Sunday 28 December 2014

பெய்யெனப் பெய்யும் மழை


தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

இந்தக் குறளுக்கு பரிமேலழகர் முதல் பலரும் சொன்ன பொருள்.

தெய்வத்தை வணங்காமல், கணவனையே தெய்வமாக வணங்கும் பத்திணிப் பெண், பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

என்பதுதான்.

இதெல்லாம் பழங்காலத்தில் பத்திணிப் பெண்கள் மீது இருந்த மதிப்பு, நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்பட்டவை.

இப்போது சொல்லப்படும் பொருள் இதுதான்.....

பக்தி என்று சொல்லும் அளவுக்கு கணவன் மீது அதீத அன்பு கொண்ட பெண் எதற்கு ஒப்பாவாள் என்றால், நமக்குத் தேவை ஏற்படும்போது, பெய் என்று சொன்னால் பெய்கின்ற மழைக்கு ஒப்பானவள். பெய் என்றதும் பெய்கின்ற மழை எப்படி பயனுள்ளதாகவும் மகிழ்ச்சி தருவதாகவும் உள்ளதோ அதே போல அந்தப் பெண்ணும் பயனுள்ளவளாகவும் மகிழ்ச்சி தருபவளாகவும் இருப்பாள்.

ஆனால் ஒன்று.....பெய் என்றதும் என்றாவது மழை பெய்ததுண்டா? அப்படி ஒரு மழை தரும் பயனையும் மகிழ்ச்சியையும் அனுபவிச்சிருக்கோமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


களவு நெறி....கற்பு நெறி


நான் எழுதியுள்ள குறள் கவிதை படித்துவிட்டு, நண்பர் ஒருவர் ஒரு சந்தேகம் எழுப்பியுள்ளார். இதே சந்தேகம் பலருக்கு எழலாம் என்பதால் கீழே உள்ள விளக்கத்தைத் தருகிறேன்.

பழங்காலத்தில் களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என இரண்டு இருந்தது. முதலில் களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டு, பின்னர்தான் கற்பு வாழ்க்கைக்கு வந்தனர். இன்னும் சொல்லப் போனால், திருமணம் என்ற ஒன்றே இல்லாமல் இருந்தது. களவு வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் பின்னர் ஊரறிய கற்பு வாழ்க்கையில் ஈடுபட்டனர்
களவு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு ஏமாற்றுபவர்கள் வந்த பிறகுதான், திருமணம் என்ற சடங்கு தோன்றியது. இதைத்தான்

பொய்யும் வழுவும் தோன்றிய காலை
ஐயர் யாத்தனர் கரணம்

என்று தொல்காப்பியர் சொல்கிறார். பொய் சொல்வதும், ஏமாற்றுகின்ற தவறும் தோன்றிய பிறகே திருமணம் என்ற ஒன்றை கொண்டு வந்தனர் என்கிறார் தொல்காப்பியர். இங்கே ஐயர் என்று அவர் குறிப்பிடுவது பிராமணரை அல்ல. ஐயர் என்பது தலைவர் என்று பொருள் படும். கரணம் என்றால் திருமணம். ஊர் பெரியவர் அல்லது தலைவர் முன்னிலையில் திருமணம் நடத்தினர்.

நம் பண்பாடும் கால மாற்றத்துக்கு ஏற்ப மாறி வந்துள்ளது. கால மாற்றம் காரணமாக, இப்போது சிலர் மணம் செய்துகொள்ளாமலே, Living together என்று வாழ்கிறார்கள். அது தவறில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். பழங்காலத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோமா?


Tuesday 23 December 2014

விதைத்தவனே விருட்சமானான்


எழுத்தராய் வாழ்வு தொடங்கி
எவரும்
எழமுடியா உயரத்துக்கு
எழுந்தவன் நீ.

கதாநாயகர்கள் கோலோச்சிய
கற்பனை உலகில்
கதையை நாயகனாக்கி
கதநாயகிகளை
செதுக்கிய சிற்பி நீ.

முயன்றாலும் முடியாத
முடிச்சுகளைப் போடவும்
போட்டதை அவிழ்க்கவும்
முடிந்தது உன்னால் மட்டுமே..

கற்பனையிலும் எண்ண இயலா
கருக்களை
கதையாக்கினாய்....
திரையுலகு செழிக்க
விதையாக்கினாய்....

விதைதான் விருட்சமாகும்
இங்கே வினோதம்..
விதைத்த நீயே
விருட்சமானாய்...

ஆகாயத்துக்கு அப்பாலும்
சென்று சிந்தித்த
சிற்பியே.....

அங்கே உன்னை
அழைத்தது யார்?
எமக்குச் சொந்தமான உன்னை
எவன் கொள்ளை கொண்டான்...

ஆனாலும்
அனுப்பி வைக்கிறோம்
ஏன் தெரியுமா?
இவ்வுலகோடு மட்டும்
இருக்க வேண்டியவன் அல்ல நீ.

அவ்வுலகிலும் ஆளுமை செய்
ரம்பை, ஊர்வசியையும் இயக்கு
மேனகையும் உன்னால்
மேன்மையடையட்டும்.

கலை என்ற ஈரெழுத்து..
திரை எனற் ஈரெழுத்து...
இருக்கும் வரை
இருக்கும் இந்த ஈரெழுத்தும்

“கே. பி,”


Friday 19 December 2014

தமிழ் விளையாட்டு 13

கவியரசர் கண்ணதாசன் ஒருநாள், திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் போன் செய்து குரலை மாற்றிப் பேசி ஒரு தகவல் சொன்னார். போனில் அவர் சொன்ன தகவல் என்ன தெரியுமா?

‘கண்ணதாசன் இறந்துவிட்டார்’

என்பதுதான். பல சினிமா பிரபலங்களும் அலறியடித்துக் கொண்டு கண்ணதாசன் வீட்டுக்குச் சென்றனர். அவர் அங்கே நாற்காலியில் ஜாலியாக உட்கார்ந்திருந்தார். சென்றவர்கள் ஒன்றும் கேட்க முடியாமல், சும்மா பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கண்ணtதாசன் சொன்னார்,

‘கண்ணதாசன் இறந்துவிட்டார்’ என்று நானேதான் உங்களிடம் சொன்னேன். குரலை மாற்றிப் பேசினேன் என்றார்.
‘ஏன் இப்படி சொன்னிங்க? எவ்வளவு பய்ந்துட்டோம்’ என்று வந்தவர்கள் கேட்டனர்.
அதற்கு கண்ணதாசன், ‘ இருக்கும்போதே செத்துவிட்டதாக வதந்தி பரவினால் நீண்ட ஆயுள் கிடைக்குமாம். அதனால்தான் அப்படிச் சொன்னேன்’’ என்றார்.
அதிக நாள் வாழவேண்டும் என ஆசைப்பட்டார் கண்ணதாசன். சே...56 ஒரு வயசா?

தமிழ் விளையாட்டு -12




இது 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. கலைஞர் அவர் வீட்டில் இருக்கும்போது ஒரு நாள், நாற்காலியை விட்டு எழுந்ததும் வேட்டியைi சரி செய்து கட்டிக்கொண்டிருந்தார். அப்போது, வயது முதுமை காரணமாக் பின்னால் சாய்ந்தார். விழுந்துவிடாமல் அவரை துரை முருகன் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அப்பொழுது கலைஞர் அடித்த கமெண்ட்...

‘’என்னய்யா...தள்ளாத வயதுன்னு சொல்றாங்க...இப்படி தள்ளுது...’’

முதுமையால் ஏற்படும் இயலாமையைக் கூட நகைச்சுவையோடு ஏற்கும் மனவளம் கலைஞருக்கு.


தமிழ் விளையாட்டு -11



எம்ஜிஆர் உடல் நலம் குன்றி, அதிகம் பேச இயலாத நிலையில் முதல்வராக இருக்கிறார். 1987ம் ஆண்டு. சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதால் கலைஞரும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்கள். சட்டமன்றத்தில் திமுக கட்சித்தலைவராக நாஞ்சிலார் இருந்தார்.

பேரவைத் தலைவராக இருந்த பி.ஹெச். பாண்டியன், தனக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி செயல்பட்டார். அண்ணா நகர் சாந்தி காலனியில் திமுக பொதுக்கூட்டம். அங்குதான் பி.ஹெச். பாண்டியன் வீடு. அந்த கூட்டத்தில் பேசிய கலைஞர்....

இங்கே நாம் பேசுவதற்காக வைக்கப்பட்டுள்ள இந்த ஒலி பெருக்கியை ஸ்பீக்கர் என்று சொல்வார்கள். இது நாம் பேச உதவி செய்வது மட்டும்தான். இது சரியாக செயல்படவில்லை என்றால் இதை மாற்றிவிடுவோம்.
இதே போல சட்டமன்றத்திலும் ஒரு ஒரு ஸ்பீக்கர்(பேரவைத்தலைவரை ஆங்கிலத்தில் ‘ஸ்பீக்கர்” என்று சொல்வார்கள்.) இருக்கிறார். அவர் சரியாக செயல்படவில்லை. அவரை மாற்ற வேண்டும்.

இப்படி பேசினார் கலைஞர்.

அடுத்த நாள், சட்டப் பேரவையில் கொந்தளித்துவிட்டார் பி.ஹெச். பாண்டியன். கலைஞரை ஏக வசனத்தில் பேசி, அவரைக் கைது செய்யாமல் விட மாட்டேன் என்றார்.

அப்போது தனது அறையில் இருந்த முதல்வர் எம்ஜிஆர், பேரவைத்தலைவர் பேச்சைக் கேட்டு( பேரவையில் பேசுவதை தனது அறையில் இருந்தபடி முதல்வர் கேட்க எப்போதும் வசதி செய்யப் பட்டிருக்கும். யார் முதல்வராக இருந்தாலும் இந்த வசதி உண்டு.) அவசரமாக பேரவைக்கு வந்தார். பி.ஹெச். பாண்டியனை அமைதிப் படுத்தினார். அப்படியும் கலைஞரைப் பற்றி தொடர்ந்து பேசினார்.

முதல்வர் எம்ஜிஆர் எழுந்து நின்று, பேரவைத் தலைவரைப் பார்த்துக் கையெடுத்து கும்பிட்டு, உட்காருங்கள் என்றார்.
ஆவேசத்தில் இருந்த பி.ஹெச். பாண்டியன், ‘புரட்சித் தலைவர் தடுத்தாலும், கருணாநிதியை கைது செய்யாமல் விட மாட்டேன் என்றார். அதிமுக எம் எல் ஏ க்கள் உடனே, புரட்சித்தலைவர் சொல்றார் உட்கார் என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டனர். பேரவை அமைதியானது.
பேர்வைத் தலைவரைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக சொல்லிப் புறப்பட்டார், திமுக சட்டசபைக் கட்சித் தலைவர் நாஞ்சிலார்.

முதல்வர் எம்ஜிஆர் உடனே எழுந்து, கையெடுத்து கும்பிட்டு, , வெளிநடப்பு வேண்டாம் என்று நாஞ்சிலாரைக் கேட்டுக் கொண்டார்.

