Tuesday 25 November 2014

குறும்பு-2

தமிழ் இலக்கியத்தின் பா வகைகளில் நீரோட்ட யமக அந்தாதி’ என்றொரு வகை உண்டு. இதன் சிறப்பு என்னவென்றால், இந்தப் பாடலை பாடும்போது உதடுகள் ஒட்டவே ஒட்டாது. அப்படி, உதடுகள் ஒட்டாமல் உச்சரிக்க கூடிய சொற்களை வைத்தே பாடல் புனைவார்கள். இது மிகவும் சிரமம்.
நான் பி.ஏ. படிக்கும் போது நீரோட்ட யமக அந்தாதி பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் ஆசிரியர்(அந்தாதி பற்றி சொன்ன அதே ஆசிரியர்தான்)அப்போது நான், ‘இதுபோல உதடு ஒட்டாமல் பாடக்கூடிய குறள் ஒன்றும் இருக்கிறது ஐயா என்றேன். உற்சாகமான அவர், ;அப்படியா? எந்தக் குறள் சொல்லு” என்றார்.

‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்’

என்ற குறளைச் சொல்லி இதுதான் அந்தக் குறள் என்றேன்.(குறளை சொல்லிப் பாருங்கள் உதடுகள் ஒட்டாது) ‘சபாஷ். எனக்கே இப்பதான் தெரியுது” என்று பாராட்டினார் ஆசிரியர்.
தொடர்ந்து நான், ‘இந்தக் குறளில் இன்னொரு சிறப்பும் உண்டு ஐயா’ என்றேன். ‘அப்படியா? என்ன சொல்’ என்றார்.

இந்தக் குறளின் பொருள், ‘எதை எதையெல்லாம் விட்டு விலகுகிறோமோ அதிலிருந்து பெறும் துன்பத்தில் இருந்து விடுபடுகிறோம்’ என்பதுதான். இந்தக் குறளைச் சொல்லும்போது இதழ்கள் (உதடுகள்) ஒட்டுவதில்லை. எனவே இந்தக் குறளைச் சொல்லும் போது இதழோடு இதழ் சேரும் துன்பத்தில் இருந்து விடுபடுகிறோம்’ என்று சொன்னேன். இதற்கும் அவர் கொடுத்த பரிசு..

‘நீ உருப்படவே மாட்ட’ என்பதுதான்

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_