Saturday, 22 August 2015

அதுதான் சுதந்திரம்

என்ன சுதந்திரம்?
எங்கே சுதந்திரம்?
எவருக்கும் இல்லை
இங்கே சுதந்திரம்...

வெள்ளையரை விரட்டிவிட்டு
கொள்ளையர் கையில் நாடு..
கொள்ளையரினும்
வெள்ளையரே மேல்.

இரவிலே வந்ததால்
இருட்டிலே கிடக்கிறோம்...

என்ன சுதந்திரம்?
எங்கே சுதந்திரம்?

எழுதி முடித்து நிமிர்ந்த
என்னைப் பார்த்து
என் பேனா சொன்னது.....

இத்தனை எழுத
உனக்குக் கிடைத்ததே சுதந்திரம்
அதுதான் சுதந்திரம்

தமிழ் ருசிக்கலாம் வாங்க 16



லண்டன் ரயிலில் சங்க இலக்கியப் பாடல்
======================================

லண்டன் மாநகரில் சுரங்கப் பாதையில் ஓடும் ரயிலில், உலகின் மிகச்சிறந்த கவிதைகளை, அந்தந்த மொழியிலும் ஆங்கில மொழி பெயர்ப்போடும் எழுதி வைத்தனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் இந்தப்பாடல்களைத் தொகுத்து “மண்ணுக்கடியில் மலரும் பாக்கள்” (Poems on the underground) என்று நூலாக வெளியிட்டுள்ளனர்.

அப்படி அந்த ரயிலில் எழுதி வைக்கப்பட்டுள்ள கவிதைகளில் சங்க இலக்கியமான குறுந்தொகைப் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

ஆம். சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று குறுந்தொகை. இதை சங்க இலக்கியங்களுக்கு வாயில் என்று கூறலாம். மிகவும் எளிய பாடல்கள். படித்துப் புரிந்துகொள்ள எளிது. இதைப் படித்தால், சங்க இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.
இத்தகைய சிறப்பு பெற்ற குறுந்தொகையில் இருந்துதான் ஒரு பாடலை, லண்டன் ரயிலில் எழுதி வைத்துள்ளனர். அந்தப்பாடல் இதோ....

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே.

தலைவனும் தலைவியும் கூடி மகிழ்கின்றனர். அதன் பின்னர், தலைவன் தன்னைக் கைவிட்டுவிடுவானோ என்ற அச்சம் தலைவியிடம் ஏற்படுகிறது. இதை அவளது முகக்குறிப்பைக் கண்டு தெரிந்துகொண்ட தலைவன், நாம் உள்ளத்தால் கலந்துவிட்டோம். நம்மைப் பிரிப்பது அரிது என்று சொல்லி தலைவியைத் தேற்றுவதுதான் இந்தப்பாடல். பாடலின் பொருள் இதோ...

என்னுடைய தாய் யாரோ...உன் தாய் யாரோ. என் தந்தையும் உன் தந்தையும் எந்தவகையிலாவது உறவினரா என்றால்? அதுவும் இல்லை.உன்னை எனக்கு முன்பே தெரியுமா? என்றால் தெரியாது. உனக்கும் என்னை இதுவரை தெரியாது. ஆனாலும்காதலால் நம் நெஞ்சங்கள் கலந்துவிட்டன். எப்படிக் கலந்துள்ளன தெரியுமா?
செம்மண் நிலத்தில் விழுந்த மழை நீர் எப்படி அதன் தன்மையாகிவிடுகிறதோ அதுபோல நம் நெஞ்சங்கள் கலந்துவிட்டன என்று காதலியிடம் கூறுகிறான் தலைவன்.

செம்மண் நிலத்தில் விழும் மழை நீர், மண்ணின் நிறமான செந்நிறமாக மாறிவிடும். செம்மண்ணின் சுவையையும் மணத்தையும் பெற்றுவிடும். அப்படி செம்மண்ணின் தன்மையாக மாறிய அந்த நீரில் இருந்து, செம்மண் நிறத்தையோ, மணத்தையோ, சுவையையோ பிரிக்க முடியாது.
அதுபோல காதலர் இருவர் நெஞ்சமும் கலந்துவிட்டது. இருவர் நெஞ்சமும் வேறு வேறு அல்ல. ஒரே தன்மையுடையதாகிவிட்டது. இனி அந்தக் காதல் நெஞ்சங்களைப் பிரிக்க முடியாது என்று சொல்கிறார் கவிஞர்.

இந்த அற்புதமானப் பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அதனால், இந்தப் பாடலில் வரும் அற்புதமான சொற்றொடரையே அவரது பெயராக்கிவிட்டனர். ஆம், பாடலாசிரியருக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்,...

செம்புலப் பெயல்நீரார்.