எம்ஜிஆரின் பெருந்தன்மை கண்டு வியந்தேன்


குறும்பு-11


விருத்தாசலம் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்தபோது, ‘நம்பி அகப்பொருள்’ பாடம் நடத்தினார் ஒரு பேராசிரியர். காதல் இலக்கியம் அது. கொஞ்சம் கசமுசாவாக இருக்கும். அதனால் அவர் பாடம் நடத்த மாட்டார்.
வகுப்புக்கு வரும்போதெல்லாம் ஒரு நோட்டை எடுத்துவருவார். சொல்வதை எழுதிக்கிங்க என்று கூறி அந்த நோட்டில் இருப்பதை படிப்பார். ஒரு நாள்கூட நடத்தியதில்லை. ‘இது நாட்டார் பேரன் கொடுத்த நோட்ஸ்’ என்பார்.
இப்படி பாடமே நடத்தமாட்டேங்குறிங்களே என்று ஒரு நாள் கேட்டோம். இந்த பாடத்தை உங்களுக்கு வச்சிருக்கக் கூடாது. இதைப் படிக்கும் அளவுக்கு யூ ஆர் நாட் மெண்டலி மெச்சூர்டு என்றார்.
நோட்ஸ் கொடுப்பதற்கே அவர் (ஒரு மாணவரைக் காட்டி) எண்ணையில் போட்ட அப்பளம் போல துடிக்கிறார். பாடம் நடத்தினால் என்ன ஆவார்? என்று கேட்டார் பேராசிரியர்.
உடனே நான், ‘’ நீங்களே ஒரு மணி நேரத்துல 32 தடவை பெருமூச்சு விடுறிங்க. நாங்க எப்படி சும்மா இருக்க முடியும்னு கேட்டேன்.
ஐயையோ நான் பெருமூச்செல்லாம் விடலிங்க என்றார்.
எண்ணிட்டுதான் சார் சொல்றேன் 32 முறை பெரு மூச்சு விட்டுருக்கிங்க என்றேன்.
அதெல்லாம் இல்லைங்க. அதையெல்லாம் நான் விட்டு ரொம்ப நாளாச்சு என்றார் [பேராசிரியர்.
இதை இன்னொரு பேராசிரியரிடம் நாங்கள் சொன்னபோது அவர் சொன்ன பதில்...

ஹுக்கும்....எங்க விட்டார்?


குறும்பு-10

விருத்தாசலம் அரசுக் கலைக் கல்லூரியில் நான் இளங்கலை தமிழ் இலக்கியம்( தமிழ்ல சொன்னா,B.A. Tamil Literature) படித்துக் கொண்டிருந்தபோதுதான் அன்னக் கிளி படம் வெளியானது.
அதில் ஒரு திரையரங்கு உரிமையாளராக வருவார் தேங்காய் சீனிவாசன். கூலிங் கிளாஸ் போட்டிருப்பார். அவருக்கு ஒரு அல்லகை இருப்பான் (கவுண்டமணி என்று நினைவு) படம் பார்க்க வரும் பெண்களை நோட்டமிடுவார் தேங்காய் சீனிவாசன். யாராவது ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டால், அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் கூலிங் கிளாசை கழற்றுவார். அந்தப் பெண் மீது அவர் ஆசை படுகிறார் என்பதற்கு சிக்னல் அது. பிறகு ஆக வேண்டிய ஏற்பாடுகளை அல்லகை செய்வான். ஒரு நாள் ஒரு பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார் தேங்காய் சீனிவாசன். அல்லகை உடனே ‘முதலாளி கண்ணாடிய கழற்றிடாதிங்க’ என்று சொல்வான். ‘ஏண்டா?’ எனக் கேட்பார் தேங்காய். ‘அது என் சம்சாரம்’ என்பான் அல்லகை.

சரி விஷ்யத்துக்கு வரேன்...

கல்லூரியில் தமிழ்த்துறைக்கு என தனி நூலகம் உண்டு. அதற்கு ஒரு பேராசிரியர்தான் பொறுப்பு. ஒருநாள் அதில் உள்ள புத்தகங்களை எல்லாம் ரேக்கில் அடுக்கி வைக்க எங்களை அழைத்தார் அந்தப் பேராசிரியர். நாங்களும் போய் அடுக்கிக் கொண்டிருந்தோம். என் வகுப்பு மாணவி ஒருவார் புத்தகத்தை எடுத்து, ரேக்கின் மேல் தட்டில் வைத்துக்கொண்டிருந்தார். அவருக்கு பக்கவாட்டில் சற்று தள்ளி அமர்ந்து, அதைப் பார்த்துக்கொண்டிருந்த பேராசிரியர் சட்டென்று கண்ணாடியை கழற்றினார். அதை பார்த்த நான், ’வாத்தியார் கண்ணாடிய கழற்றிட்டாருடா” என்றேன். எல்லாரும் கொல்லென்று சிரித்துவிட்டோம். என்னபா சிரிக்கிறிங்க? என்று கேட்டார். ஒன்னுமில்ல சார்ன்னு சொல்லிட்டோம். பின்னர் தனியாக அழைத்து, சிரித்ததுக்கு காரணம் கேட்டார் பேராசிரியர். சொன்னேன். அவரும் சிரித்தார்

குறும்பு 9


விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் இளங்கலை(B.A. ன்னு தமிழ்ல சொன்னாதான் புரியுமோ) சேர்ந்தேன். அந்த ஆண்டுதான் இரு பருவ முறை (அதாங்க....செமஸ்டர்) அறிமுகப்படுத்தினார்கள். ஒரு பாடத்தின் 100 மதிப்பெண்களில் உள்ளிடை மதிப்பீடு ( இண்டர்னல்) மட்டும் 40 மதிப்பெண்கள். மீதி 40 மதிப்பெண்களுக்கு பல்கலைக்கழகத் தேர்வு.

உள்ளிடை மதிபெண்கள் எப்படி போடுவார்கள் என்று பேராசிரியர் விளக்கிக்கொண்டிருந்தார். ஒரு மணி நேரத் தேர்வும் 3 மணிநேரத் தேர்வும் நடத்துவோம். assignment கொடுப்போம். இதையெல்லாம் கணக்கிட்டுதான் உள்ளிடை மதிப்பெண் வழக்குவோம் என்றார்.

என் அருகில் அமர்ந்திருந்த வகுப்புத் தோழர் நண்பர் ரகுராமன் என்னிடம்,
‘அசைன்மெண்ட்” ன்னா என்னங்க?’
என்று கேட்டார்.

‘அது ஒண்ணுமில்லிங்க. ரொம்ப சிம்பிள்” என்றேன்.

அவர் விடவில்லை. வகுப்பு முடிந்ததும், “அசைன்மெண்ட்னா என்னங்க?” என்று கேட்டார்.

போகப் போக நீங்களே புரிஞ்சுப்பிங்க” என்றேன். நல்ல வேளை அதற்குமேல் கேட்கவில்லை.அமைதியாக இருந்துவிட்டார். நல்ல நட்பான பிறகு ஒரு நாள்,

அசைன்மெண்ட் நனா என்னன்னு கேட்டதுக்கு,விளக்கம் சொல்லாமல், போகப் போக தெரிஞ்சுப்பிங்கன்னு ஏன் சொன்னிங்க?

என்று கேட்டார். அப்போது அவரிடம் உண்மையைச் சொன்னேன்.. நான் சொன்னது.

”அசைன்மெண்ட் என்ற சொல்லை நானே அன்றுதான் கேள்விப்பட்டேன். ஆங்கிலத்துக்கும் எனக்கும் ரொம்ப தூரம். எனக்கும் தெரியாது என்று சொல்லவும் ஈகோ தடுத்தது. அதனால அப்படி சொல்லி சமாளித்தேன்.”

இதை இப்பொழுதுகூட சொல்லிச் சிரிப்பார் என் நண்பர் ரகுராமன்.


எடுத்தது எங்கே -15



தமிழ்ப் பெண்களுக்கே உரிய சிறப்பு தாலாட்டுப் பாடல். நாட்டுப் புறப்பாடல்களில் தாலாட்டுப் பாடல்களை மட்டுமே தொகுத்து பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். திரைப்படங்களிலும் பல தாலாட்டுப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

பாகப்பிரிவினை படத்தில் ஆண்மகன் ஒருவன் தாலாட்டு பாடுவதுபோல ஒரு காட்சி. சிவாஜிகணேசன் நடித்த படம். பட்டுக்-கோட்டை கல்யாணசுந்-தரத்தை அழைத்து தாலாட்-டுப் பாடல் எழுதச் சொன்னார் இயக்குநர் பீம்சிங். பட்டுக்-கோட்-டையாரும் வந்தார். பொது-வுடமைக் கருத்துக்கள் அனல் தெறிக்க எழுதக் கூடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவருக்கு தாலாட்டுப் பாடல் எழுத வரவில்லை. உடனே அவர், மிகவும் பெருந்தன்-மையோடு, ‘இந்த தாலாட்-டுப் பாட்டெல்லாம் கண்ணதாசனுக்குதான் நல்லா எழுத வரும். அவ-ரை-யே கூப்பிட்டு எழுதச் சொல்--லுங்க’ என்று இயக்குனர் பீம்சிங்-கிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டு-விட்டார்.

அப்போது, சிவாஜிக்கும் கண்ணதா-ச-னுக்-கும் பிரச்னை. தன் படத்துக்கு கவிஞர் பாட்-டெழுதக் கூடாது என்று சொல்லியிருந்தார் சிவாஜி. ஆனாலும் கண்ணதாசனை அழைத்து பாட்டெழுதச் சொன்-னார் பீம்-சிங். “அவருக்குப் பிடிக்காதே” என்று கேட்டாராம் கண்-ணத-õசன். “நீங்கள்தான் எழுது-றீங்கன்னு இப்போதைக்குத் தெரிய வேண்டாம்” என்றார் பீம்சிங். “தெரியாம எப்படிய்யா எழு-து-றது?” என்று கேட்டுவிட்டு பாட்-டெழுதிக் கொடுத்தார் கண்ணதாசன். அந்தப் பாடல்தான்,

ஏன்பிறந்தாய் மகனே

ஏன் பிறந்தாயோ

பாடலைப் பதிவுசெய்து சிவாஜியிடம் போட்டுக்காட்டினார்கள். ஆகா பாட்டு அருமையா வந்திருக்கு என்று பாராட்-டினார் சிவாஜி. பிறகுதான் நடந்ததைச் சொன்னார் பீம்சிங். “கவிஞன் கவிஞன்-தான்-யா” என்று பாராட்டினாராம் சிவாஜி.

கோமல்சுவாமிநாதன் எழுதிய கதை-யை ‘தண்ணீர் தண்ணீர்’ என்று படமாக எடுத்தார் கே. பாலசந்தர். இதில் ஒரு தாலாட்டுப் பாடல் வரும். வைரமுத்து எழுதிய அந்தப் பாடல்...

ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து

தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும்வரை

கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே

கண்ணுறங்கு சூரியனே

இந்தப் பாடல் பின்னணி இசை எதுவும் இன்றி பி.சுசீலாவின் குரலில் அற்புதமாக ஒலிக்கும். சோகத்தைப் பிழி-யும். தான் எழுதிய பாடல்களில் தனது வாழ்க்கையில் மறக்க முடி-யாத பாடல் இது என்று சொல்வார் வைரமுத்து.

நாட்டுப்புறப் பாடலில் ஒரு தாலாட்டுப் பாடல்....

ஆத்தா நீ அழுத கண்ணீர்

ஆறாகப்பெருகி

ஆனைகுளித்தேறி

குளமாகத்தேங்கி

குதிரை குளித்தேறி

வாய்க்காலாய் ஓடி

வழிப்போக்கர் வாய் கழுவி

இஞ்சிக்கு பாஞ்சு

எலுமிச்சை வேரோடி

மஞ்சளுக்கு பாஞ்சு

மருதாணி வேரோடி

தாழைக்கு பாய்கையிலே

தளும்பியதாம் கண்ணீரும்!

இந்தப் பாடல்தான் தண்ணீர் தண்ணீர் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலுக்கு வேர் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

(எடுத்தது வரும்)

எடுத்தது எங்கே-14



காதலர் இருவர் சந்தித்துக் கொள்கின்றனர். இருவரும் ஒரே ஊரினர் அல்லர். உறவினர்களும் அல்லர். ஒரு இடத்தில் சந்திக்கின்றனர். கண்கள் பரிமாறிக்கொள்கின்றன. இதயம் இடம் மாறுகிறது. காதல் அரும்பியது. அன்பு நெஞ்சங்கள் கலக்கின்றன. அதைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்கின்றனர். என்ன சொல்கிறார்கள்?

