.

உங்களுக்குன்னா தருவிங்க. எனக்குன்னா தர மாட்டிங்களா? மாட்டாமலா போய்டுவிங்க பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
ஒருநாள் விலங்கியல்துறை ஆய்வகம் வழியாக போய்க்கொண்டிருந்தேன். அந்த பேராசிரியர் ஒரு மாணவியை அழைத்து, ‘’காட்டு காட்டுன்னு சொல்றேன் காட்ட மாட்டேங்கிற. ஒரு நாள் இருக்கு உனக்கு’’ என்று கண்டித்துக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட நான், ‘சார் ஒரு நிமிஷம் இங்க வாங்க” என்று அழைத்தேன். வந்தார்.

உங்ளைக் கண்டித்து ஸ்டிரைக் பண்ணப்போறோம் என்றேன் ( நான் அழைத்தால் எல்லா மாணவர்களும் வந்துவிடுவார்கள்) என்றேன். என்னப்பா பிரச்னை? என்று அலறினார் பேராசிரியர்.
இப்ப அந்த மாணவிகிட்ட என்ன சொன்னிங்கன்னு கேட்டேன். அவர் சொன்னதை திருப்பிச் சொன்னார்.
ஒரு மாணவியிடம் இப்படி இரட்டை அர்த்தத்தில் ஆபாசமா பேசுறிங்களே..அதுக்குத்தான் உங்களுக்கு எதிரா ஸ்டிரைக் பண்ணப் போறோம் என்றேன்.
ரெக்கார்டு நோட்டு காட்டலன்னுதான்பா அப்படி கேட்டேன். தப்பால்லாம் சொல்லலப்பா என்றார் பேராசிரியர்.
பேசிட்டு தப்பா பேசலன்னு சொன்னா விட்டுடுவோனா என்றேன்.
சைக்கிள் தரலன்னு இப்படி வம்புல மாட்டிவிட்டுடாதப்பா..எப்ப வேணும்னாலும் சைக்கிள் எடுத்துகிட்டு போ....என்னை அசிங்கப் படுத்திடாதே...தப்பான அர்த்தத்தில் நான் பேசலை என்று கெஞ்சினார் அவர். சரி சார் விட்டுடுறேன். இனிமேல் கவனமா பேசுங்கன்னு சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
அதன் பிறகு வாரத்துல 3 நாள் டவுனுக்கு போவோம். அவர் சைக்கிள்லதான்.


Monday, 5 January 2015

எடுத்தது எங்கே 18முதல்வன் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் ‘உப்புக் கருவாடு ஊறவச்ச சோறு ஊட்டிவிடு நீ எனக்கு’ என்ற பாடல் காட்சியில் ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேட்டி

சட்-டை-யை கதாநாயகியும், கதாநாயகியின் பாவாடை தாவணியை கதாநாயகனும் அணிந்து மகிழ்வார்கள்.

காதலர்களும், அன்புடைய புதிய தம்பதி-கள் இப்படி உடையை மாற்றி அணிந்து-கொள்வது இன்று நேற்றல்ல, சங்ககாலம் தொட்டு இந்தப் பழக்கம் இருந்து வருகிறது.

சங்க இலக்கியமான ‘பத்துப் பாட்டு’ தொகுப்பில் உள்ள பட்டினப் பாலையில் ஒரு பாடல்.

துணைப் புணர்ந்த மடமங்கையர்

பட்டு நீக்கித் துகில் உடுத்து,

மட்டு நீக்கி மது மகிழ்ந்து,

மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,

மகளிர் கோதை மைந்தர் மலையவும்

என்று வரும் அந்தப் பாடல்.

இதன் பொருள்....

துணைவரைக் கூடி மகிழும் மங்கையர், பகல் நேரத்தில் அவர்கள் அணிந்-திருந்த பட்டாடையை நீக்கி பருத்தி ஆடையை அணிவர். தலைவன், மது அருந்துவதை தவிர்த்து, காதல் இன்பத்தில் திளைப்பான். அவன் அணிந்திருந்த மாலையை அவ-ளும், அவள் அணிந்திருந்த மாலையை அவனும் அணிந்து மகிழ்வார்கள்.