தமிழ் ருசிக்கலாம் வாங்க.. 15




கண்ணதாசனின் ஒற்றெழுத்து ஜாலம்.
===================================
பார்த்தேன்....ரசித்தேன்... 
பக்கத்தில் வரத் துடித்தேன்...
என்ற பாடலில்
மலைத்தேன் இதுவென மலைத்தேன்
என்று சொல்வார் கண்ணதாசன். மலைத்தேன் என்பதை ஒவ்வொரு
இடத்திலும் ஒவ்வொரு பொருளில் கையாள்கிறார்.
“மலைத்தேன்” ( மலையில் கிடைக்கும் தேன்) இதுவென மலைத்தேன். ஆச்சரியப்பட்டு மலைத்துப் போகிறேன் என்று அடுத்து பொருள் கொள்கிறார்.
இந்தப்பாடலில் இன்னொரு வரி.
மலர்த்தேன் என நான் இருந்தேன்
பருவத்தில் மலர்ந்தேன்
என்று சொல்கிறார்.
“மலர்த்தேன் என நான் இருந்தேன்” - மலரில் இருக்கும் தேனாக இருந்தேன். மலருக்குள் தேனாக இருந்தபோதும், மலராமல் இருப்பதால் வண்டு வந்து தேனருந்த முடியாத நிலை போல் இருக்கிறாள்.
”பருவத்தில் மலர்ந்தேன்” பருவம் வந்ததும் மலர்கிறாள். வண்டு வந்து தேனருந்தலாம்.
இங்குதான் கண்ணதாசன் தன் சூட்சமத்தைக் காட்டுகிறார்.
பருவம் எய்தும் முன் “மலர்த்தேன் என நான் இருந்தேன்” என்று சொல்கிறாள். இதில் ”மலர்த்தேன்” என்பதில் வருகின்ற “த்” வல்லின ஒற்று.பருவத்தில் மலர்ந்தேன்.... இதில, “மலர்ந்தேன்” என்பதில் வரும் “ந்” மெல்லினம்.
பருவமடைந்தபிந்தான் பெண்மைக்கு மென்மை கூடுகிறது. பருவம் அடையும் முன் அவள் மென்மையாக இருக்கமாட்டாள் என்பதால், .
“மலர்த்தேன் என்று வல்லின ஒற்றை பயன்படுத்துகிறார். பருவத்தில் மலர்ந்தேன் என்பதில், பருவடைந்ததும் மென்மை கூடுகிறாள் என்பதால் மெல்லின ஒற்றை போடுகிறார். ஆஹா...கவியரசர் அல்லவா?

தமிழ் ருசிக்கலாம் வாங்க 14



கவியரசர் கண்ணதாசனின் நுட்பம்.
=================================

என்னப் பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை

என்று ஒரு பாடலில் வரும்.

தமிழ் இலக்கணத்தில் ஒரு எழுத்து மறைவதை மெலிதல் என்பார்கள். அதாவது வல்லின ஒற்று மறையுமானால் வலி மெலியும் என்றும், இடையின ஒற்று மறைதலை இடை மெலிதல் என்றும் சொல்வார்கள்.

இந்தப்பாடல் வரிகளை மீண்டும் படியுங்கள்.

என்னப் பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை

இதில் “பார்வை” என்பதில் இடையின ஒற்று “ர்” உள்ளது. ர் மறைந்தால்
”பார்வை” என்பது “பாவை” ஆகும்.
அவன் பார்க்கிறான். அதனால் அவளுக்கு காதல் மிகுந்து காமமும் மிகுகிறது. அதன் காரணமாக இடை மெலிகிறாள். என்பதுதான் பாடல் பொருள். அதற்குள்ளும், “பார்வை” என்ற சொல், இடை மெலிந்தால் “பாவை” என்று எவ்வளவு நுட்பமாக சுவை கூட்டுகிறார் பாருங்கள் கவியரசர்.



விதைக்கப்பட்டுள்ளார்

அறிவு விதைக்கப்பட்டுள்ளது
ஆற்றல் விதைக்கப்படுள்ளது
அன்பு விதைக்கப்பட்டுள்ளது
கனவு விதைக்கப்பட்டுள்ளது
கலாம் புதைக்கப்படவில்லை
விதைக்கப்பட்டுள்ளார்.
இளைஞர்கள் இதயங்களில்..

Monday, 17 August 2015

திருவாசகத்தில் பிறந்த இறை வாசகம்




எட்டாம் திருமுறையாம்..சைவத் திருமுறை எடுத்து ...51 திருப்பதிகங்கள் தொடுத்து...656 பாடல்கள் சேர்த்து மாணிக்கவாசகனார் கோர்த்த பாமாலை..திருவாசகம்....அத்திருவாசகம் படித்து திளைத்து ..ஊண் உருகி..சிவன் கண்டோர் பலர்...தனித்தமிழ் கண்டோர் பலர்

தென்னாடுடையவன் .....தன் பாதம் நடனமிட ..நாவினிக்கும் தமிழை...மாணிக்கனின் மணி வாய் மொழிய..இறை புகுந்து திருவிளையாடல் நடத்தி தனக்கென பெற்றுக் கொண்டான்..அன்று

இன்றும் அதே போல்..தன் முன்னோனை.....தன் ஞானகுருவை...என் ஆசான் சிந்தை புகுந்து வாசிக்க வைத்து....கண்ணீர் மல்க திகைக்கவைத்து...கருத்தாழமாய் நெஞ்சில் பதிக்க வைத்து ..நீயும் ஒரு பாமாலை கட்டி ..எனக்கு சலங்கை எடுத்துக் கொடு ....ஆடி நாளாயிற்று ..என்று சிறுபிள்ளையாய்.....தன் தமிழை தான் கேட்டுப் பெற்றுக் கொண்டான்