உன் தாயும் என் தாயும் எவரோ. என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையிலும் உறவினர்கள் அல்லர். நீயும் நானும் முன்பு ஒருவரை ஒருவர் பார்த்ததுகூட இல்லை. எந்த அறிமுகமும் இல்லாமல் இருந்தவர்கள் நாம். ஆனாலும் நம் அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டன. எப்படி? செம்மண் நிலத்தில் விழுந்த மழை நீர் எப்படி சிவப்பு நிறமாகிறதோ அதைப் போல, அதாவது, நிலமும் நீரும் அதனதன் தன்மை மிகாமல் கலந்து புதுத் தன்மை பெறுவது போல காதலர் இருவர் நெஞ்சமும் கலந்துவிட்டன, பிரிக்க முடியாதபடி.

இப்படி அருமையான கருத்துடைய பாடல் சங்க இலக்கியத்தின் குறுந்தொகையில் வருகிறது.

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

இதுதான் அந்தப் பாடல். காதலர்கள் மனம் கலப்பதை இதைவிட வேறு உவமை மூலம் விளக்க முடியுமா என்பது சந்தேகமே.

குறுந்தொகையின் இந்தப் பாடலை ‘இருவர்’ படத்தில் வரும் ‘நறுமுகையே நறுமுகையே’ என்ற பாடலில் அப்படியே பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து. அந்தப் பாடல் வரிகள் இதோ...

யாயும் ஞாயும் யார் ஆகியரோ

நெஞ்சு நேர்ந்தது என்ன?

யானும் நீயும் எவ்வழி அறிதும்

உறவு சேர்ந்தது என்ன?

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்

உயிர்க்கொடி பூத்ததென்ன

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்

அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன

‘இருவர்’ படத்தில் காதல் கைகூடுமா? கூடாதா என்று கவலைப்படும் காதலியின் அச்சத்தைப் போக்குவதற்காக காதலன் பாடுவதாக அமைந்த சூழலுக்கு இப்படிப் பாடல் எழுதியுள்ளார் கவிப்பேரரசு.

கடையேழு வள்ளல்களில் ஒருவனான பாரியை, பகைவர்கள் வஞ்சகத்தால் வீழ்த்தி விடுகிறார்கள். அனாதையாகிவிட்ட அவரது இரண்டு மகள்களை புலவர் கபிலர் அழைத்துச் செல்கிறார். ஒரு மாதம் கடந்த பிறகும் தந்தையை இழந்த சோகம் இரண்டு பெண்களுக்கும் தீரவில்லை. இரவு சூழ்கிறது. வானில் வெண்ணிலவு தோன்றுகிறது. அதைப் பார்த்ததும் அந்தப் பெண்களுக்கு தந்தையின் நினைவு வருகிறது. கடந்த மாதம் இதே வெண்ணிலவு நாளில் என் தந்தை இருந்தார். எமது பரம்பு மலையும் எம்மிடம் இருந்தது. இந்த மாதம் வெண்ணிலவு காலத்தில் என் தந்தை இல்லை. எமது குன்றும் பிறர் கொண்டுவிட்டார் என்று பாடுகின்றனர் பாரி மன்னனின் பெண்கள். அந்தப் பாடல்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்

வென்றெரி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே

சோகத்தை பிழியும் கையறுநிலைப் பாடலான இது புறநானூற்றில் 12வது பாடலாக இடம் பெற்றுள்ளது. இந்தச் சோகப் பாடலின் சொற்களை எடுத்து காதல் பாடலில் கையாளுகின்றார் வைரமுத்து. ஆம். இந்தப்பாடல் இடம் பெறுவதும் இருவர் படத்தின் அதே நறுமுகையே நறுமுகையே பாடலில்தான். அந்த வரிகள் இதோ..

அற்றைத் திங்கள் வெண்ணிலவில்

நெற்றித் தரள நீர் வடிய

கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா

என்று எழுதியுள்ளார் வைரமுத்து. அன்றொரு நாள் வெண்ணிலவின் ஒளியில் நீர்த்திவலைகள் முத்துப்போல் நெற்றியில் உருள, கொற்றவனுக்குச் சொந்தமான பொய்கையில் நீராடியவள் நீயா? என்று காதலியிடம் காதலன் கேட்கிறான். இதுதான் வைரமுத்து எழுதிய இருவர் படப்பாடலின் பொருள்.

- எடுத்தது வரும்.

Thursday 18 December 2014

தமிழ் விளையாட்டு -10


எம்ஜிஆர் அமைச்சரவையில் காளிமுத்து அமைச்சராக இருந்தார். 1980 களின் தொடக்கத்தில். அதிமுக - காங்கிரஸ் கூட்டணி. காங்கிரஸ் மீது கோபம் வந்தால், காளிமுத்துவை விட்டு பேசச் செய்வார் எம்ஜிஆர். அப்படி ஒரு முறை காங்கிரசை காளிமுத்து விமர்சித்தது இன்றளவும் பிரபலம். காளிமுத்து சொன்னது...

சருகு மலராகாது
கருவாடு மீனாகாது
கறந்த பால் மடி புகாது
காங்கிரஸ் ஆட்சிக்கு வராது....

என்னா அடி. யப்பா...

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு திமுகவில் சேர்ந்தார் காளிமுத்து. 1991 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக கடலாடி தொகுதியில் போட்டியிட்டார் காளிமுத்து. சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கலைஞர். கடலாடி தொகுதியில் காளிமுத்துவை ஆதரித்து பிரச்சாரம் செய்த கலைஞர்,

தம்பி காளிமுத்து...
கடலாடி வா...
காத்திருப்பேன் துறைமுகத்தில்

என்றார். அலையில் அடித்துச் செல்லப்பட்டார் காளிமுத்து. ராஜீவ் கொலையை அடுத்து நடந்த அந்த தேர்தலில் திமுகவுக்கு பேரிடி. துறைமுகத்தில் கலைஞர் மட்டும்தான் வென்றார். மற்ற எல்லா தொகுதியிலும் திமுக தோற்றது.

பின்னர் அதிமுகவில் சேர்ந்தார் காளிமுத்து.(அப்போது நடந்த சுவாரசியத்தை தனி பதிவாக ஏற்கனவே போட்டிருக்கிறேன். மீண்டும் இங்கு பிறகு போடுகிறேன்) திருப்பூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் நடந்த பயிற்சி பட்டறையில் பேசினார் காளிமுத்து. அவர் பேசியது...

இங்கே நான் பயிற்சி அளிக்கவா வந்திருக்கிறேன்? பயிற்சி பெற வந்திருக்கிறேன்.
இடையிலே சிலகாலம் தடம் மாறி, தடுமாறி, தடுக்கி விழுந்து.. கைகளிலும் கால்களிலும் காயம் பட்டு, உங்கள் பாச முகங்களில் தவழும் புன்னகையையே என் புண்ணுக்கு மருந்தாக பூசிக் கொள்ள வந்திருக்கிறேன்.
புரட்சித் தலைவி மீதான விசுவாசத்தையே சுவாசமாக கொண்டிருக்கும் உங்களிடம், விசுவாசத்தைக் கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன்.

இப்படிப் பேசினார் காளிமுத்து. 2011ல் அதிமுக ஆட்சி அமைந்தபோது பேரவைத் தலைவர் ஆக்கப்பட்டார் காளிமுத்து. பேரவைத் தலைவர் பதவி ஏற்றதும், அவையில் தன் பேச்சை

தாயை வணங்குகிறேன்
தமிழ்த் தாயை வணங்குகிறேன்

என்று தொடங்கி ஜெயலலிதா மீதான விசுவாசத்தைக் காட்டினார் காளிமுத்து.

அடடா...எப்படியெல்லாம் கைகொடுக்கிறது தமிழ்.


தமிழ் விளையாட்டு -9



அண்ணா முதல்வராக இருந்தபோது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பி வந்த நேரம். சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், அண்ணாவைப் பார்த்து

'Your days are numbered' (உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன்) என்றார்.

அண்ணா அமைதியாக எழுந்து அவருக்கு சொன்ன பதில்

“My steps are measured' (நான் அளந்துதான் அடி வைக்கிறேன்)

யாருக்கு வரும் இந்தப் பெருந்தன்மை?.

தமிழ் விளையாட்டு-8





1
970 களில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, அரசுப் பேருந்துகளில் திருக்குறள் எழுதி வைக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது, இதன் மீதான விவாதத்தில் பேசிய கங்கிரஸ் கட்சி உறுப்பினர் கருத்திருமன், விளையாட்டாக,

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்

என்ற குறளை ராஜாஜி வீட்டிலும்

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

என்ற குறளை பெரியார் வீட்டிலும் வைக்க அரசு ஏற்பாடு செய்யுமா என்று கேட்டார்.

முதல்வர் கலைஞர் உடனே எழுந்து,’யார் வீட்ட்டில் எந்த குறளை வைக்கிறோமோ இல்லையோ

யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

என்ற குறளை கருத்திருமன் வீட்டில் வைக்க நிச்சயமாக ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.


தமிழ் விளையாட்டு -7


கவியரசர் கண்ணதாசன், திராவிட இயக்கத்தில் தீவிரமாக இருந்த காலம். ஒரு பொதுக் கூட்டத்தில் அவருக்கு வாள் பரிசளித்தார்கள். அதைப் பெற்றுக் கொண்ட கண்ணதாசன்,

‘இதுதான் வீர வாள்.மற்றவாள் வருவாள்...போவாள்...”

என்றார் . சுற்றி இருந்தவர்கள் அதை கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

குறும்பு-8



விருத்தாசலத்தில் படித்தபோது, நான் என் வகுப்புத் தோழர்கள் ராகுராமன், கோபாலன் மூவரும் ஒரே இடத்தில் அரை எடுத்து தங்கி இருந்தோம். இரவு உணவு ஓட்டலில் மூவரும் ஒன்றாக சாப்பிடுவோம். பில் தொகையை ஒரு நாளைக்கு ஒருவ கொடுப்பது வழக்கம். ஒரு நாள் நான் பணம் கொடுக்க வேண்டிய முறை. அன்று பசித்தது என்பதால் நானும் ரகுராமனும் மாலையே ஓட்டலுக்குப் போய் சப்பிட்டுவிட்டோம்.
இரவும் உணவருந்தச் சென்றோம். மூன்று பேரும் ஆளுக்கு ஒரு தோசை ஆர்டர் செய்தோம். மாலையில் சாப்பிட்டுவிட்டதால் எங்கள் இருவரால் அதற்கு மேல் சாப்பிட முடியாது. தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே(ஏற்கனவே பேசி வைத்தபடி) ரகு ராமன் என்னிடம்

”வேற என்ன சாப்பிடுற குமார்?” என்று கேட்டார்.

நான் உடனே

‘ அறிவுள்ளவன் இதுகு மேல சாப்பிட மாட்டான். எனக்கு போதும்’ என்றேன்.
அடுத்து, ‘கோபலன் நீங்க என்ன சாப்பிடுறிங்க?’ என்று கேட்டேன்.

‘எனக்கும் போதும்’ என்று சொல்லிவிட்டார் கோபலன். பில் தொகை குறைந்தது. கோபாலனோ அரை பசியில் ராத்திரி சரியா தூக்கம்கூட வராமல் அவதிப்பட்டார் பாவம்.

அடுத்த நாள் கோபாலன் பணம் கொடுக்கும் முறை. இரவு சாப்பிட போனோம். வழக்கம் போல தோசை ஆர்டர் செய்தோம்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே,

”அடுத்தது என்ன ஆர்டர் பண்ணலாம் குமார்?” என்று கேட்டார் ரகுராமன்.

