Tuesday, 6 January 2015

எடுத்தது எங்கே 207ஜி ரெயின்போ காலனி’ படத்தில் வரும் ‘கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ பாடல் சூப்பர் ஹிட் ஆனது. நண்பர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் இது. காரைக்காலைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் பேசிக்-கொண்டிருந்தபோது, இந்தப் பாடல் பற்றி அவர் சொன்னார்.

‘முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றுக்கொடுத்த பாடல் ‘கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’. இதற்காக அவருக்கு பாராட்டு விழா நடந்-தது. அதில் பேசிய முத்துக்குமார், ‘கண்களின் வார்த்தைகள் புரியாதோ; காத்திருந்தால் பெண் கனியாதோ’ என்ற பாடலை உல்டா பண்ணித்தான் இந்தப் பாடலை எழுதினேன்’ என்றார். எவ்வளவு நேர்மை பாருங்கள்’ என்று வியந்து பாராட்டினார்.

இப்படி ஒப்புக்கொண்டவர்கள் பலர் உண்டு. திருமூலர் எழுதிய பாடலின் கருத்துதான், பட்டினத்தார் எழுதிய...

‘அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம்பொழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு

கைத்-தலை மேல்வைத்தழும் மைந்-தரும் சுடுகாடுமட்டே

பற்றித் தொடரும் இரு-வினைப்-புண்ணிய பாவமுமே...’

என்ற பாடல்.

இதே பாடல்தான் பாதகாணி-கை படத்தில் வரும்,

‘வீடு வரை உறவு

வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை

கடைசி வரை யாரோ...

என்ற பாடல். கவியரசு கண்ணதாசன் எழுதியது. ஆனால், இதை ஒப்புக்கொண்டிருக்கிறார் கண்ணதாசன். இலக்கியம் சாதாரண மக்களைப் போய்ச் சேராது. அதை எளிமைப்படுத்தி பாமர மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன் என்பார் கண்ணதாசன். பல திரைப்படப் பாடலாசிரியர்கள் இப்படி செய்திருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல.

ஆனால், இவர்கள் யாரும் ‘தமிழுக்கு நான் சோறு போடுகிறேன்’ என்று சொன்னதில்லை. தமிழ்தான் தங்களுக்கு சோறு போடுகிறது; சோறு போடுவது மட்டுமல்ல, காரும் சீரும் கொடுத்து பேரும் புகழும் கிடைக்கச் செய்துள்ளது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

திரைத்துறையை தீக்குச்சிக்கு தின்னக்கொடுப்போம் என்று சொன்ன வைரமுத்து, அதே திரைத்துறை மூலம்தான் உச்சம் பெற்றார். தீக்குச்சிக்குத் தின்னக் கொடுக்க வேண்டிய திரைத்துறையை திருத்தினாரா என்றால்,

‘கண்ணா என் சேலைக்குள்ள

கட்டெறும்பு புகுந்திடுச்சி...’

என்று எழுதி அவரும் அதில் அமுங்கிப் போனார்.

அவரது ‘ஆயிரம் பாடல்கள்’ நூலின் முன்னுரையில், ‘ஒரு தலைமுறை தமிழை தந்துவிட்டு அடுத்த தலைமுறை தமிழுக்கு தயாராகியிருக்கிறேன்’ என்று எழுதியுள்ளார் வைரமுத்து. அவர் அடிக்கடி ‘எனது தமிழாசான்’ என்று சொல்லிக்கொள்ளும் முன்னாள் முதல்வர் கலைஞ்ர் கூட, ‘ஒரு தலைமுறைக்கான தமிழை தந்திருக்கிறேன்’ என்றோ, ’தமிழுக்கு சோறு போடுகிறேன்’ என்றோ சொன்னதில்லை.

வைரமுத்து புதிதாக எதையும் கொடுத்துவிடவில்லை. இருப்பதை எடுத்துத்தான் கொடுத்தார் என்பதை இந்தத் தொடரைப் படிப்பவர்களுக்குப் புரிந்திருக்கும்.

கடந்த 19 வாரங்களாக நான் ஒப்பிட்டு எழுதிய பாடல்கள், என் நினைவில் இருந்தவைதான். இதற்கென்று தனியாக எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. அப்படி ஒரு ஆய்வை மேற்கொள்வதானால், தமிழ் இலக்கியம், தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் மட்டுமல்ல, உலக இலக்கியங்கள் பலவற்றையும் படித்துவிட்டுத்தான் ஒப்பாய்வு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், இந்தத் தொடர் 100 வாரங்களையும் கடக்கக்கூடும். இந்தத் தொடருக்கு முகநூல் நண்பர்கள் கொடுத்த வரவேற்பு நெகிழச் செய்தது. வைரமுத்துவின் தீவிர ரசிகர்கள்கூட என் எழுத்தை வரவேற்றது, எனது விமர்சனத்தின் நேர்மைக்கு கிடைத்தபரிசு எனக் கருதுகிறேன். என்னை ஊக்குவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சு நிறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.

(எடுத்தது நிறைந்தது.)

1 comment:

  1. சிறப்பு சிறப்பு..! ஒப்பாய்வு சிறு துளியாகத்தான் இவ்வலைப்பூவில் விழுந்திருக்கிறது. மழைத்துளி போல சுவையும் சத்தும் தனிச் சிறப்பு. மேலும் வளரட்டும் தங்கள் புதுமைப் புரட்சி

    ReplyDelete

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_