திருவாசகத்துக்கு உருகார்..ஒருவாசகத்துக்கும் உருகார்..என்பது மூதுரை
அவ்வுரை உரைத்த அறிஞர் பெருமக்கள் இன்று இருந்திருந்தால்.......சவமாய் கிடக்கும் .ஜீவனெல்லாம்..சிவம் சிவம் என்றே உயிர் உருகி..பிறவிக் கடந்தேறும்,.....என் ஆசானின் ஒருவாசகம் படித்து என்பார்

ஒருவாசகம் ஒன்று வந்தது.....உடுக்கையின் ஒருபுறம் தமிழ் தட்ட......மோனநிலை சிவன் மெல்ல நெற்றிக்கண் திறந்தான்...

ஒன்று பத்தாக......சடாமுடியன் இறுக்கி கூந்தல் முடிந்து சலங்கை கட்ட...போற்றி பத்து ..புகழ் பத்து...ஆட்கொள்ள பத்து...அருள் பத்து..என பத்துபத்தாய்...முத்து தமிழ் ஒலிக்க....உற்சவமடைகிறது....சிவன் ஆடும் ருத்ரவதாண்டவம்

தில்லையம்பலத்தில் பிறந்த பிள்ளையை தன் நடன இசைத்தமிழுக்கு தானே தேர்ந்தெடுத்துக் கொண்டான்.......பறையொலி முழங்க...பம்பை அதிர ...பொன்னம்பலமதில்..எந்தை நடம்புரிய..என .நடனமிடுடா...நற்கூத்தனே...என்று எங்கள் ஆசான் மொழிய..இன்னும் இன்னும் உற்சாகமாய்......மெய் மொழியாய் தன்னை ஆசானிடம் ஒப்புவித்து உடல் ஆளுமையாய் அவரை தன்னுடன் எடுத்து ஆடுகிறது சிவம் எனும் உற்சவம்

சன்னிதான பரம்பொருள் சலங்கை எடுத்த நொடி..என் தோழி மீராவால்...ஆரம்பிக்கப்படுகிறது..எங்கள் ஆசானின் இறைத் தமிழ் சேகரிப்பு......தனித் தமிழ் பக்கமாய்....திருவாசகத்தில்பிறந்த ஒருவாசகம் எனும் தலைப்போடு......முகநூலில்

2000க்கும் மேற்பட்ட....இறைஅன்பர்கள் வாசித்து நெகிழ்ந்து மகிழ்ந்து...50 மேற்ப்பட்ட அன்பர்கள் தங்கள் பக்கத்தில்..பகிர்ந்தனர்.......

எங்கள் ஆசானின் திருமுறைப்பாடலில்

ஒருவாசகம்...62யை....2354 அன்பர்களும்
ஒருவாசகம்....61 யை...1210 அன்பர்களும்
ஒருவாசகம்...64யை....1201 அன்பர்களும்
ஒருவாசகம்....88யை.....1097 அன்பர்களும்
ஒரு வாசகம் 87 யை..937 அன்பர்களும்......வாசித்து நேசித்து...சிவனருள் பெற்று மகிழ்ந்தனர்

எங்கள் ஆசான் வாசகத்தின் பெரும் வெற்றி..இறைபக்தி இல்லாதோரையும் தன் வசமிழுத்து வாசிக்க வைத்து,,,நிமிட நொடி சிவன் நினைத்து பூஜிக்க வைத்தது தான்.......

தொல் இலக்கிய வரலாறு பழமை கொண்ட தமிழுக்குத் தான் எத்தனை.....ஆளுமை...அடிமுடிகாணா சிவனையே..என் ஆசான் காண ..கட்டியிழுக்க வைத்துவிட்டதே...

அரசன் அம்பு ஆள் சேனை தவிர்த்து..அன்று பூசலார் கட்டிய மனக் கோவிலில்...எழுந்தருளிய சிவன்...இன்று என் ஆசான் இறைத்தமிழில் பிறந்தெழுந்து...ஆட்சிமைசெய்து ருத்ரவம் ஆடிவிட்டான்

அன்பெனும் அமைதி நிலை மறந்து அன்றாட சூழல் சிக்க உழன்று..கடைந்தெடுக்கும் கவலை வாட்ட....நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில்......ஆலயம் செல்ல வழியில்லை...ஆண்டவன் போற்ற நேரமில்லை......அமைதியாய்..தன்னுள் சிவம் காணவும் பொறுமையில்லை..எனப் ....பாவமறியாது பிறவி கடக்கும்...மானுடத்தை

தான் தேடி வந்து ...இழந்துகொண்டிருக்கும் இறை நம்பிக்கையை இறுக்கி உறுதிபடுத்த ..என் ஆசான் மொழி தேர்ந்தெடுத்து...தேடி ஆடி..ஒவ்வொரு மனிதன் வீடும் தேடி வந்துவிட்டான்...அந்த திருவிளையாடல் பெருமான்

ஒன்று தொட்டு..தொன்று தொட்டு ..தமிழ் வளர..இறை வந்து புக..சிலிர்த்த உடல் சிந்திக்க மறக்க......விழி வழி கசிந்து உருகத்தொடங்குகிறது உயிர்........கண்ணீராய்

சைவமும் வைணவமும் சத்தமின்றி...ஆதார சக்கரங்களை..ஆட்டி...ஆடவைத்துக் கொண்டே தான் இருக்கிறது இன்னும் இப் பூவுலகை.....