கோபாலன் முந்திக் கொண்டு, ’அறிவுள்ளவன் இதுக்குமேல் சாப்பிட மாட்டான். எனக்குப் போதும்’ என்றார்.
”அறிவுக்கும் சாப்பிடுறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? இன்னொரு சப்பாத்தி சாப்பிடுவோம் ரகுராமன்” என்றேன் நான்.

‘நீங்கதானே நேற்று சொன்னிங்க” என்று கேட்டார் கோபாலன்.

இப்ப நான் கேட்ட மாதிரி நீங்களும் நேற்றே கேட்க வேண்டியதுதானே?”” என்றேன்.

போதும் என்று சொல்லிவிட்டதால் கோபாலன் அன்றும் ஒரு தோசைக்கு மேல் சாப்பிடவில்லை. எங்கள் இருவருக்கும் ஒரே சிரிப்பு.

அறைக்குப் போனதும் உண்மையைச் சொன்னோம்.

அடப்பாவிகளா..நீங்க சொன்னதைக் கேட்டு, நான் அறிவில்லாதவன் ஆகிடுவேனேன்னு ரெண்டு நாளா அரைப் பட்டினியா கிடக்கிறேனே” என்று சொல்லி கோபாலனும் எங்களொடு சேர்ந்து சிரித்தார் .


குறும்பு-7



மாநிலக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பலகலைக்கழகத்தில் மட்டுமே எம்.பில். வகுப்பு நடத்தப்பட்டது. முதல் முறையாக கல்லூரிகளிலும் எம்.பில். வகுப்பு தொடங்க அரசு அனுமதி அளித்தது. மாநிலக்கல்லூரியில். தமிழ்த்துறைத் தலைவருக்கும் கல்லூரி முதல்வருக்கும் அட்டமத்தில் சனி. ஆகவே ஆகாது. அதனால், எம்.பில். வகுப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார் முதல்வர். பிறகு நான் போராட்டம் நடத்தி, கோட்டைக்கு மாணவர்களுடன் ஊர்வலம் போய், அப்போது முதல்வராக இருந்த திரு எம்ஜிஆர் அவர்களை சந்தித்து மனு கொடுத்தேன். எங்கள் கோரிக்கையை ஏற்று அன்றே ஆர்டர் போடச் சொன்னர் எம்ஜிஆர். மாலையே ஆர்டர் வந்துவிட்டது.
அதன் பிறகு ஒரு நாள், முதுகலை முதலாம் ஆண்டு வகுப்பில் அமர்ந்து மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு மாணவி, அடுத்த ஆண்டு இங்கேதானே எம்.பில். சேருவிங்க? என்று கேட்டார்.
இல்லை. சென்னைப் ப்லகலைக்கழ தமிழ்த்துறையில் போய் சேரப் போகிறேன் என்றேன். நீங்கதானே போராட்டம் நடத்தி, எம்.பில். வகுப்பு கொண்டுவந்திங்க. நீங்களே இங்க சேரமாட்டிங்களா? ஏன்? என்று கேட்டர் அந்த தோழி.
‘எல்லா இடத்திலும் இருக்கும் ஆசிரியர்களை அறிவாளி ஆக்கணும். அதனால் அடுத்த ஆண்டு பலகலைக்கழகத்தில் சேரப் போறேன்’ என்றேன்.
‘ஆசிரியர்களை நீங்க அறிவாளி ஆக்கப் போறிங்களா? என்ன சொல்றிங்க?’ என்று கேட்டார் தோழி.
“ஆமாம். வகுப்புல நாம் கேள்வி கேட்டாதான், சந்தேகம் கேட்போமேன்னு ஆசிரியர்கள் புது நூல்களையும் படிச்சுட்டு வருவாங்க. இல்லன்னா அரைச்ச மாவையே அரைப்பாங்க. நான் நிறைய கேள்வி கேட்பேன். அதனால ஆசிரியர்கள் படிச்சு அறிவாளி ஆவாங்கன்னு’ சொன்னேன்.
விருத்தாசலம் கல்லுரியில பி.ஏ. படிசேன். அங்க ஆசிரியர்களை அறிவாளி ஆக்க்கிட்டு இங்க மாநிலக் கல்லூரிக்கு வந்தேன். அடுத்ததா பல்கலைக்கழகம் போறேன்” என்றேன்.
‘இங்க இருக்கிறவங்களை அறிவாளி ஆக்கிட்டிங்களா? ” என்று கேட்டார் ஒரு தோழி.
‘முயற்சி பண்ணினேன். முடியல. வேற இடம் போறேன்” என்றேன்.

மரத்தடுப்பு போட்டு, அருகிலேயேதான் ஆசிரியர்கள் அறை. நான் சொன்னது ஆசிரியர்கள் காதில் விழுந்துவிட்டது.
நான் சொன்னது பற்றி அவர்களுக்குள் விவாதம்.
”அவன் சொன்னதில் நியயம் இருக்கு. என்ன பண்ணினாலும் படிச்சுடுறானே. முயற்சி பண்ணினேன் முடியல என்பதுதான் கொஞ்சம் அதிகம். ஆனாலும் மாணவக் குறுப்பு இதெல்லாம். ரசிச்சுட்டு போய்டணும். கோபப்படகூடாது” என்றார் ஒரு பேராசிரியர்.
இன்னொரு பேராசிரியருக்கு மகாகோபம். என்னிடம் எதுவும் கேட்கவில்லை. கோபத்தை காட்ட வேண்டிய இடத்தில் காட்டிவிட்டார். ஒரு வழியாக மீண்டு வந்தேன்.


குறும்பு -6

பொருட்பாலில் கல்லாமை அதிகாரம் எழுதலாமென்று எடுத்துப் படித்தேன் இன்று. அதில் இரண்டாவது குறள்....

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்கா முற்றற்று. (402)

இப்படி ஒரு குறள் இருக்கு. என்ன செய்ய?

இதைப்படித்தபோது கல்லூரிக்காலம் நினைவுக்கு வந்தது.

விருத்தாசலம் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள், ஏராளமான மாணவர்கள் வந்து திருக்குறள் புத்தகம் கொடுங்க பார்த்துட்டு தரேன்னு கேட்டாங்க. எனக்கு ஆச்சரியம். என்ன திடீர்ன்னு எல்லாருக்கும் திருக்குறள் மீது ஆர்வம் வந்துடுச்சேன்னு. விசாரித்தேன்.

யாரோ ஒரு மாணவர், மேற்சொன்ன குறளைப் படித்திருப்பார் போலிருக்கு. காலையிலேயே கல்லூரிக்கு வந்து, எல்லா வகுப்பறைகளுக்கும் போய் ”402 வது குறள் படிக்கவும்” என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளார். அதைப் படித்துவிட்டுதான், 402 வது குறள் என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் பலரும் வந்து திருக்குறள் புத்தகம் கேட்டிருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டேன்.
இதில் இன்னொரு தகவலும் உண்டு.

உவமையணிக்கு ஒரு உதாரணம் சொல் என்று ஆசிரியர் கேட்டார்.. என் அருகில் இருந்த மாணவர் உடனே எழுந்து 402 வது குறளைச் சொல்லத் தொடங்கியதுமே, பதறிப்போன ஆசிரியர், போதும் போதும் என்றார்.

ஆசிரியர் ஏன் பதறினார் தெரியுங்களா? நான் படித்தது, ஆண் பெண் இருபாலரும் படிக்கும் கல்லூரி.

வகுப்பில் இந்தக்குறளைச் சொன்ன மாணவர்தான் எல்லா வகுப்பு போர்டிலும் 402 வது குறள் படிக்கவும் என்று எழுதினார் என்பது பின்னர் தெரிய வந்தது.


எடுத்தது எங்கே- 13



ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் எனது நண்பர். சிறந்த தமிழறிஞர். நாடறிந்த நல்ல பேச்சாளர். எளிதில் யாரையும் குறை சொல்லமாட்டார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்....

வைரமுத்து ஏன் இப்படி பேசுகிறார்? ஒரு விழாவில் அவர் பேசியதைக் கேட்டேன்.

“நானோ கண் பார்த்தேன்

நீயோ மண் பார்த்தாய்”

என்ற பாடல் வரிகள் இதுவரை எவரும் சொல்லாத ஒன்று. எனது புதிய சிந்தனை’ என்று பேசினார். எல்லாருக்கும் தெரிந்த பிரபலமான திருக்குறள் கருத்துதானே இது. இதைப்போய் தனது புதிய சிந்தனை என்று சொல்கிறாரே என்று வருத்தப்பட்டார் அந்தப் பேராசிரியர்.

யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்

என்கிறார் திருவள்ளுவர்.

இதைத்தான் பேசும் தெய்வம் படத்தில்

உன்னை நான் பார்க்கும்போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

மண்ணை நான் பார்க்கும்போது

என்னை நீ பார்க்கின்றாயே

என்று கண்ணதாசன் எழுதினார்.

இதையேதான் ‘புதியவன்’ படத்தில்

நானோ கண் பார்த்தேன்

நீயோ மண் பார்த்தாய்

என்று வைரமுத்து எழுதியுள்ளார்.

இதே கருத்துப் பட ’புதுமைப் பெண்’ படத்தில்

நான் வந்து பெண் பார்க்க

நீ அன்று மண் பார்க்க

என்று எழுதியுள்ளார் வைரமுத்து. இதைத்தான் தனது புதிய சிந்தனை என்று அவர் சொன்னதாக வருத்தப்பட்டார் தமிழ்ப் பேராசிரியர்.

புதியவன் படத்தில் வரும் இதே பாடலில்

இது என்ன கூத்து அதிசயமோ

இளநீர் காய்க்கும் கொடி இதுவோ

என்று எழுதுவார் வைரமுத்து.

பேசும் தெய்வம் படத்தில் கண்ணதாசன் எழுதிய

‘அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ’ பாடலில் பெண்ணை வர்ணிக்கும்போது,

இள நீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல

மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல

இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல

இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல

என்று வரும். ‘இளநீரைச் சுமந்திருக்கும் தென்னைமரம்’ என்பதைத்தான் ‘இளநீர் காய்க்கும் கொடி இதுவோ’ என்று எழுதுகிறார் வைரமுத்து.

அதுமட்டுமல்ல, இதே பாடலில்

பருவம் அடைந்தால்

ஒரு பஞ்சம் இல்லை

அடடா பிரம்மன்

அவன் கஞ்சன் இல்லை

நீயே அழகின் எல்லை

என்று எழுதுகிறார் வைரமுத்து.

பிரம்மனை கஞ்சன் என்றுதான்

நினைத்தேன்

உன் இடையைப் பார்த்தபோது

என்ற புதுக்கவிதையை அப்படியே எடுத்து ஜீன்ஸ் படப்பாடலில் பயன்படுத்தியதை ஏற்கனவே சொன்னேன் அல்லவா? அதைத்தான் இங்கே கொஞ்சம் மாற்றி

பருவம் அடைந்தால்

ஒரு பஞ்சம் இல்லை

அடடா பிரம்மன்

அவன் கஞ்சன் இல்லை

என்று எழுதுகிறார். பரவாயில்லையே, ஒரு புதுக்கவிதையின் சில வரிகள் மட்டுமே பல பாடல்களை எழுத வைரமுத்துவுக்கு உதவி இருக்கிறதே.

புதியவன் படத்தின் இந்த ஒரு பாடலில் மட்டும் ஒரு திருக்குறள், ஒரு கண்ணதாசன் பாடல், ஒரு புதுக்கவிதை ஆகியவற்றின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. ஆனாலும் இதை திருட்டு என்று சொல்வது தவறு. ஒன்றில் இருந்து எடுத்தால்தான் திருட்டு. பலவற்றில் இருந்து எடுத்தால் அது திரட்டு.

