Wednesday 11 February 2015

குறும்பு-21


அதே விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி. அதே பேராசிரியர். என் குறும்புகளை சகிக்க முடியாத அவர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்னை மட்டம் தட்ட ஆரம்பித்தார். நானும் விடுவதில்லை. ஒரு நாள்,

“மாகவிஞன் கீட்ஸ் எது வரைக்கும் வாழ்ந்தான்?” என்று கேட்டார்.

நான் உடனே, ‘சாகுற வரைக்கும் வாழ்ந்தான்’ என்றேன்,

அவர், ‘பதில் தெரிஞ்சா சொல்லு. இல்லன்னா சுழியை அடக்கிகிட்டு சும்மா இரு’ என்றார்.
நான் சொன்னேன். ’எனக்கு பதில் தெரியும். நீங்க கேட்ட கேள்வி அப்படி. அதுக்கு ஏத்த மாதிரி பதில் சொன்னேன்’ என்றேன்.
‘என்ன கேட்டேன்?’ என்று கேட்டார்.
‘எத்தனை வருடம் வாழ்ந்தான் என்றோ, எத்தனை வயது வரை வாழ்ந்தான் என்றோ கேட்டிருந்தால் 30 ஆண்டுகள் வாழ்ந்தான் என சொல்லியிருப்பேன். எதுவரை வாழ்ந்தான்னு நீங்க கேட்டிங்க. சாகுற்வைக்கும்தானே ஒருத்தன் வாழ முடியும். அதனால அப்படி சொன்னேன். இனிமேல் கேள்வியை சரியா கேளுங்க’ என்றேன்.
பாவம் அவர் இப்ப நினைச்சா எனக்கே வருத்தமாதான் இருக்கு.


குறும்பு-20

அன்போடு என்னை வாழ்த்தும் அதே பேராசிரியர். பெரியோர் சொல் கேட்பது பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது
‘ஆசிரியர் சொல்வதை மணவன் கேட்க வேண்டும்’ என்றார்.

ஆசிரியர் சொல்வதை மாணவன் ஏன் கேட்க வேண்டும் ஐயா?’ என்று கேட்டேன்.
‘மாணவனைவிட ஆசிரியர் அறிவாளி. அதனாலதான்’ என்றார்.
‘அப்படியாங்க ஐயா’ என்றேன.
‘வேற எப்படி?’ என்று கேட்டார்.
‘டெலிபோனை கண்டு பிடிச்சது யாருங்க ஐயா?’ னு கேட்டேன்.
‘அதுக்கு இப்ப என்ன?’ என்று கேட்டார்.
‘சும்மா சொல்லுங்க ஐயா’ என்றேன்.
’கிரஹாம் பெல்” என்றார்.
‘ஆசிரியர்தான் அறிவாளின்னா...கிரஹாம் பெல்லோட ஆசிரியர் ஏன் டெலிப்பொனை கண்டுபிடிக்கலை?’ ன்னு கேட்டேன்.
அதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும்? வகுப்பு கேன்சல். டென்ஷனாகி போயிட்டாரு .....


குறும்பு-19



அதே பேராசிரியர்தான்.
அதேன்னாவா? என்னை வாழ்த்தும் அவர்தான். வகுப்பில் ஒரு நாள் ஒரு கட்டுரையை வாய்விட்டு சத்தமாகப் படிக்கச் சொன்னார். ‘அவன் செய்கின்றான்’ என்று இருந்ததை ‘அவன் செய்கிறான்’ என்று படித்துவிட்டேன். ‘நிறுத்து’ என்றார்.நிறுத்திவிட்டு அவர் முகத்தைப் பார்த்தேன். ’அதுல என்ன இருக்கு’ எனக் கேட்டார். அவன் செய்கின்றான்’ என்று இருக்குங்க ஐயா என்றேன். நீ என்ன படிச்ச என்று கேட்டார். மாற்றிப் படித்ததால் பொருள் மாறவில்லையே அதனால் என்ன என்றேன். அதில் இருப்பதை ஒழுங்கா படி என்றார். படித்தேன்.