இதனை சத்தமில்லா சாதனையாய்...மீண்டும் ஒருமுறை....திருவிளையாடல் படுத்தி இருக்கிறது
எங்கள் ஆசானின் இறைத்தமிழ்.......

சிவன் புகுந்த தமிழே.....எம் கண் முன் வந்த குருவே,,,,என்ன வென்று சொல்வேன்.முதலாய் உம் மொழி நான் படிக்க .என்னிடம் தந்து..பின் முகநூல் பதியும் உன் கரைகாணா அன்பையும்....ஓவ்வரு பாடலின் வழியும்...நீர் ..என்னில் இறைபுகுத்தியமையையும்........

சிரம் வணங்கி....கண்கசிகிறேன் அய்யா...குருவென..உன் வழி சிவன் கண்டமைக்கு....சிவன் வழி..இப்பிறவி கடந்தேற உம்மைக் கண்டமைக்கு.......

99வது பாடலில்....நிலைபெற..நிதானமாடும் சிவனின் அனல் வெம்மை தாங்கமல்..ஒர்கணம் உயிர் அதிர்வு தெரிந்தது என்னில் என்றால்...என் பிறவி இத்தோடு அற்றுப் போகும் என்பதும் உண்மையே........

மே மாத வெளியீடாய்..எட்டாம் திருமறை தழுவி...வெளிவரும் இவ் இறைவாசகம்....உலகப் பொதுமறை போல்......அழியாப்புகழ் பெறும் நிச்சயம் என்பதில் ஐயமேதுமில்லை

சைவசித்தாந்த கழகத்தில் தனியிடம் பெற்று..ஆய்வுரையாய்...எடுத்துரைக்க....என்சிவன் அருள் புரிவான் என்றும் ஆசானே...குரு என....வணங்குகிறேன்...நின் மொழி பணிந்து....சிவன் கழல்களில்....ஓம் நமசிவாய....சிவாய நம ஓம்....!!!!!!!!!!!!!!!!!!!! —


    DR SUNDARI KATHIR

சதமடித்துவிட்டார்!!




அவனை நான் தேடிச் சென்றதில்லை. நாடிக் கேட்டதும் இல்லை. ஆனாலும், என்னை இழுத்துப் பிடித்து தன்னை எழுத வைத்திருக்கிறான். என்னை அவன் தேர்வு செய்தது எனக்குப் பெருமை. அதற்குத் தகுதி உடையவனாக என்னை ஆக்கியிருக்கிறான் என்பதில் மகிழ்ச்சி.

என் ஞான குரு மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகத்தை அழுதும் தொழுதும் வாசித்திருக்கிறேன். வாசித்தும் நேசித்தும் கண்ணீர் பெருகியிருக்கிறேன். அவர் போல் அல்ல....அது சாத்தியமும் அல்ல...ஆனாலும், அவர் கருத்துகளை உள் வாங்கிக் கொண்டு எழுத வேண்டும்...வாசிப்போர் உருக வேண்டும் என விரும்பினேன்.

இதை நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, எழுது என்று உற்சாகப்படுத்தினார்கள். இதில் முக்கியமானவர் எங்க டாக்டர் Sundari Kathir
முக நூலில் தினம் ஒரு பாடல் என பொருளோடு எழுதத் தொடங்கினேன். என் எழுத்தை வாசித்தும் அதில் இறையை பூசித்தும் என்னை உற்சாகப்படுத்தியவர்கள் பலர். இதில் முக்கியமானவர்கள் Pathy Ayyappan, Deepapriya Ramanan,Sivarama Krishnan iva ,Manju Bashini Sampathkumar , Manchula Jai .இவர்கள் தந்த உற்சாகத்தால்தான் இது சாத்தியமாயிற்று.

முகநூலில் தினமும் நான் எழுதிய பாடல்கள் எங்கோ கரைந்துவிடாமல், அதற்கென ஒரு பக்கம் உருவாக்கி, நண்பர்களுக்கெல்லாம் அழைப்புவிடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இதை வாசிக்க வைத்து 100 பாடல்களையும் சிந்தாமல் சிதறாமல் சேமித்துத் தந்தவர் முகநூல் தோழி Meera Blossom.
100 வது பாடல் எழுதி முடித்து, படித்துப் பார்த்தேன். கண்கள் பனித்தன. என் எழுத்துகள் எனக்கே இனித்தன. நம்ப முடியவில்லை...நானா எழுதினேன்... ஆனாலும் 100 பாடல்கள் நிறைவு பெற்றுள்ளன. சதமடித்துவிட்டேன் என சொல்ல முடியவில்லை. சதமடித்துவிட்டார் சிவன்.

இந்த நூறு பாடல்களும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவரும். ஆனந்தக் கூத்தன் நடம் புரியும் சிதம்பரத்தில் மே மாத இறுதியில் வெளியீட்டு விழா.