(எடுத்தது வரும்)

எடுத்தது எங்கே- 12



ஜீன்ஸ்(1998ல் வெளியானது) படத்தில் வரும் ‘ஹைர...ஹைர ஹைரோபா’ பாடலில்,

முத்தமழையில் நனைஞ்சுக்கலாமா

உதட்டின் மேலே படுத்துக்கலாமா

என்று வரிகள் வரும்.

உதட்டின் மேலே படுத்துக்கலாமா என்பதற்கு என்ன பொருள்? உதட்டின் மீது கன்னம் வைத்து படுத்துக்கொள்வதுதானே?

உள்ளத்தை அள்ளித் தா(1995ல் வெளியானது) படத்தில், ‘ஐ லவ் லவ் யூ சொன்னாளே...’ பாடலில்

உள்ளங்கையில் கன்னம் வைத்து

துõங்கப் பிடிக்கும்

என்று எழுதுவார் பழனி பாரதி. இதுதானே ஜீன்ஸ் படப்பாடலில்

உதட்டின் மேலே படுத்துக்கலாமா

என்று உருமாற்றம் பெற்றுள்ளது. உள்ளங்கை, இங்கே உதடு ஆனது அவ்வளவுதான்.

வயல்களில் வேலை செய்யும்போதும், தண்ணீர் இறைக்கும்போதும் அலுப்பு தெரியாமல் இருக்க தமிழ் மக்கள் பாட்டுப் பாடும் வழக்கம் உண்டு. அவர்களே பாட்டுக்கட்டி பாடுவார்கள். ராகமும் அவர்களே. வேலை செய்யும் போது பாடும் பழக்கம் படிப்படியாக பலவற்றுக்கும் பரவியது. தாலாட்டு பாடினர். ஒப்பாரி பாடினர். பின்னர், திருமணத்தின்போதும் மணமக்களின் குடும்பம் மணமக்கள் பற்றி பாடத் தொடங்கினர். இந்த திருமணப்பாடல்கள் மணமக்களுக்கு அறிவுரை கூறுவதாகவும் அமையும்.

செட்டிநாட்டு மக்கள் பாடிய திருமணப்பாடல் ஒன்றில்

வட்டுவப்பை வைக்க மறந்தாலும்

வண்டார் குழலாளை வைக்க மறவாதே

என்று வரும். வட்டுவப்பை என்பது பணம் வைத்து, அதைப் பாதுகாப்பாக இடுப்பில் கட்டிக்கொள்ள பயன்படுத்தப்படும் பை. அப்படி வட்டுவப்பையில் பணத்தை வைத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, அதன்மேல்தான் வேட்டி கட்டுவார்கள். அத்தகைய வட்டுவப்பையை பாதுகாப்பாக வைக்க மறந்துபோனாலும் பரவாயில்லை, வண்டார் குழலாளை அதாவது உன் மனைவியைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மறந்துவிடாதே என்று சொல்கிறது இந்தப் பாடல்.

இத்தகைய பாடல்களை காட்டுப்பாடல்கள் என்றும் நாடோடிப் பாடல்கள் என்றும் சொல்லி வந்தனர். பின்னர், அவற்றை கவுரவிக்கும் வகையில் மக்கள் பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் என்று அழைத்தனர். இத்தகைய பாடல்களை தொகுத்து ‘ஏட்டில் எழுதாக் கவிதைகள்’ என்ற அழகான தலைப்பில் நுõலாக வெளியிட்டுள்ளார் செ. அன்னகாமு.

இந்த நூõலில் வரும் ஒரு பாடல்.

பாடறியேன் படிப்பறியேன்

பள்ளிக்கூடம் நானறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன்

எழுத்துவகை நானறியேன்

ஏட்டிலே எழுதவில்லை

எழுதிநான் படிக்கவில்லை

வாயிலே வந்தபடி

வகையுடனே நான்படிப்பேன்

அட அப்படியா என்று வியப்பாக உள்ளதா உங்களுக்கு. நீங்கள் நினைப்பது சரிதான்.

சிந்துபைரவி படத்தில் சித்ரா பாடும் பாட்டுதான் இது. இந்த ஏட்டில் எழுதாக் கவிதையை எடுத்துதான் ஏட்டில் எழுதி இசைத்தட்டில் ஏற்றக் கொடுத்துவிட்டார் வைரமுத்து.

பாடறியேன் படிப்பறியேன்

பள்ளிக்கூடம் நானறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன்

எழுத்துவகை நானறியேன்

ஏட்டிலே எழுதவில்லை

எழுதி வச்சு படிக்கவில்லை

என்ற பாடல்தான் அது என்பது சொல்லாமலே உங்களுக்குப் புரியும்.

எழுதி நான் படிக்கவில்லை

என்பதை

எழுதிவச்சு படிக்கவில்லை

என்று மாற்றியதும் அதன் பிறகு வந்த வரிகளை எழுதியது மட்டும்தான் வைரமுத்து செய்திருக்கும் வேலை. பெரும்பாலான திரைப்பட பாடலாசிரியர்களுக்கு, இத்தகைய ஏட்டில் எழுதாக் கவிதைகளில் இருந்துதான் கச்சாப் பொருள் கிடைக்கிறது.

(எடுத்தது வரும்)

எடுத்தது எங்கே- 11



ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் புதுக்கவிதை உச்சத்தில் இருந்தது. 1983ல் நான் மாணவனாக இருந்தபோது, ‘இருட்டுச் சுவடு’ என்ற புதுக்கவிதை நுõலை வெளியிட்டேன். எனது நண்பர் மருதுõர் அரங்கராசன் ஒரு இலக்கணப் புலவர். எனது புதுக்கவிதை நுõலைப் படித்துவிட்டு அவருக்கும் புதுக்கவிதை எழுதும் ஆசை பிறந்தது. நிறைய எழுதி எடுத்துவந்து என்னிடம் கொடுத்தார். அதில் ஒரு கவிதை,

பிரம்மனை

கஞ்சன் என்றுதான்

நினைத்தேன்

உன் இடையைப்

பார்த்தபோது.

பிறகுதான் தெரிந்தது

அவன்

வள்ளலாகவும் இருக்கிறான்

என்று எழுதியிருந்தார். அதைப் படித்த நான்,

‘பிறகுதான் தெரிந்தது’

என்று இருந்தால் சட்டென்று புரியாது என்று சொல்லி,

‘சற்று நிமிர்ந்தபோதுதான் தெரிந்தது’

என்று மாற்றினேன். கவிதைகளை தொகுத்து ‘ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது’ என்ற பெயரில் நுõலாக வெளியிட்டார் அரங்கராசன்.

அந்த நுõலுக்கு கவிஞர் மு. மேத்தாவிடம் அணிந்துரை வாங்கினார். மேத்தா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ‘கவிதைக் கன்னி இவருக்கு கடைக் கண் காட்ட மறுக்கிறாள்’ என்று அணிந்துரையில் குறிப்பிட்டார். நுõல் வெளியானதும், உவமைக் கவிஞர் சுரதாவிடம் கவிதை நுõலைக் கொடுத்தோம். மேத்தா எழுதியதைப் படித்த சுரதா, “நீ இலக்கணப்புலவன்; அவரிடம் அணிந்துரை வாங்கிதான் நீ விளம்பரம் தேடணுமா? பல்லுக்கு ஏன் வெள்ளை அடிக்கிறாய்?” என்று கேட்டார்.

இந்த நுõலில் இடம் பெற்ற ஒரு கவிதையை, தான் மிகவும் ரசித்ததாக ஒரு வார இதழில் எழுதினார் வைரமுத்து. அவர் எழுதியது இதுதான்...

“இன்னும் ஒரு கவிதை. அங்க வர்ணனையைக்கூட ஒரு கவிஞன் எவ்வளவு அழகாகச் சொல்லியிக்கிறான் என்று வியந்து வியந்து வியப்பின் உச்சிக்குச் சென்று விழுந்துவிட்டேன்.

நுட்பமான ஒரு விஷயத்தையும் அவன் செப்பமாகச் சொல்லியிருக்கிறான்.

நான் படித்த அந்தக் கவிதை நயமாக இருக்கிறது.

ஆனாலும் உங்களுக்குச் சொல்ல எனக்குப் பயமாக இருக்கிறது.

தன் காதலியைப் பார்த்து அவனது கவிதை கண்ணடிக்கிறது.

பிறகு சொல்கிறது:

பிரம்மனை கஞ்சன் என்றுதான்

நினைத்தேன்

உன் இடையைப் பார்த்தபோது

சற்று நிமிர்ந்தபோதுதான் தெரிந்தது

அவன்

வள்ளலாகவும் இருக்கிறான்

இப்படியெல்லாம் அழகுணர்ச்சியின் அடையாளமாக புதுக்கவிதை விளங்குகிறது.

இவ்வாறு வைரமுத்து எழுதியது அவருடைய ‘கேள்விகளால் ஒரு வேள்வி’ நுõலில்(எட்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2011, பக்கம் 20) இப்போதும் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கவிதையைத்தான் அப்படியே எடுத்து, ஜீன்ஸ் படத்தில் வரும் ‘அன்பே...அன்பே...கொல்லாதே’ பாட்டில் பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து. அந்த வரிகள் இதோ....

பெண்ணே உனது மெல்லிடைப் பார்த்தேன்

அடடா பிரம்மன் கஞ்சனடி

சற்றே நிமிர்ந்தேன் தலைச்சுற்றிப்போனேன்

ஆஹா அவனே வள்ளலடி!

படித்து வியந்த கவிதையை சிலாகித்து எழுதிவிட்டு, அதை அப்படியே எடுத்து திரைப்பாடலுக்கும் பயன்படுத்திக்கொண்ட வைரமுத்து, அந்த கவிதையை எழுதியவர் மருதுõர் அரங்கராசன் என்பதைக்கூட தனது நுõலில் குறிப்பிடவில்லை.

கண்ணதாசனின் ரசிகை ஒருவர் ஒரு பாடல் எழுதி கண்ணதாசனுக்கு அனுப்பினார். நாட்டுப்புறப் பாடல் வரியுடன் தொடங்கிய அந்தப் பாடல் கண்ணதாசனுக்கு பிடித்துவிட்டது. அந்த நேரத்தில் முள்ளும் மலரும் படத்துக்கு பாடல் கேட்டார் இயக்குனர் மகேந்திரன். ரசிகை அனுப்பியிருந்த பாடல், மகேந்திரன் சொன்ன கதைச் சூழலுக்கு பொருத்தமாக இருந்தது.

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு

நெய் மணக்கும் கத்திரிக்கா

என்ற பாடல்தான் அது. கண்ணதாசன் உடனே அந்த ரசிகைக்கு கடிதம் எழுதினார். அவர் அனுப்பிய பாடலை திரைப்படத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாமா? என்று அனுமதி கேட்டாராம். ரசிகையும் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தெரிவித்தாராம். அதன் பிறகே அந்தப் பாடலில் சிறு மாற்றம் செய்து இயக்குனருக்கு கண்ணதாசன் அனுப்பினார் என்று திரையுலக நண்பர் ஒருவர் ஒரு முறை என்னிடம் கூறினார். கண்ணதாசனின் நேர்மை கேட்டு வியந்தேன்.