அடுத்த சில நிமிடத்தில் அவர், ‘ கண்ணிலோ வாயிலோ தூசி பட்டால் துப்புறோம் இல்லையா?” என்று கேட்டார். ;நிறுத்துங்க ஐயா’ என்றேன். என்ன என்று கேட்டார். வாயில் தூசி பட்டால் துப்பலாம். கண்ணில் தூசி பட்டால் எப்படி துப்ப முடியும்? என்று கேட்டேன்.’அதெல்லாம் நீயே சரியா பொருள் கொள்ளணும் என்றார். நீங்க தப்பா சொல்லுவிங்க...நான் அதை சரியா புரிஞ்சுக்கணுமா? என்று கேட்டேன். பிறகென்ன? வழக்கம் போல வாழ்த்துதான்

குறும்பு-18



செய்யுளில் வரும் உவமையை ‘ஒருபுடை உவமை’ ’பலபுடை உவமை’ என இரண்டு வகையாக சொல்வார்கள். அதாவது ஒரு காரணத்தை வைத்து உவமையாக சொல்வது ஒருபுடை உவமை. ஒன்றுக்கும் மேற்பட்ட காரணத்துக்காக உவமையாக சொல்வது பலபுடைஉவமை.
அந்த, வாழ்த்தும் பேராசிரியர் ஒரு நாள், ‘ப்லபுடை உவமைக்கு ஒரு உதாரணம் சொல்’ என்றார்.
‘கொவ்வை இதழ்’ என்றேன்.
’பலபுடை உவமையா இது? எப்படி சொல்லு...” என்றார்.
’பெண்களின் இதழ் வடிவத்தில் கோவைப் பழம் போல இருக்கும். நிறமும் கோவைப் பழம் போல சிவப்பாக இருக்கும்’ என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘சரி உட்கார்’ என்றார் பேராசிரியர்.
’இன்னும் இருக்குங்க ஐயா’ என்றேன்.
‘இன்னும் என்ன இருக்கு?’ என்று கேட்டார்.
‘இனிப்பாக இருக்கும்’ என்றேன்.
‘இனிப்பா இருக்குமா? உனக்கு தெரியுமா?’ என்று கேட்டார்.
’எனக்குத் தெரியாதுங்க ஐயா. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்’ என்றேன்.
‘டெஸ்ட் பண்ணி பார்க்கிறேன்னு எங்கியாவது போய் அடி வாங்கிகிட்டு வராதே’ என்றார்.

’’பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்

என்று வள்ளுவரே சொல்லியிருக்காரே ஐயா” என்றேன். அவரால் ஒன்றும் சொல்ல்ல முடியவில்லை. ஆனாலும் கோபத்தைக் காட்ட வேண்டும். அதனால். ‘ இது மாதிரியான குறளை மட்டும் நல்லா நினைவு வச்சுக்கோ’ என்றார்.

‘முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்

(நல்லவர் போல முகத்தில் சிரிப்பு காட்டி, மனத்தில் தீயவராக இருக்கும் வஞ்சகரைக் கண்டு அஞ்சுதல் வேண்டும்)’’ என்ற குறளும் நினைவில் இருக்குங்க ஐயா” என்றென். அத்துடன் வகுப்பு கேன்சல்.


குறும்பு-17


எனது அன்புக்கு உரிய அந்தப் பேராசிரியர், வெளியூரில் இருந்து விருத்தாசலம் வந்து போவார். சில நாட்களில் கல்லூரியிலேயே தங்கிவிடுவார். இரவு சாப்பிட வேண்டுமானால் அதிக தூரம் நடந்து போக வேண்டும். அப்படி அவர் தங்கும் நாட்களில் இரவு ஏழு மணிக்கு மேல கல்லூரிக்கு சென்று அவரைப் பார்ப்பேன். ’ஐயா டிபன் வாங்கிகிட்டு வரட்டுமா?’ என்று கேட்பேன். ’வாங்கிட்டு வந்து தறியா?’ எனறு கேட்பார். ’வாங்கிகிட்டு வரேன்யா’ என்பேன்.
’பஸ்டாண்ட் கிட்ட இருக்கிற ஓட்டல்லயே இட்லி வாங்கிட்டு வந்துடு போதும்’ என்று சொல்வார்.’டவுனுக்கு போய் ஐயர் கடைல வாங்கிகிட்டு வ்ரேன். அங்கதான் இட்லி நல்லா இருக்கும்’ என்று சொல்வேன்.
’ரொம்ப தூரம் நடக்கணுமே’ என்பார். ’பரவாயில். நீங்க நல்லா சாப்பிடணுங்களே’ என்று சொல்லிவிட்டு போய் வாங்கி வருவேன்.
இப்படி அடிக்கடி செய்வதுண்டு. காலை உணவு கூட வாங்கிச் செல்வேன். இதற்காகவே கொஞ்சம் முன்னதாக கல்லுரிக்கு போய்விடுவேன்.
ஒரு நாள் இரவு டிபன் வாங்கிக் கொண்டு போய் கொடுத்தபோது, ‘இப்படி வந்து உட்கார். உங்கிட்ட் கொஞ்சம் பேசணும்’ என்றார். ’பரவாயில்லை. நிக்கிறேன் சொல்லுங்கய்யா’ என்றேன். ’சும்மா வந்து உட்கார்’ என்று இழுத்து உட்கார வைத்து, என் தோளில் கை வைத்து,’ ’வயசானவன் ராத்திரியில் வெளியில போய் கஷ்டபட்க் கூடாதுன்னு வந்து டிபன் வாங்கி கொடுக்கிற. இவ்வளவு நல்ல பிள்ளையா இருக்கியே..வகுப்புல மட்டும் ஏன் இப்படி ராவடி பண்ற?’ என்று கேட்டார்.
அது வேறங்கய்ய. அது பற்றி இப்ப பேச வேண்டாம்’ என்றேன்.
என்னவோ போ..உன்னை புரிஞ்சுக்கவே முடியல...நல்லா படிக்கிற அதுவரை சந்தோஷம்” என்றார்.


