Wednesday 7 January 2015

தமிழ் விளையாட்டு-15

தை மகள் வருகின்றாள்- அத்
தை மகள் வருகின்றாள்

அந்தத் தை மகள் வருகின்றாள் என்றும் அத்தை மகள் வருகின்றாள் என்றும் இரு பொருள்பட பொங்கல் வாழ்த்துக் கவிதை ஒன்றில் எழுதியுள்ளார் கவியரசர் கண்ணதாசன்.

இன்னொரு பாடலில்

மார்கழிக்குப் பெண்ணாக
மாசிக்குக்த் தாயாக
பேர் கொழிக்க வந்த
பெட்டகமே தைப் பாவாய்

என்று, தை மாதத்தை ஒரு பெண்ணாக வர்ணிப்பார். அதில் சிறப்பு என்ன வென்றால், ஒரு மாதம், அதன் அடுத்த மாதத்தை பெற்றெடுக்கும் தாய் என குறிப்பிட்டுள்ளார். மார்கழி மாதத்தின் மகளாம் தை மாதம் (மார்கழிக்குப் பெண்ணாக). அதே நேரம் மாசி மாதத்துக்கு தாயாம் (மாசிக்குத் தாயாக). என்னே கவியரசரின் கற்பனை.

இதே கவிதையில்

நெய்வார் கை நூலை
நிலத்தே விரித்ததுபோல்
கை நீட்டி வாராயோ கதிரொளியே

என்கிறார் கவியரசர். கதிரவன் ஒளி நிலத்தில் படர்வது எப்படி இருக்கிறது என்றால், நெசவாளர்கள், பாவு நூலை நிலத்தில் விரித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது என்று சொல்கிறார். என்ன அருமையான் ஒப்பீடு...


பாவேந்த பாரதிதாசன் ஒரு பொங்கல் வாழ்த்துக் கவிதையில்,

மார்கழி உச்சியில்
மலர்ந்தது பொங்கல்

என்று எழுதுகிறார். மார்கழி மாதம் ஒரு செடி போலவும் அதன் உச்சியில் மலர்கின்ற மலர் தை மாதம் என்றும் கற்பனை செய்கிறார் பாவேந்தர்.

படிக்கப் படிக்க இன்பம் என் பைந்தமிழ்
எழுத எழுத இன்பம் என் தமிழ்


1 comment:

  1. முற்றிலும் உண்மைதான்.யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம். இந்தத் தேமதுரத்தமிழோசை உலகம் முழுதும் பரவும் வகை செய்ய முற்றிலும் தகுதி யுடையீர் நீவிர். வாழக....வளர்க....உயர்க...ஒளிர்க...!!!!

    ReplyDelete

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_