இதில்

பட்டு நீக்கித் துகில் உடுத்து

என்பது இங்கே மிக முக்கி-யமான வரி. இந்த வரிக்கு இரண்டு விதமாக பொருள் கூறுகின்றனர்.

மணமான மகளிர், பகலெல்லாம் அணிந்த பட்டாடையைக் கழற்றிவிட்டு, மென்-மையான பருத்தி ஆடையாகிய துகில் அணிகிறார்கள் என்பது ஒரு விளக்-கம்.

பெண் தன்னுடைய பட்டாடையைக் களைந்துவிட்டு, கணவனின் ஆடையை அதாவது துகிலை அணிகிறாள் என்பது இன்னொரு விளக்கம். இப்படி ஆணும் பெண்ணும் ஆடைகளை மாற்றி அணிந்து மகிழும் வழக்கம் சங்க காலம் தொட்டு இருந்துவருகிறது.

இதைத்தான் ‘அலைபாயுதே’ படத்தில் வரும் ‘சிநேகிதனே... ரகசிய சிநேகிதனே’ பாட்டில் எடுத்தாண்டுள்ளார் வைரமுத்து. சிநேகிதனே பாடலில்

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்

நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்

காதில் கூந்தல் நுழைப்பேன்

உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்

நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்

என்று வரும். இதில்,

‘உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்’ என்பது, அவன் சட்டையை அவள் அணிந்து மகிழ்வதைச் சொல்-கிறாள். ‘பட்டு நீக்கித் துகில் உடுத்து’ என்-பது-தான் இங்கே இப்படி சொல்-லப்-பட்-டுள்-ளது.

மதுரை அமெரிக்கன் கல்லுõரியில் கவியரசர் கண்ணதாசன் தலைமையில் ஒரு கவியரங்கம்.

கண்ணதாசன் கவிதை படிக்கும் முன்பு ஒரு மாணவர் கவிதை படித்தார். எந்த கைத்தட்டலும், ஆரவார வரவேற்பும் இல்லை. அவரது கவிதை வரிகளை பெரி-தாக ரசிக்கவும் இல்லை. அடுத்து கண்ண-தா-சன் கவிதை வாசித்தார். வரிக்கு வரி பலத்த கைத்தட்டல். மகிழ்ச்சி ஆரவாரம். கவிதையைப் படித்து முடித்த பின் கண்-ணதாசன் பேசினார். அவர்

சொன்னது:

நான் வாசித்த கவிதைக்கு இந்த அளவுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு கண்டு மகிழ்கிறேன். அது நான் வாசித்த கவிதைதான். நான் எழுதிய கவிதை அல்ல. எனக்கு முன் கவிதை படித்தாரே ஒரு மாணவர் அவர் எழுதிய கவிதை-யைத்-தான் நான் படித்தேன். அவர் படித்தது நான் எழுதிய கவிதையை. நான்தான் அப்-படி செய்யச் சொன்னேன். அந்த மாணவர் எழுதிய கவிதையை நான் படித்த போது கைதட்டிய நீங்கள், என் கவிதையை அந்த மாணவர் படித்தபோது கைதட்டவே இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது. யார் சொல்கிறார் என்றுதான் பார்க்கிறீர்கள். என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்-ப-தில்-லை நாம். யார் சொன்னாலும் நல்ல வரி-க-ளை வரவேற்க வேண்டும். பிரபல-மான-வர்-கள் சொன்னால்தான் வரவேற்பது என்ற நம் மனநிலை மாறவேண்டும்.

கண்ணதாசனின் இந்தப் பெருந்-தன்-மைக்கு யாராவது நிகர் உண்டா?

-எடுத்தது வரும்.

எடுத்தது எங்கே?- 17அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் எலைன் பேஜெல்ஸ். எம். ஏ. படித்து முடித்தபின், ஹார்வர்டு பல்கலைக்-கழகத்தில் டாக்டர் பட்டத்துக்காக சமயங்கள்பற்றி ஆய்வு செய்தார். அவர் எழுதிய THE GNOSTIC GOSPELS என்ற நுõல் சிறந்த நூலுக்கான தேசிய விருது பெற்றது. இந்த நுõலில் வரும் ஒரு சிறு ஆங்கிலக் கவிதை

I am the first and last

I was the honored one and the scorned one

I am the whore and the holy one

I am the wife and the virgin ...