குறும்பு-16



ஒரு வாரத்துக்கு அந்தப் பேராசிரியரின் வகுப்பில் அமைதியாக இருப்போம் என்று முடிவு செய்தேன். நான்கு நாட்கள் வகுப்பு அமைதியாக போனது. வெள்ளிக் கிழமையன்று, ஒரு மாணவர் குறும்பாக ஏதோ சொன்னார். பேராசிரியர் உடனே,

“ குமார் அடங்கிட்டான். நீஆரம்பிச்சிருக்கியா?’

என்று கேட்டார். சும்மா இருந்த என்னை உசுப்பிவிட்டுவிட்டார். அவ்வளவுதான். நான் எழுந்து,

‘நான் அடங்கிட்டேன்னு யார் உங்களுக்கு சொன்னாங்க?’

என்று கேட்டேன்.

’நல்ல பிள்ளைன்னு சர்டிபிகேட் கொடுக்கிறேன். கிழிச்சு போடுறியா?’
என்று கேட்டார்.

‘கொளுத்துவேன்’ என்று சொன்னேன்.அவ்வளவுதான். அன்றும் வகுப்பு கேன்சல். மேட்னி ஷோ படம் பார்க்க போய்ட்டோம்ல.


குறும்பு-15



அந்தப் பேராசிரியர் சிலப்பதிகாரம் நடத்தினார். இண்டர்னல் மார்க் போடுவதற்காக 3 மணி நேரத் தேர்வு. ஒரே கேள்வி. ’சிலப்பதிகாரத்தில் உனக்குத் தெரிந்தவற்றை எழுது’ இதுதான் கேள்வி. இதற்கு அவர் சொன்ன விளக்கம், ‘நான் பத்து கேள்வி கேட்டன்னா, சிலதுக்கு உனக்கு விடை தெரியாமல் இருக்கலாம். உனக்கு என்ன தெரியாதுன்னு தெரிஞ்சுக்கவா தேர்வு? உனக்கு என்ன தெரிஞ்சிருக்குன்னு தெரியனும்னா இப்படித்தான் கேள்வி கேட்கணும்’ என்றார். நல்ல விஷயம் என அவர் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது.
தேர்வு முடிந்து, இண்டர்னல் மார்க் போட்ட பிறகு அவரை சந்தித்த போது அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இதோ:

’உனக்கு எவ்வளவு மதிப்பெண் போட்டிருக்கேன் பார்த்தியா?’

‘பார்த்தேங்கய்யா...40க்கு 39 போட்டிருக்கிங்க’

‘ஏன் போட்டேன் சொல்லு’

‘நல்லா எழுதினேன் போட்டிங்க’

‘நல்லா எழுதினா நல்ல மார்க் போட்ட்டுவாங்களா”

‘நேர்மையானவங்க போடுவாங்க’

‘ஏன் போட்டிங்கன்னு கேட்க மாட்டியா நீ?”

‘ஏன் போட்டிங்கன்னு கேட்கணும் உங்களுக்கு. அவ்வளவுதானே...சொல்லுங்க. ஏன் போட்டிங்க்?”

‘ இப்ப நீ அடம் பண்ணலாம். பத்து வருஷம் கழிச்சு, என்ன பார்க்கும்பொது, தெரியாமல் பேசிட்டேன். மன்னிச்சுடுங்கன்னு சொல்லிட்டின்னா..உன் பாவம் கழிஞ்சுடும். மதிப்பெண்ணை நான் குறைச்சு போட்டுட்டேன்னா, அந்த பாவத்தை திரும்ப கழிக்கவே முடியாது. அதனாலதான் போட்டேன்’

‘ஆக.....நேர்மைக்காக மதிப்பெண் போடல....உங்களுக்கு பாவம் சேர்ந்திட கூடாதுங்கிற சுய நலத்துல போட்டிங்கன்னு சொல்லுங்க’

அவருக்கு கோபம் கொப்பளிக்கிறது. ஆனாலும் ஒன்றும் பேசமுடியவில்லை.