(எடுத்தது வரும்)

Thursday 11 December 2014

எடுத்தது எங்கே-10



இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சி முதன் முதலாக ஆட்சியைப் பிடித்தது தமிழகத்தில்தான். அது, 1967ல் அண்ணாதுரை தலைமையில் அமைந்த திமுக ஆட்சி. அந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காமராஜரை தோற்கடித்தவர் திமுக வேட்பாளர் மாணவர் தலைவர் பெ. சீனிவாசன். 1983ல் அமைச்சர் காளிமுத்துவை கோட்டையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது பெ. சீனிவாசனும் அங்கு இருந்தார். திரைப்பாடல்கள் பற்றி பேச்சு வந்தது. “பயணங்கள் முடிவதில்லை படத்தின் ‘சாலையோரம் சோலை ஒன்று வாடும்’ பாடலில்

கண்ணாளனைப் பார்த்து

கண்ணோரங்கள் வேர்த்து

எழுதியிருக்கிறாரே வைரமுத்து. அது என்ன கண்ணோரங்கள் வேர்த்து, நெற்றி வியர்க்கும். கண்ணோரம் வியர்த்ததாக கேள்விப்பட்டதில்லையே” என்று விமர்சனம் செய்தார் பெ. சீனிவாசன். இப்படி வைரமுத்துவின் பாடல்கள் பற்றி பல தரப்பில் இருந்தும் அவ்வப்போது விமர்சனம் வருவதுண்டு.

மண் வாசனை படத்தில் ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ பாடலில்,

பெண்: ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்

வெட்க நிறம்போக மஞ்சக் குளிச்சேன்

ஆண்: கொஞ்சம் மறைஞ்சு பார்க்கவா?

இல்ல முதுகு தேய்க்கவா?

பெண்: அது கூடாது

இது தாங்காது

ஆண்: சின்னக் காம்புதானே

பூவத் தாங்குது

என்று வரும். அவள் குளிப்பதை மறைந்திருந்து பார்க்கவா? அல்லது அருகில் வந்து உனக்கு முதுகு தேய்த்துவிடவா? என்று கேட்கிறான் அவன். இன்னும் திருமணம் ஆகவில்லை. ‘நீ முதுகு தேய்த்தால்; உன் கைபட்டால், அதனால் ஏற்படும் காம வேட்கையை என்னால் தாங்க முடியாது’ என்கிறாள் அவள்.

அதற்கு அவன் சொல்கிறான். ‘பூவை சின்னக் காம்பு தாங்கவில்லையா? அதுபோல, காமம் பெரிதானாலும் அதை உன்னால் தாங்க முடியுமே’ என்கிறான். இதான் இந்தப் பாடல் உணர்த்தும் பொருள்.

சங்க இலக்கியமான குறுந்தொகையில் ஒரு பாடல் வரும்.

வேரல்வேலி வேர்க்கோட் பலாவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!

யார் அஃது அறிந்திசினாரே! சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் துõங்கியாங்கு, இவள்

உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே

என்பது அந்தப் பாடல்.

இதில்,

சிறுகோட்டுப் பெரும்பழம் துõங்கியாங்கு, இவள்

உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே

என்ற வரிகளுக்கு, ‘சிறிய காம்பிலே பெரிய பலாப்பழம் தொங்கிக்கொண்டிருப்பது போல, தலைவியின் உயிர் மிகச் சிறிது; அவளின் காமமோ மிகப் பெரிது. அதாவது, பெரிய பலாப்பழத்தை சிறு காம்பு தாங்குவது போல பெரும் காமத்தை சிறிய இவள் உயிர் தாங்கிக்கொண்டுள்ளது’ என்பது இதற்கு பொருள்.

இதுதான். பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில்

பெண்: அது கூடாது

இது தாங்காது

ஆண்: சின்னக் காம்புதானே

பூவத் தாங்குது

என்று வருகிறது. அங்கே பலாப்பழம்; இங்கே பூ; அவ்வளவுதான்.

சங்கர் இயக்கத்தில் வெளியான படம் ஜீன்ஸ். பெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. வைரமுத்து எழுதிய பாடல்கள்தான். இந்தப் பாடல்கள் வைரமுத்துவுக்கு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தன. இந்தப் பாடல்கள் எங்கிருந்து வந்தன என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன். (எடுத்தது வரும்)

எடுத்தது எங்கே -9



அவரைக்குப் பூவழகு

அவ்வைக்கு கூனழகு

என்று ஒரு பழயை தனிப்பாடல் உண்டு. இதை வைத்து, எதெல்லாம் எதற்கு அழகு என்று சிந்தித்தார் வைரமுத்து. அதில் பிறந்ததுதான் ‘புதிய முகம்’ படத்தில் வரும்

கண்ணுக்கு மையழகு

கவிதைக்குப் பொய்யழகு

என்ற பாடல். அவரைக்குப் பூவழகு என்ற தனிப்பாலின் நீட்சிதான் புதிய முகம் பாடல்.

இதே போல, திருடா திருடா படத்துக்கு

‘கண்ணும் கண்ணும்

கொள்ளையடித்தால்

காதல் என்று அர்த்தம்

என்று முதல்வரியை எழுதிய வைரமுத்து, அடுத்து எது எதுக்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்தார்.

பூவை வண்டு கொள்ளையடித்தால்

புதையல் என்று அர்த்தம்

புதையல் என்னை கொள்ளையடித்தால்

மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்

என்ற அழகிய பாடல் வரிகள் பிறந்தன. ஆனால், இந்தப் பாடலில் ஒரு வரியில் சிக்கிக்கொண்டார் வைரமுத்து. அதாவது,

அழகு பெண்ணின்

தாயார் என்றால்

அத்தை என்றே

அர்த்தம் அர்த்தம்

என்று எழுதி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அழகான பெண்ணையெல்லாம் மணந்துகொள்வதற்கான முறைப் பெண்ணாக பார்க்கும் பார்வைதான் இந்த வரிகள். மனைவியைத் தரவிர மற்ற பெண்களை தாயாக, தங்கையாக, தமக்கையாக கருத வேண்டும் என்று போதிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு கவிஞனுக்கு உண்டு. அதுதான் இந்தியப் பண்பாடு.

வானும் மண்ணும் ஹேண்ட் ஷேக் பண்ணுது

உ<ன்னால் ஈஸ்வரா...

என்ற பாடலில்

‘பிரியமா பெண்ணை ரசிக்கலாம்’

என்று ஒரு வரி வரும். தமிழ் தெரியாத உதித் நாராயணன் இந்தப் பாடலைப் பாடும்போது, பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’ என்று பாடினார். நல்ல வேளை ரெக்கார்டிங் நடந்த போது அருகில் இருந்த வைரமுத்து, உடனடியாக தலையிட்டு அதை திருத்தினார். இது பற்றி குறிப்பிட்ட வைரமுத்து,

‘பிரியமா பெண்ணை ரசிக்கலாம்’ என்பதை ‘பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’ என்று பாடினார். நான் அருகில் இருந்ததால் பாடல் தப்பியது. பாட்டு கெட்டாலும் பரவாயில்லை; பண்பாடு கெடலாமா?’ என்று சொன்னார்.

இப்படி பண்பாடு பற்றி பேசிய வைரமுத்துதான், ‘அழகு பெண்ணின் தாயார் என்றால் அத்தை என்றே அர்த்தம்’ என்று எழுதினார். அவரை விமர்சித்தவர்கள், தங்கை அழகாக இருந்தால் அம்மாவை அத்தை என்று அழைக்க முடியுமா? என்று கேட்டனர்.

இந்தப் பாடலில்

இரவின் மீது வெள்ளையடித்தால்

விடியல் என்றே அர்த்தம்

என்று ஒரு வரி வரும்.

குடும்ப விளக்கு காவியத்தில்

தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த

கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது

புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்

மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்

என்று வரும் வரிகளில் விடியலை வர்ணிக்கிறார் பாவேந்தர். எப்படி?

ஒரு தொட்டி நிறைய நீலம் கரைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதில் சுண்ணாம்பை கலந்தால் எப்படி இருக்கும்? அத போல, விடியலில் இருள் தன் கட்டுக் குலைந்தது என்று சொல்கிறார்.

தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த

கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது

என்ற வரிகள்தான்

இரவின் மீது வெள்ளையடித்தால்

விடியல் என்றே அர்த்தம்

என்று உருமாற்றம் பெற்றுள்ளது.

முதலாளி படத்தில்

ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நான் ஒரு தொழிலாளி

என்ற பாடல்தான் ரஜினி நடித்த முத்து படத்தில்

ஒருவன் ஒருவன் முதலாளி

உலகில் மற்றவன் தொழிலாளி

என்று உருமாற்றம் பெற்றுள்ளது. இதை எழுதியவரும் வைரமுத்துதான்.

(எடுத்தது வரும்)

எடுத்தது எங்கே -8





முதல்வன் படப் பாடலான ‘உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு’ பாட்டில் வரும்

‘முத்தமிட்டு நெத்தியில

மார்புக்கு மத்தியில

செத்துவிட தோணுதடி எனக்கு’

என்ற வரிகளைச் சொல்லிதான் வியந்துபோனார் நண்பர்.

இதைக் கேட்டதும் நான் சொன்னேன்...

நாகூர் அனீபா பாடிய ‘மதினா நகருக்கு போக வேண்டும்’ என்ற பாடலில்,

நேருக்கு நேர் நின்று

நெஞ்சத்தில் முகம் வைத்து

ஆரத் தழுவி என் ஆவி பிரிய வேண்டும்

என்று வரும் எனச் சொன்னேன். அதற்கு மேல் நான் எதுவும் விளக்கக்கூட வில்லை. ‘ அப்படியா? என்னமோ நினைச்சு வியந்தேன்...பொசுக்குன்னு ஆக்கிட்டிங்களே’ என்றார் நண்பர்.

மனிதன் திரைப்படத்தில் இடம் பெற்ற

வானத்தைப் பார்த்தேன்;

பூமியைப் பார்த்தேன்;

மனுஷனை இன்னும் பார்க்கலையே

பாடலில்,

குரங்கினில் இருந்து பிறந்தானா?

குரங்கை மனிதன் பெற்றானா?

இரண்டு பேரும் இல்லையே!

அது ரொம்ப தொல்லையே!

என்று வரும். இதைக் கேட்டவுடன் பாவேந்தர்தான் என் நினைவுக்கு வந்தார்.

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்கிறது டார்வின் தத்துவம். சிலரைப் பார்த்து ‘ அவனா? அவன் கிடக்கிறான் குரங்குப் பயல்’ என்று சிலர் திட்டுவதைப் பார்க்கிறோம். குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்று பொருளில்தான் இப்படி திட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, குரங்கின் குணம் அவனிடம் இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனாலும் குரங்கில் இருந்து மனிதன் வந்தானாஉ மனிதனில் இருந்து குரங்கு பிறந்ததா என்ற ஒரு விவாதமும் ஏனோ இருந்துகொண்டுள்ளது.

இதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன் ஒரு கவிதையில்

குரங்கினின்று மனிதன் வந்தானா?

மனிதனிலிருந்து குரங்கு வந்ததா?

வையகத்தை வைதிலேன்

ஐயப்பட்டேன், ஆய்க அறிஞரே! என்று எழுதியுள்ளார். இந்தக் கவிதையில் வரும் அதே வரிகளும் அதே கருத்தும்தான் வைரமுத்து எழுதியுள்ள மனிதன் படப்பாடலில் அப்படியேயும் கொஞ்சம் உருமாற்றம் பெற்றும் இடம் பெற்றுள்ளது.

எடுத்தது வரும் ...

Tuesday 9 December 2014

எடுத்தது எங்கே -7



அமர தீபம் படத்துக்கு பாட்டெழுதும்படி கவிஞர் தஞ்சை ராமையாதாசிடம் கேட்டார் இயக்குனர் ஸ்ரீதர். பாட்டு ஜாலியானதாக இருக்க வேண்டும் என்றார்.

ஜாலிலோ ஜிம்கானா

டோலிலோ கும்கானா

என்று எழுதிக்கொடுத்தார் ராமையாதாஸ்.

இதுக்கு என்ன அர்த்தம்? ஒன்னும் புரியவில்லையே என்றார் ஸ்ரீதர்.