உருக வைத்து
கண்ணீர் பெருக வைத்து
என்னை எழுத வைத்த
என் ஞான குரு
மணிவாசகப் பெருமானின்
மலரடிகளில்
சமர்ப்பிக்கிறேன்
இந்நூலையும்
என்னையும்.

சிவவாசகம்




மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தைப் படிக்கும் போதெல்லாம், கண்ணீர் பெருகும். திரும்பத் திரும்ப படித்திருக்கிறேன். அதன் தாக்கம், அதுபோல எழுத முயற்சித்தால் என்ன என தோன்றியது. அதன் விளைவுதான் கீழே உள்ள பாடல். அட..எழுதுனது நான்தாங்க..

ஆலயந்தொறும் உனைத்தேடி
ஓடுகின்றிலேன் அருள் நிறையுன்

அடியார்தம் கூட்டத்துள்
கூடுகின்றிலேன் உன்னாமம்

முப்போதும் செந்தமிழால்
பாடுகின்றிலேன் நாட்காலே

நறுமலர்க் கொய்துனக்கு
சூடுகின்றிலேன் தேகம்முழுதும்

ஏகன் உனக்காக்கி உள்ளம்
ஆடுகின்றிலேன் அத்தா

எனையாண்டாய் இனியேனும்
எப்போதும் தப்பாது உன்நாமம்
தரித்திடுமோ என் நாவும்.

கலை மிகு குறள்கவியமுதம்





அற்புதம் அற்புதம்
அகர அற்புதத்தில் ஒரு
அமுத சொற்பதம்........

திருக்குறள் தழுவிய

கலை மிகு குறள்கவியமுதம்

வந்த துயர் விலக்கி
வாட்டிய துயர் தவிர்த்து
வசந்த முத்து மொழி தொடுத்து
வாசனை மாலையாய்
அய்யன் வள்ளுவனுகோர்
அடர்செறிவு சொல்கவி சிகரம் அமைத்து

எதுவும் தனதில்லை
எல்லாம் இறைக்கே
என்னுயிர் அய்யனுக்கே
என்னுயர்வும் அய்யனுக்கே

என்றேறி ...இன்று இளைப்பாறும்
அன்னையே .........அன்னைமொழியே

என்னே சொல்லி நின்னை நான் வணங்க....

திரும்பிப் பார்க்கிறேன்
தித்திக்க திகட்டாமல்
தாங்கள் செழுமை செய்தேறிய
சிகரப் பாதையை

முப்பத்தின் மூன்று ஆண்டுக் கனவாய்
மனதில் விதையேறிய விருட்சத்தை
மகிழ்வென பதியமிட....
மருந்தென அடைகாத்து

மா திரு காலம் வர

முளைகட்டிய சொல்லெடுத்து
காத்திருந்த கருநிறையே
எண்ணியசெயலை திண்ணியவாறே
முடித்து நிற்கும் திமிர் உரையே

சுற்றிப் பகை சுற்றமெனவே வந்து
சுற்றியபோதும்

வளர்த்த நன்றியின்றி
உதவிபெற்ற பைரவமே
எட்டி தூரோகம் இழைத்த போதும்

இனப்பிரிவு மாயை
இச்சாதாரியாய் மொழிக்கொடுக்கிட்டு
சீண்டிய போதும்

மனிதன் நெருங்கும்
முப்பெரும் தீமையை
மூவாசைக்கொடுமையை

எல்லாம் எதிர்த்து ...
ஏறி சிம்மாசனமிட்டு
என் அன்னை மொழியே
நீயின்றி எதுவும் என் உயிரில்லை
என்றே நேசித்து,....

உணர்ந்து உருகி
உள்சென்று தொழுது
உவகையாய் எழுந்து
உயர்திரு தருவாக்கிய
உயர்நிறை அறிவே

அண்ணனெனும் ஆசானே

கட்டமைத்த கட்டிடத்தை
எடுத்துரைத்து
தட்டிப் பார்த்து மொழி சொல்ல
சிறுபிள்ளை சொல்லெடுத்து
சித்தாள்கள் பலர் வந்த போதும்

சொல்லும் மொழியும்
சொல்லவந்தோர் கருத்தும்
எனக்கோர் ஆசானே

என்றினும் பொறுமையாய்
நின்றெனத் தாங்கி
நின் பெருமைவராது
நிலப் பொறுமை தாங்கிய தங்க மகனாரே

என்னே தவம் செய்தாள்
தமிழன்னை உன்னை தன் மகனாய் மடிதாங்க

உலகப் பொதுமறைக்கோர்
உவகை கவி மறை எழுதி

சிகரம் எழுந்த சீர் மொழியெ

முப்பாலை அமிழ்தென கரைத்து
ஆயுள்செழிக்க நீர் தர

சொட்டும் தேனை
சொட்டுவிடாமல் பருக முடியாமலே
கருத்து மொழியிடாமல்
திணறி ஆயுள் குறைத்தேன் நான்

ஈரடித் தமிழில்
வாழும் ஆறடித் தமிழாய்
சான்றோன் ....உம்மைக் கண்டேன்

சொல்லும் மொழியும்
உம்மையே கண்முன் நிறுத்தியது
அறம் பொருளென ..அமைச்சு குடிமக்கள்
காக்கும் மன்னன் வளமையில்