I am the barren one,

and many are my sons ...

I am the silence that is incomprehensible

I am the utterance of my name.

இதன் பொருள்

ஆதியும் நான் அந்தமும் நான்

புகழப்பட்டவனும் நான்

இகழப்பட்டவனும் நான்

புனிதனும் நான் அற்பனும் நான்

காதல் மனைவியும் நான்

கன்னிப் பெண்ணும் நான்

மலடியும் நான்- குழந்தைகள்

பலரின் தாயும் நான்

புரியாத மவுனமும் நான்- என் பெயரை

உறக்கச் சொல்லும் சத்தமும் நான்

இந்தக் கவிதையை வாசித்ததும் உங்களுக்கு ஏதோ நினைவுக்கு வரு-கிறதா? வரணுமே... ‘கன்னத்தில் முத்த-மிட்டால்...’ படத்தின்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்

காதில் தில் தில் தில் தில்

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே

பாடல் நினைவுக்கு வருகிறதா? ஆம் அதில் வரும் வரிகளைப் பாருங்கள்...

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!

காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!

செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!

பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!

மரணம் மீண்ட ஜனனம் நீ!

எல்லாம் முரணாக அமைந்திருக்-கி-றதா? எலைன் பேஜஸ் எழுதிய கவிதை-யில் வரும் அதே முரண்தான்.

ஆதியும் நான் அந்தமும் நான்

புகழப்பட்டவனும் நான்

இகழப்பட்டவனும் நான்

புனிதனும் நான் அற்பனும் நான்

என்ற வரிகள்தான் உருமாற்றம் பெற்று வைரமுத்து எழுதிய பாடலில்

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!

காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!

என்று முரண்களாக முகிழ்கின்றன.

இதே முரணை டூயட் படத்தில் வரும் ஒரு கவிதையிலும் பயன்படுத்தியிருப்பார் வைரமுத்து.

காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்- நான்

காதலித்தால் கண் மூடிக்கொண்டவளும் நீதான்

என்று இரண்டு எதிர்மறையுமே அவள் என்று முரண் வைத்து எழுதியுள்ளார்.

(எடுத்தது வரும்)எடுத்தது எங்கே-16ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் கவிதை ஒன்று. அதன் தமிழாக்கம் இதோ:

ஊற்று கலக்கும் ஆற்றோடு

ஆறு கலக்கும் கடலோடு

காற்று கலக்கும் காற்றோடு

கலையா இன்ப உணர்வோடு

தெய்வீக விதியின் துணையோடு

ஒவ்வொரு பொருளும் இணையோடு

ஒன்றாய்க்கலக்கும் உறவோடு – நான்

கலப்பது தவறோ உன்னோடு?

காதலனைப் பார்த்துக் காதலி இப்படி கேட்-பதாக எழுதியிருப்பார் ஷெல்லி. இந்தக் கவிதை-யை, தமிழ்நாட்டில் வழங்கும் ஒரு நாட்டுப்-புறப்-பாடலோடு ஒப்பிடுவார் கவிக்கோ அப்துல் ரகுமான்:

கல்லோட கல்லுரச

கடலுத்தண்ணி மீனுரச

உன்னோடு நானுரச

உலகம் பொறுக்கலியே!

என்ற நாட்டுப்புறப் பாடலை ஷெல்லியின் கவிதையோடு ஒப்பிடும் கவிஞர் அப்துல் ரகுமான்,

ஷெல்லியைப் போலவே “ஒரு நாட்-டுப்-புற பெண் வாதாடு-கிறாள்... ஷெல்லி-யின் வாதங்-களைவிட இந்தப் பெண்ணின் வாதம் பலமானது. கல்லோடு கல் உர-சி-னால்தான் தீப்பொறி பிறக்கும். கடல் நீரோடு மீன் உரசினால்தான் அது உயிர் வாழ முடியும் இவற்றை-யெல்லாஅனுமதிக்கும் உலகம் தங்களை மட்டும் தடுப்-பானேன் என்று கேட்கிறாள். நியாயம்-தானே..!” இப்படி ‘அவளுக்கு நிலா என்று பெயர்’ என்ற ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் அப்துல் ரகுமான்.

