Wednesday 7 January 2015

தமிழ் விளையாட்டு-14

இங்கே சொல்லப்போவது ஒரு அரசியல் நிகழ்வு என்றாலும், இதில் தமிழ் விளையாடும். அந்த சுவாரசியம் கருதியே இங்கே பதிவிடுகிறேன். அதற்கு முன் ஒரு கதையை சொன்னால்தான், திருவிளையாடல் புராணம் தெரியாதவர்களுக்கு புரியும். கதையை சொல்லிவிடுகிறேன்.

திருவாசகம் எழுதிய மணிவாசகப் பெருமான், பாண்டிய மண்னனிடம் அமைச்சராக இருந்தார். குதிரை வாங்கி வரும்படி பணம் கொடுத்தனுப்பினான் மன்னன். சென்ற இடத்தில், அந்தப் பணத்தை கோயில் திருப்பணிக்கு செலவிட்டுவிட்டார் மாணிக்கவாசகர். மன்னனுக்கு என்ன பதில் சொல்வதென்று மனம் கலங்கி சிவனை வேண்டினார். சிவன் உடனே நரிகளை பரி(குதிரை) ஆக்கி மாணிக்க வாசகரிடம் கொடுத்தார். அவற்றைக் கொண்டுபோய் மன்னனிடம் கொடுத்தார் மாணிக்கவாசகர். கொட்டடியில் அடைக்கப்பட்ட அந்த பரிகள்(குதிரைகள்) மறுநாள் காலையில் மீண்டும் நரியாகிவிட்டன்.

இதுதான் கதை. இப்ப விஷயத்துக்கு வரேன்.

அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து, எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு திமுகவில் சேர்ந்தார். பிறகு, மதுரையில் ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவில் மீண்டும் சேர்ந்தார். இது பற்றி கலைஞரிடம் நிருபர்கள் கேட்டபோது,

‘நரி பரியாவதும் பரி நரியாவதும் மதுரையில் இயல்புதானே” என்றார் கலைஞர்.

கலைஞர் இப்படிச் சொல்கிறாரே என்று காளிமுத்துவிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், ‘ நான் பரியானேனோ நரியானேனோ...இப்போது சரியாகிவிட்டேன்’’ என்றார். எப்படி விளையாடுறாங்க பாருங்க தமிழ்ல.

2 comments:

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_