கொஞ்சும் மொழியும்
கொழுந்து கனிவும்
சிலேடை வம்பும்
சிணுங்கும் சொல்லும்

இன்னும் இளம் வயதே நீர் என
நின் மொழி
அடையாளமிட்டது

மொழி கண்டவர் வியப்பில் ஆள
மொழி ஆள முடியாதவர் பொறாமை துயில

பொல்லாங்கு செய்தவரையும் பொறுக்கும் நிலமாய்
நிகழ்தாங்கி உருஎழுந்து
உயரம் காட்டிய

உயர்பெருமைதிமிர் மலையே

என் தமையனெனும்
பிரமாண்டபெருந்தன்மையே

என்றும் நின் மொழி விரல் பிடித்து நடந்து
நின்மொழிக் குடை கீழ்
இளைபாறி பெருமிதம் கொள்கிறேன்

நெஞ்சார்ந்த மகிழ்வை
என் சொல் ..என்ன சொல்லெடுத்து
நான் சொல்லினும்

விழியோரம் துளிர்க்கும்
ஆனந்த கண்னீரையும்
மனமெங்கும் நிறையும்
மத்தாப்பு மகிழ்வு நிம்மதியையும்

சொல்ல எனக்கோர் மொழி இங்கேது

கல்வெட்டு சாதனை என் ஆசான் செய்து
காலம் வென்று
இதோ இவ்வள்ளுவர் சிலை இணையாய்
இந்த வள்ளலார் ..சொல் ஆள

ஈராயிரம் ஆண்டு கடந்தும் வாழும்
இன்பக் காட்சி விழி நிறைய

வழியும் கண்ணீர் ...வழிய விட்டு

வணங்குகிறேன் மொழிச் சிகரமே

வாழிய தமிழ் மகனார்...வாழும் உயிரகள் வாழ்வணைத்தும் தனதாக்கி

இனிய வணக்கங்கள் ஆசானே....

இனிய தமிழுக்கு இளநிலவன் பாராட்டு.




திருக்குறள் கவிதைகள் 500 எழுதி முடித்துள்ளதை அடுத்து, எங்க டாக்டர் சுந்தரி கதிர் எழுதிய வாழ்த்துக் கவிதைக்கு அன்புச் சகோதரர் திரு பாலச்சந்தர் அவர்கள் பதிவு செய்த கருத்து கண்டு நெகிழ்ந்து போனேன்.

திருக்குறள் தேர்...
திருவடம் பிடித்திருக்கிறார்.
அவர் அருகில் நான்...
அவருக்கு உதவவா?
அதற்கு முடியுமா என்னால்...
அதற்கல்ல....
தேரிழுக்கும் அவர்
தேகம் வடியும்...
வேர்வையை துடைக்க!
தேவை ஓய்வென்றால்
தோகை சாமரம் வீச!

என்ற அவரின் வரிகளைப் படித்து, விழி நீரைத் துடைத்துக்கொண்டேன். இதற்கெல்லாம் நான் தகுதிதானா என எண்ணியபோது, பழந்தமிழ் வரலாறு ஒன்று என் நினைவுக்கு வந்தது.

சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையக் காணச் சென்றார் புலவர் மோசிகீரனார். மன்னர் வெளியில் சென்றிருந்தார். பயணக்களைப்பில் இருந்த புலவர், கண்ணில் பட்ட ஒரு கட்டிலில் படுத்துவிட்ட்டார். அது, அரசின் முரசுக் கட்டில். அதில் வைக்கப்பட்டிருந்த முரசு நகர்வலம் போயிருந்தது. முரசுக்கட்டில் புனிதத்துவம் மிக்கது. அதில் மன்னர் உட்பட யாரும் உட்காரவோ படுக்கவோ கூடாது.
அரண்மனை திரும்பிய மன்னன், முரசுக்கட்டிலில் யாரோ படுத்திருப்பதைப்பார்த்து, கோபம்கொண்டு, உடைவாளை உருவியபடி வெட்டிவீழ்த்த, முரசுக்கட்டிலை நொக்கி விரைந்தான். அருகில் சென்றபோதுதான் தெரிந்தது, படுத்திருப்பது புலவர் மோசிகீரனார் என்று. உடனே, உடைவாளை வீசிவிட்டு, அருகில் இருந்த வெண்சாமரத்தை எடுத்து, புலவருக்கு வெண்சாமரம் வீசினான் மன்னன்.
தமிழுக்கு அவன் அளித்த மரியாதை அது. அப்படித்தான்...திரு பாலச்சந்தர் அவர்கள் அளிக்கும் மரியாதையும், தமிழுக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதை அறிவேன். அவரின் தமிழ்ப்பற்றுக்குத் தலைவணங்குகிறேன்.

அவரின் முழுமையான பதிவு இதோ...