‘படத்தில் குறவன்- குறத்தி பாடும் பாடல்தானே இது. நரிக்குறவர் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. இதில் அர்த்தம் புரியாட்டி என்ன? பாட்டை எடுத்துக்கொண்டு போய் ரெக்கார்டு பண்ணு. படம் நல்லா ஓடும்’ என்று சொல்லி அனுப்பினார் ராமையாதாஸ்.

இதுபோன்ற பழைய பாடல்களைக் குறிப்பிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார் வைரமுத்து. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,

முக்காலும் காலும் ஒண்ணு

ஒங்கக்காளும் நானும் ஒண்ணு

என்றெல்லாம் பாட்டெழுதினார்கள். இப்படி இருந்த தமிழ்த் திரைப்பாடலில் படிமங்களைப் புகுத்தி புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளேன் என்றார்.

வைரமுத்து இப்படிச் சொல்லிய சில மாதங்களில் அம்மன்கோவில் கிழக்காலே படம் வெளியானது. அந்தப்படத்துக்காக

நம்ம கடைவீதி கலகலக்கும்

என் அக்காமக அவ நடந்து வந்தா

என்ற பாடலை எழுதினார் வைரமுத்து. இந்தப் பாடலில், ‘முக்காலும் காலும் ஒண்ணு’ என்ற பழைய பாடல் வரியை அப்படியே எடுத்து கையாண்டுள்ளார்.

கடைவீதி கலகலக்கும் பாடலில்

அடி முக்காலும் காலும் ஒண்ணு

இனி ஒண்ணோட நானும் ஒண்ணு

என்று எழுதி புதிய ‘பரிணாம’த்தை ஏற்படுத்தியுள்ளார்.

துõக்குத் துõக்கி படத்தில் ஒரு பாடல். மருதகாசி எழுதியது.

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த

மின்னொளியே ஏன் மவுனம்

வேறெதிலே உந்தன் கவனம்

என்று எழுதியுள்ளார் மருதகாசி. இந்தப் பாடல் முடியும்போது,

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே

கனிவுறும் காதல் ஜோதி

காண்போமே பாதி பாதி

என்று முடிகிறது.

இந்தப் பாடல்தான், வைரமுத்துவின் சிந்தனையில் புதிய ‘பரிணாமம்’ பெற்று

அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்றுள்ளது.

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே

கனிவுறும் காதல் ஜோதி

என்ற வரிகளை

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

என்று எழுதுகிறார் வைரமுத்து.

சங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனபடம் முதல்வன். இதன் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்தப் படத்தில் வரும் ‘உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு’ என்ற பாடலும் சூப்பர் ஹிட். வைரமுத்து எழுதியது.

இந்தப் பாடலைக் கேட்ட நண்பர் ஒருவர், அதில் வரும் ஒரு வரியைச் சொல்லி, ‘ஆஹா...என்ன அற்புதம்’ என்று வியந்து பாராட்டினார். உடனே நான், அந்த வரி எங்கிருந்து வந்தது என்பதை அவருக்குச் சொன்னேன். “அப்படியா? பாடலைக் கேட்டபோது நான் வியந்துபோனேன். அதை பொசுக்கென்று ஆக்கிவிட்டீர்களே” என்றார்.

எடுத்தது வரும் ...

எடுத்தது எங்கே 6



பழந்தமிழ் இலக்கியங்களில் காதலன், காதலியை ‘தலைவன், தலைவி’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் தேடச் செல்வான். இதற்குப் ‘பொருள்வயிற் பிரிவு’ என்று பெயர். இந்தப் பிரிவுக் காலம் மூன்று மாதங்களைத் தாண்டக் கூடாது.

அப்படி, தலைவன் பிரிந்து சென்றதால் வருந்தும் தலைவி, அவன் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து, கண்கள் பொலிவு இழக்கிறாள். அவன் சென்ற நாளை எண்ணி எண்ணிப் பார்த்து வருந்துகிறாள்.

விரல் விட்டு எண்ணுவது ஒரு வகை. விரலை ஒற்றி எண்ணுவது இன்னொரு வகை. அதாவது, பெருவிரல் நுனியால் மற்ற விரல்களின் நுனியை தொட்டு, ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவார்கள். அப்படி தலைவன் பிரிந்து சென்ற நாட்களை விரலை ஒற்றி ஒற்றி எண்ணி எண்ணிப் பார்க்கிறாள் தலைவி. இவ்வாறு எண்ணி எண்ணியே அவளின் விரல்கள் தேய்ந்துவிட்டன என்கிறார் திருவள்ளுவர். அந்தக் குறள் இதோ...

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.

இலங்கையின் அசோக வனத்தில் சீதையை சிறை வைத்துள்ளான் இராவணன். அங்கே,ராமனை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் விடுகிறாள் சீதை. அந்தக் கண்ணீரில் அவளது சேலை நனைகிறது. துன்பத்தாலும், தன் நிலையை எண்ணி அவள் விடும் பெருமூச்சாலும் உண்டாகும் உடல் வெப்பத்தால், கண்ணீரால் நனைந்த சேலை காய்ந்துவிடுகிறது என்று கம்பன் சொல்வான்.

ஒப்பினான்தனை நினைதொறும்

நெடுங்கண் உகுத்த

அப்பினால் நனைந்து அருந்துயர்

உயிர்ப்புடை யாக்கை

வெப்பினால்புலர்ந்த ஒரு நிலை

உறாத மென்துகிலாள்

என்பான் கம்பன்.

‘நாளொற்றித் தேய்ந்த விரல்’ என்று வள்ளுவனும் ‘வெப்பினால்புலர்ந்த ஒரு நிலை உறாத மென்துகிலாள்’ என்று கம்பனும் சொன்னதைத்தான் பாலை வனச்சோலை படத்தில் அப்படியே கையாண்டிருப்பார் வைரமுத்து.

அந்தப் படத்தில் வரும் ‘ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு’ பாடலில்

மாலை சூடும் தேதி எண்ணி பத்துவிரல் தேயும்- இவ

இழுத்துவிடும் பெருமூச்சில் ஈரச் சேலை காயும்

என்கிறார் வைரமுத்து.

தவப்புதல்வன் படத்தில்,

இசை கேட்டால் புவி அசைந்தாடும்- அது

இறைவன் அருளாகும்

என்று ஒரு பாடல். கண்ணதாசன் எழுதியது. 1970களில் வெளியான இந்தப் படப்பாடல் மிகவும் பிரலமானது. ‘கடல் மகள் தன்னுடை களைந்து பொன்னுடை பூண்டாள்’ என்று பாரதிதாசன் சொன்னதை எதிர்மறையாக சிந்தித்து நிழல்கள் படத்தின் ‘பொன் மாலைப்பொழுது’ பாடலில் ‘வானமகள் நாணுகிறாள்’ என்று சொன்னதுது போலவே, ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ என்ற வரியையும் எதிர்மறையாக சிந்திக்கிறார் வைரமுத்து.

காதல் ஓவியம் படத்தில் வரும் ‘அம்மா அழகே’ என்பாடலில்

இசை கேட்டால் புவி அசைந்தாடும்

என்பதையே அப்படியே மாற்றி

ஆகாயம் என்பாட்டில் அசைகின்றது- என்

சங்கீதம் பொய் என்று யார் சொன்னது

என்று எழுகிறார்.

‘ (எடுத்தது வரும்)

எடுத்தது எங்கே-5






குடும்பத்தலைவியை ‘இல்லாள்’ என்று சொல்கிறோம். ஆனால், குடும்பத்தலைவரை ‘இல்லான்’ என்று சொல்ல முடியாது. காரணம் ‘இல்லான்’ என்றால் ‘இல்லாதவன்’ என்ற பொருள்படும். தலைவன், தலைவி என்று சொல்வது போல, ‘புலவன்’ என்பதன் பெண்பாலாக ‘புலவி’ என்று சொல்ல முடியாது. புலவி என்றால் ஊடல் என்று பொருள்படும். பொதுவாக புலவன் என்று யாரும் சொல்வதில்லை. மரியாதை கருதி புலவர் என்றே சொல்கின்றனர். பெண்ணாக இருந்தால் ‘பெண்பால் புலவர்’ என்றே சொல்கின்றனர்.

ஒரு பெண்பால் புலவருக்கும் ஆண்பால் புலவருக்கும் மோதல் எற்பட்டதாம். ஆண்பால் புலவர் ஒரு நாள், “ஒரு காலில் நாலிலை பந்தலடி” என்று விடுகதை போட்டாராம். ‘டி’ என்றதால் கோபமடைந்த பெண்பால் புலவர், “ஆரையடா சொன்னாய்...அது ஆரைக் கீறையடா” என்று பதிலடி கொடுத்தாராம். ஒரு ‘டி’ போட்டதற்கு இரண்டு ‘டா’ போட்டார் பெண்பால் புலவர். என் சிறுவயதில் இப்படி ஒரு கதை சொன்னார் என் அப்பா.

புலவர்கள், இலக்கியவாதிகள் மோதிக்கொண்டால் கூட சுவாரசியமாகத்தான் இருக்கும். கற்கண்டும் கற்கண்டும் மோதிக்கொண்டால் கற்கண்டுதானே கிடைக்கும். அதனால்தான் புலவர்கள் திட்டினாலும் கூட தித்திக்கும். திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தவர் கண்ணதாசன். இது பற்றி ஒரு முறை கருணாநிதி கூறுகையில்,

‘திட்டுகின்றாய் என்றாலும்

தீந்தமிழால் என்பதனால்- அதை

பிட்டு என நினைத்தே சுவைத்திட்டேன்’

என்று சொன்னார்.

திரைப்பட பாடலாசிரியர் முத்துலிங்கத்துக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு முறை மோதல் வந்தது. மௌன கீதங்கள் படத்தில் “டாடி..டாடி.. ஓ மை டாடி...’ என்ற பாடலில்

“கøயோரம் நண்டெல்லாம்

தான் பெற்ற குஞ்சோடு

கைகோர்த்து விளையாடுதே”

என்று எழுதியிருப்பார் வைரமுத்து.

இதை விமர்சித்து ஒரு வார இதழில் எழுதினார் கவிஞர் முத்துலிங்கம்.

“நண்டு முட்டையிட்டுவிட்டு போய்விடும். கோழி போல அடை காக்காது. இதனால், தன் குஞ்சு எது என்றே நண்டுக்கு தெரியாது. இது தெரியாமல், ‘கரையோரம் நண்டெல்லாம் தான் பெற்ற குஞ்சோடு கைகோர்த்து விளையாடுதே’ என்று எழுதியிருக்கிறாரே. வைரமுத்துவுக்கு விவரம் தெரியவில்லை. என்ன பாட்டெழுதுகிறார் அவர்?” என்று கேட்டு கிண்டலடித்தார் முத்துலிங்கம்.

அடுத்த வாரம் வைரமுத்துவின் விமர்சனம். “முத்துலிங்கம் என்ன பாட்டெழுதுகிறார்?

‘புடி புடி கோழி

முட்டைக் கோழி- அதை

புடிச்சாந்து

கொழம்பு வைப்போம் வாடி’

என்று எழுதுகிறாரே முத்துலிங்கம். இதெல்லாம் ஒரு பாட்டா?” என்று கேட்டார் வைரமுத்து. இப்படி இவர்களின் மோதல் சுவாரசியமாக இருந்தது.

பாலைவனச் சோலை படத்துக்குதான் முதன்முதலாக எல்லா பாடல்களையும் வைரமுத்துவே எழுதினார். இந்தப் படத்தின் பாடலிலும் அவர் படித்தவை உருமாற்றம் பெற்று வரும்.

‘ஆளானாலும் ஆளு - இவ

அழுத்தமான ஆளு’

பாடலில் வரும் வரிகள் எங்கிருந்து வந்தது தெரியுமா?

 (எடுத்தது வரும்)

குறும்பு -5


கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருக்கும்போது, என் பக்கத்து வகுப்புப் பெண் ஒருவர் ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்த நான், “இந்தப் புத்தகம் யாருதுங்க”ன்னு கேட்டேன்.