இந்த நாட்டுப்புறப் பாடலை,

அப்-துல் ரகுமான் மொழியில் சொல்வ-தானால், ஷெல்-லி-யை வென்ற தமிழ்ப் பெண்ணின் பாடலை ‘அன்புக்கு நான் அடிமை’ படத்-தில் பயன்-படுத்தியுள்ளார் ஒரு கவிஞர்.

அந்தப் பாடல்...

பெண்: காத்தோடு பூவுரச பூவ வண்டுரச

உன்னோடு நான்... என்னோடு நீ...

பூவா காத்தா உரச

ஆண்: காத்தோடு பூவுரச பூவ வண்டுரச

உன்னோடு நான்... என்னோடு நீ....

பூவா... காத்தா.... உரச

இந்தப் பாடலை நாட்டுப் புறப் பாடலோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்

கல்லோட கல்லுரச

கடலுத்தண்ணி மீனுரச

உன்னோடு நானுரச

என்பதையே

காத்தோடு பூவுரச பூவ வண்டுரச

உன்னோடு நான்... என்னோடு நீ...

என உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்படி நாட்டுப்புறப் பாடல்கள் பலவற்றை அப்படியேயும் உருமாற்றம் செய்தும் திரையுலகுக்கு கொடுத்துள்ளார் வைரமுத்து.

பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்து பெரும் புகழ் பெற்ற படம் அலைகள் ஓய்வதில்லை. அதில் ஒரு பாடல்.

ஆயிரம் தாமரை மொட்டுக்களே- இங்கு

ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்

என்று தொடங்கும். மிகவும் பிரபல-மான பாடல் இது. ஒரு நாள், 1981ல் மதுரையில் நடந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டு மலரைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் தமிழ்ப் பெண்களின் விளையாட்டுகளைப் பற்றி விளக்கும் கட்டுரை ஒன்று. அந்தக் கட்டுரையில் பெண்கள் கும்மியடிக்கும் படத்-தைப் போட்டு அதன் கீழ்’

ஆயிரம் தாமரை மொட்டுக்களே- இங்கு

ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்

என்று அச்சிடப்பட்டிருந்தது. அதிர்ச்சி எனக்கு. இது வைரமுத்து எழுதிய திரைப்-பாடலா-யிற்றே. இதில் எப்படி இடம் பெற்றது என்று.காரணம், அலைகள் ஓய்வதில்லை படமும் பாடலும் வெளிவரும் முன்பே உலகத்தமிழ் மாநாட்டு மலர் வெளி வந்திருந்தது. ஆராய்ந்து பார்த்-தில், ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்-பது நாட்டுப்புறப் பாடல் என தெரிய வந்தது.

ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியை வெல்லும் நமது தமிழ்ப் பெண்களின் பாடல்களை எப்படி-யெல்லாம் திரைப் படத்தில் பயன்படுத்துகிறார்கள் பாருங்கள். யாரும் உரிமை கொண்டாட முடி-யா-த-வை நாட்டுப்புறப் பாடல்கள். அதனால் அதை யார்வேண்டுமானாலும் எடுத்துக்-கொள்-ள-லாம். கேட்க ஆள் இல்லை என்றால், எழுதியது நானே-தான் என்றும் சொல்லிக்கொள்ளலாம். யார் கேட்கப் போகிறார்கள்.

பாலசந்தர் இயக்கத்தில் வெளியான

‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் வரும் பாடல்,

பெ: மேகத்தைத் தூது விட்டா திசை

மாறிப் போகுமோன்னு

தாகமுள்ள மச்சானே.. தண்ணிய நான் தூது விட்டேன்

...

பெ: தண்ணிக்கு இந்தக் கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்

எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப் போற எப்ப வந்து தரப் போற

...

பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..

சேர்ந்துச்சோ.. சேரலையோ..

...

பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..

சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே

...

பெ: ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே

சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் கைகளிலே

என்ற பாடலும் நாட்டுப்புறப் பாடல்தான். நன்றாக இருக்கிறதல்லவா? யாருக்கும் தெரி-யா-மல் இருப்பதை ஊருக்கு சொல்லலாமே என்று எடுத்-துக்கொடுத்திருக்கிறார் கவிப் பேரரசு

வைர-முத்து.

- எடுத்தது வரும்