திருக்குறள் தேர்...
திருவடம் பிடித்திருக்கிறார்...
திடமாக..
தடுமாற்றம் ஏதுமின்றி
தனியாகவே இழுக்கிறார்!
எத்தனை பெரிய தேர்
எப்படி முடிகிறது இவரால்....
எல்லோரும் மலைக்க...
எவ்வளவு லாவகமாக
எவ்வளவு எளிமையாக
எவ்வளவு அழகாக
எவ்வளவு கலை நயத்தோடு
எவ்வளவு அறிவாற்றலோடு...
எப்படி இழுக்கிறார் தேரை!
எல்லோரும் ஒன்று பாருங்களேன்!
தனிவித்தை படித்தவரோ..
தன்னம்பிக்கை சிகரமோ..
தமிழ்த்தாய் பாலகனோ..
தமிழ் மகன் என்ற வீரமோ!
அவர் அருகில் நான்...
அவருக்கு உதவவா?
அதற்கு முடியுமா என்னால்...
அதற்கல்ல....
தேரிழுக்கும் அவர்
தேகம் வடியும்...
வேர்வையை துடைக்க!
தேவை ஓய்வென்றால்
தோகை சாமரம் வீச!
திரு.இரா.குமார் அவர்களின்
திருப்பணி...
திருத்தொண்டு...
தொடரட்டும்!
தமிழ்த்தாய் கழுத்தில்
தனிநகையாய் அது மிளிரட்டும்!
ஆண்டவனை வேண்டுகிறேன்...
அவன் அருள் புரியட்டும்!
------------------------------------------------------------
சார்....தங்களின் அன்புக்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதாது.நன்றி என்பது சொல்லப்படுவது அல்ல. அது செய்யப்படுவது. உங்களின் அன்புக்கு நான் என்ன செய்துவிட முடியும்? என்னிடம் இருக்கும் தமிழைத் தருவதை தவிர...

குறளமுதம் 1330




அகரம் தொடங்கி
சிகரத்தில் இன்று
================
ஒரு மாபெரும் பணி....
அன்னை மொழியின் அருளாலும்
ஐயனின் துணையாலும்
33 ஆண்டு கனவு
நனவாகியுள்ளது இன்று.
ஆம்....
திருக்குறள் முழுமையும்
ஒவ்வொரு குறளையும்
ஒரு புதுக்கவிதையாக எழுத வேண்டும் என்று
படிக்கின்ற காலத்திலேயே ஆசைப்பட்டேன்.
அது இப்போது நிறைவேறியுள்ளது.

ஒரு குறளை புதுக்கவிதையாக எழுதி,
இப்படி எல்லா குறளையும் எழுதலாமா? என்று
முகநூலில் பதிவிட்டேன்.
எழுதுங்கள் என்று நட்புகள் உற்சாகம் கொடுத்தனர்.

2014 ஏப்ரல் 9ம் தேதி தொடங்கினேன்.
தினம் ஒரு குறள் எழுதத்தான் முதலில் திட்டமிட்டேன்.
அதன்படி, முடிப்பதற்கு 4 ஆண்டுகள் ஆகும்.

தினம் ஒரு குறள் எனத் தொடங்கி,
பின்னர் ஒரு பாலுக்கு ஒன்று வீதம்
தினம் 3 குறள் என்று எழுதி,
அது வேகம் பிடித்து
தினமும் 8, 9 என்றாகி 20, 25 குறள்கள் எழுதினேன்.
பதினான்கே மாதத்தில்

1330
=====
குறள்களையும் புதுக்கவிதையில் எழுதி நேற்று நிறைவு செய்தேன்.
.
இந்த 14 மாதத்தில்
எத்தனையோ இடையூறுகள்.
துரோகங்கள்
துவள வைக்கும் சோகங்கள்
உக்கிர வெயிலால் உடல் சோர்வு
பணிச்சுமை,
வெளியூர் பயணம்
இப்படி தடை போட்டவை பல.

தாய்மொழிப் பற்றால்
குறள் நெறிக் கொள்கையால்
எடுத்தது முடிக்க வேண்டும் என்ற உறுதியால்
அகரம் தொடங்கியவன்
சிகரம் தொடுவேன் என்று சொல்லி
தளராது எழுதினேன்.

ஐயன் சொல்லும் பொருள் மாறிவிடக்கூடாது.
அதே நேரம் கவிச்சுவை குறையக்கூடாது.
ஐயனைக் குருவாகக் கொண்டு
அவரை மீறாமல் இருக்க வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்து எழுதினேன்.

இங்கே இதைப் படித்தவர்கள் சிலர்தான்.
தரத்துக்கான தளமில்லை இது என்பதறிந்தேன்.
ஆனால் படித்த சிலருள் சிலர்,
குறள் கவிதை படித்து மனம் மாறியதாகத் தெரிவித்தனர்.
இது, எழுத இன்னும் ஊக்கம் அளிப்பதாக இருந்தது

உலகப் பொதுமறையாம்
திருக்குறள் முழுவதையும்
புதுக்கவிதையில் எழுதி முடித்ததை
அதுவும் 14 மாதங்களில் முடித்ததை
எண்ணும்போது
எனக்கே இன்னமும் வியப்பாக இருக்கிறது.
அனைத்தும்
அன்னை மொழியால்
ஐயன் அருளால்
அன்பு நட்புகளின்
ஆதரவால் மட்டுமே
கை கூடியது
இமாலய சாதனையாக
எழுதி முடித்து
இளைப்பாரும் இந்த நேரத்தில்
எல்லாருக்கும் என் நெஞ்சு நிறை நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இப்பணி இன்னும் முடியவில்லை.
தொகுத்து நூலாக வெளியிட வேண்டும்.
அதுவரை ஓய்வில்லை.
உங்கள் அன்பான ஆதரவோடு அதுவும் முடியும்.
காத்திருங்கள்

குறளமுதம்
============
வெளியீட்டு விழாவுக்காக.
நானும் காத்திருக்கிறேன்
விழா எப்போது நடக்கும்
நட்புகளைக் காணலாம் என்று.
நன்றி நட்புகளே.
வணக்கம்.
---
அன்புடன்
இரா. குமார்

குறளமுதம் 1000




ஐயன் அருளால் ஆயிரம்
=======================
அகரம் தொடங்கியவன்
சிகரம் தொடுவேன் என
ஐயனின் அருளால்
தமிழ் தந்த துணிவால்
எழுதத் தொடங்கினேன்.
ஏற்றிவிட்டான் ஐயன்
படிகள்

ஆயிரம்
=========
ஆம்.
இன்றுடன்
ஆயிரம் குறள்களை
புதுக்கவிதை நடையில்
எழுதி முடித்துள்ளேன்.

எத்தனையோ இடர்பாடுகள்
துட்டர்களுக்கும்
துரோகிகளுக்கும் இடையில்
துவளாதிருக்க வேண்டிய நிலை.
அழுத்தும் பணிச்சுமை
கொளுத்தும் வெயிலால் சோர்வு
இத்தனைக்கும் இடையில்
இடையறாது
எழுத முடிந்தது என்றால்
இங்கிருக்கும் நட்புகள் தந்த
ஊக்கமும் உற்சாகமும்தான்.
இன்னும் இருக்கிறது

330

முடிப்பேன் எழுதி
இம்மாத இறுதிக்குள்.
என் எழுத்தை
வாசித்தும்
நேசித்தும்
ஊக்கப் படுத்தும்
எல்லா நட்புகளுக்கும்
என் நெஞ்சம் நிறை நன்றி.

குறளமுதம் - 500




ஐயன் அருளால் 500
=================
தமிழன்னையின் கட்டளை ஏற்று
ஐயன் திருவள்ளுவர் திருவருளால்,
குறள் ஒவ்வொன்றையும் 
எளிய தமிழில்,
புதுக்கவிதை நடையில்
எழுதத் தொடங்கினேன்.

பணிச்சுமை
நேரமின்மை
வெளியூர் பயணம்
இத்தனைக்கும் இடையில்
எழுத வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு குறள் என
1330 குறளுக்கும் எழுதி முடிக்க
நான்கு ஆண்டுகள் ஆகும் என்று கருதியே
எழுதத் தொடங்கினேன்.

ஒரு நாளைக்கு
ஒன்று என்பது மூன்றாகி
எட்டாகி, பத்தானது.

எழுதத் தொடங்கி
ஓராண்டுகூட ஆகவில்லை.

அன்னைத் தமிழின் அருளாலும்
ஐயனின் கருணையாலும்
குறைந்த எண்ணிக்கையே ஆனாலும்
நிறைந்த மனத்துடன்
சில நட்புகள் கொடுத்த உற்சாகத்தாலும்
இன்றுடன்
திருக்குறள் கவிதைகள்

=======================
500
=========================
எழுதி முடித்துள்ளேன்.
இன்னும் இருக்கிறது 830.

இதே வேகத்தில் எழுதி முடிக்கவும்
இந்த ஆண்டிலேயே
நூலாக வெளியிடவும் விருப்பம்.
அன்னை, ஐயன் அருளும்
அன்பு நட்புகளின் ஆதரவும்
இருப்பின் அது நடக்கும்.
அருளும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்  
  • வெற்றி நிச்சயம்.வாழ்த்துகள்



குறளமுதம்





இன்று முதல், திருக்குறளை புதுக்கவிதை பாணியில் சொல்ல முயற்சிக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்துகளுடன். இந்த முயற்சி வெற்றி பெற எப்போதும் போல நீங்கள் துணை நிற்க வேண்டுகிறேன்.
முப்பாலில் முதலில் மூன்றாம் பாலை எழுதுகிறேன். கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்; எனவே, எழுதுவதில் அதிகம் சிரமம் இருக்காது என்பதால்தான். இதை எழுதி முடித்தால், இந்த அனுபவம் மற்ற இரண்டு பால்களையும் சுவாரசியமாக எழுத கை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

மூன்றாம் பாலில் 25 அதிகாரம். 250 குறள்கள். ஒரு நாளைக்கு ஒரு குறள் என்று வைத்தாலும் 250 நாட்கள் ஆகும். இடையிலே சில நாட்கள் எழுத இயலாமல் போகும். எப்படி கணக்கிட்டாலும் 300 நாட்கள்; 10 மாதம் ஆகும் முடிக்க. ஒரு தாய் கருவைச் சுமந்து பெறுபவது போல. இது ஒரு தவம். எழுதி முடித்தால் அது ஒரு வரம். தெய்வப் புலவர் திருவள்ளுவரே வாழ்த்தி வார்த்தைகள் எடுத்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடனும் உங்கள் வாழ்த்துகளுடனும் தொடங்குகிறேன்.