அந்தப்பெண், “அவுருதுங்க”ன்னு சொல்லுச்சு.

“நிஜமாவா” ன்னு கேட்டேன்.

“நிஜமா அவுருதுங்க” ன்னு சொல்லுச்சு.

“அப்படின்னா இறுக்கிக் கட்டுங்க” என்றேன்.

அந்தப் பெண் புரிந்துகொள்வதற்குள் அந்த இடத்தில் இருந்து நான் எஸ்கேப்....


நான் எழுதிய ‘நனவோடை நினைவுகள்’ நூலில் இருந்து.


தூரத்தில் இருந்து பார்க்கும்போது உயரமாகத் தெரியும் பலர், அருகில் செல்லும்போது உயரம் குறைந்துவிடுவார்கள். அருகில் சென்று பழகியபோது ஒருவரின் உயரம் என் மனதில் அதிகரித்தது என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். அதற்குக் காரணம், கஷ்டப்படும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே அவருக்கு இருந்தது. அவரோடு பழகியபோது இதை என்னால் உணர முடிந்தது.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒருநாள் மாலை 7.30 மணிக்கு பத்திரிகையாளர்களை ராமாவரம் தோட்டத்தில் சந்திக்கிறார் என திடீரென்று அழைப்பு வந்தது. அவசரம் அவசரமாக் போனோம். ஹாலில் சோஃபாவில் எங்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் எம்ஜிஆர். 8 மணி ஆனது. ’எல்லா பத்திரிகையில் இருந்தும் நிருபர்கள் வந்தாச்சு. பேட்டியை ஆரம்பிக்கலாமே’ என்றோம்.

எம்ஜிஆர் உடனே ’பேட்டியெல்லாம் ஒண்ணுமில்லை. வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” என்றார்.

’பேட்டி இல்லையா?’ என்று கேட்டோம்.

‘செய்தி சொல்ல அழைக்கவில்லை. சும்மா சாப்பிடத்தான் உங்களையெல்லாம் அழைத்தேன்’ என்றார் எம்ஜிஆர்.

ஆங்கிலப்பத்திரிகை நிருபர் ஒருவர் கொஞ்சம் கோபமாக, ‘சாப்பிடுறதுக்கா வந்தோம்?’ என்று கேட்டார்.

எம்ஜிஆர் உடனே அருகில் சென்று, அவர் தோளில் கை போட்டு, ‘ஒரு நாள் உங்களோடு சாப்பிடணும்ன்னு ஆசைப்பட்டு வரச் சொன்னேன். தப்பா? வாங்க..உங்களுக்கு தனி டேபிளில் வெஜிடெரியன் ஏற்பாடு பண்ணியிருக்கேன்” எனறார். அவ்வளவுதான். நிருபர் கூல் ஆகிவிட்டார்.

பெரிய டைனிங் டேபிள். சிக்கன், மட்டன், மீன் என ஒவ்வொன்றிலும் பல ஐட்டங்கள். 20 பேர் உட்கார்ந்து சாப்பிட்டோம். எம்ஜிஆரும் சாப்பிட்டுக் கொண்டே, யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று கவனித்து ’அவருக்கு சிக்கன் வை, இவருக்கு மீன் வை’ என்று சொல்லி உபசரித்தார். வியப்பாக இருந்தது. என்னா ஷார்ப். அவருடைய வெற்றியின் ரகசியம் புரிந்தது.

---நான் எழுதிய ‘நனவோடை நினைவுகள்’ நூலில் இருந்து.


கவியரசரின் கேலிப் பேச்சு

கவியரசர் கண்ணதாசன் அவர்களிடம், ஒரு நிகழ்ச்சியில், ‘நடிகைக்கும் நடிகை கணவருக்கும் என்ன தொடர்பு?” என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு கவியரசர் சொன்ன பதில்.....

”புலி மார்க் சீயக்காய்த் தூளின் பாக்கெட்டில் உள்ள புலிக்கும் சீயக்காய்க்கும் உள்ள தொடர்பு”

கவியரசரின் மொழியாடல்


கவியரசரிடம் ஒரு நிகழ்ச்சியில், “ ஒரு கவர்ச்சி நடிகையுடனும் கதாநாயகியுடனும் ஒரு படகில் நீங்கள் போய்க்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நீச்சல் தெரியும். நடிகைகள் இருவருக்கும் நீச்சல் தெரியாது. திடீரென்று படகு கவிழ்ந்துவிடுகிறது? கதாநாயகியைக் காப்பாற்றுவீர்களா? கவர்ச்சி நடிகையைக் காப்பாற்றுவீர்களா? “ என்று கேட்டனர்.

இதற்கு கவியரசர் சொன்ன பதில்.....

“நான்....நதியைக் காப்பாற்றுவேன்”

Thursday 4 December 2014

தீயுமுன் அணை


நீள்கிறது தீ.... 
நேரத்தைக் கொன்று.... 
அணைக்க ஆளில்லாமலே.. 

அணைத்துவிட்டுப் போ 

நீளட்டும் நேரம்... 

கண்களால் தீ மூட்டியவளே.... 
கைகளால் அணைத்துச் செல்.... 

தேகம் தீயுமுன்..

கவிதை

என் வீட்டு வாசலாய் 

காத்திருக்கிறேன் 

உன் கோலம் பெறுவதற்காக 

உன் தெருக் கோடியில்

நான் மட்டும் யார்?



நிறையன்றி வேறில்லை -6


தயையான தத்துவனே

தமிழ் கொடுத்தாய்
தமிழால் உனைப்பாடும்
தகுதி கொடுத்தாய்...

பக்தி இல்லாமல்தான் பாடினேன்...
ஆனாலும்
பாடும் ஆற்றல் கொடுத்தாய்
அதன் வழி...
அன்பின் சுவையறிய ஞானமளித்தாய்...

பாலைவனப்பாதையில்
பரிதவித்தவன்
பசுஞ்சோலை கண்டதுபோல்
மனம் மகிழ்ந்தது...
உள்ளம் நெகிழந்தது...

சோலை சுகமும்
சொந்தமில்லை என்று
புழுதி புயல் வந்து தாக்கியது...
வழி தெரியாத அளவுக்கு
வந்து வந்து தாக்கியது
வலித்தது மனம்....

பாச தீபம் அணைந்துவிடுமோ என்று
பரிதவிக்கிறது மனம்... உன்
பாதம் கூட பணியாத நான்...
பாச தீபம் காக்க...அவர்களின்
பாதத்துக்கும் கீழாகப் பணிகிறேன்...

உறவு முறிந்தால்...
உ<ள்ளம் துடிக்கும்...
இன்னொரு வலி...
வலிக்கு வலிமை கூட்ட விரும்பாமல்
பணிகின்றேன் பாசத்துக்காக...
பாசத்தையும் பகட்டென்று
உதாசீனப்படுத்தி...
உதைத்தவர்கள் உண்டு...

எந்தப் பாறை
எங்கே வழுக்கும் என்ற
உண்மை தெரியாதவனாய்...
உலகம் புரியாதவனாய்....
உருள்கிறது வாழ்க்கை...
வழுக்கல் ஒவ்வொன்றிலும்
வலி வந்து கூடுகிறது...

எண்ணத்தில் இருப்பதினும்
எதார்த்தமே நிஜமென்பதை
ஏனோ எனக்கு உணர்த்த தவறிவிட்டாய்...
எதார்த்தம் உணர்ந்திருந்தால்
என் வலி கூடியிருக்காது...

நட்பு மலர் முகிழ்க்குமென்று
நாளும் எதிர் பார்த்திருக்கிறேன்
முட்புதர் அதுவென்று பிறகுதான் தெரிகிறது...

வாழக்கையையே
வழுக்கு மரம் ஆக்கிவிட்டவனே...

வலியைக் கொடுத்தாலும்
வழுக்குப் பாதையிலும்
வாழக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்...

வளம் சேர்கிறது...
நலம் கூடுகிறது...
சிகரம் தொட்டதாய் சிலநேரம்
சிந்தை மகிழ்கிறது...
சிறிது நேரத்தில்
சிலந்தி வலை பின்னுகிறது...

வலையில் விழாமல் இருக்க
வழுக்குப் பாறையில் விழுகிறேன்...
வலி... மீண்டும் வலி...

ஆனாலும்
அசராத மனம் கொடுத்தாய்...
எட்டாவது முறையாக
ஏன் விழுந்தேன் என்று வருத்தப்படாமல்
ஒன்பது முறை
உன்னால்தான் எழுந்திருக்க முடிந்திருக்கிறது...
இன்னொரு முறை முடியாதா என
உள்ளத் தெம்பு கொடுத்தாய்..

பார்த்துப் பார்த்தே
பாடம் படித்துவிட நினைக்கிறேன்..
நீயோ...
புடம் போட்டு புடம் போட்டே
புரிய வைக்கிறாய்...

சுயகொள்முதல்தான்
சுத்த நிர்குணம் என்கிறாய்...
வாழ்க்கையின்
வழி நெடுக தொடர்கிறது...
வலி...வாட்டம் தரும் வலி...

இனிப்பை மட்டுமே
இடைவிடாது கொடுத்துவிட்டு
இறுதியில் காரத்தைக் கொடுத்தால்
காரம் தாங்காமல்
கண்கள் சுரந்துவிடும்.

விழிகள் சிவக்குமளவுக்கு...
வியர்த்துக்கொட்டுமளவுக்கு...
மிளகாயை மட்டுமே
மீண்டும் மீண்டும் கொடுத்தாய்...
இறுதியில்
இனிப்பை கொடுத்தாய்....அதனால்
இதயத்தின் ஆழம் வரை இனிக்கிறது.
இனிப்பின் இன்பம்
இரு மடங்கு சுவைக்கிறது...

இறைவா...!
இனிமேலும் என்னை
உன்னோடு சண்டை போட விடாதே...

இன்பம் நீ...
துன்பம் நீ...
வாழ்வும் நீ...
வலியும் நீ....
எல்லாமும் நீ என்ற பிறகு...


நான் மட்டும் யார்? 

விரும்பியே விழுந்தேன்



நிறையன்றி வேறில்லை -5


மானம் பெரிதென்று
மனம் சொல்கிறது....

மானம் ஊனம் ஆனாலும்
பணம் பெரிதென்று ஊர் சொல்கிறது...

பூமிப் பந்தின் சுழற்சி வேகம்
பொருளை நோக்கியே போகிறது...
ஆனாலும்...
பொருளைப் பெரிதாய்
மதிக்கவில்லை என் மனம்..
மானம் பெரிதென்று மார்தட்டியது...
மகிழ்ச்சிதான்...என்றாலும்...
அந்த மகிழ்ச்சிக்கு கொடுத்த விலை...?
மீண்டும் ஒரு வீழ்ச்சி....

வீழ்ந்தேன்...
விழப்போகிறேன் என்று தெரிந்து
விரும்பியே வீழ்ந்தேன்...

உயரத்தில் இருக்கும்வரை
மதித்துச் சென்றவர்கள்
விழுந்துகிடக்கும்போது
மிதிப்பார்கள் என்று தெரிந்தே விழுந்தேன்...
மிதிபடுவதன் வலி...
மிதிபடும்போதுதான் தெரிந்தது...

விழுந்துவிட்டானே என்று
வேதனையில் துடிப்பார்கள் என
யாரை எதிர்பார்த்தேனோ...
அவர்களும் மிதித்தபோது...
வலியின் ஆழம் அதிகமாகிப் போனது...
இதயத்தின் ஆழத்தையும் தாண்டி...
மூளையின் முடிவையும் தாண்டி...
நரம்புகளின் செல்களுக்குள்ளும்
வலி வரம்பின்றி வாட்டியது...

வலியால் துடித்தபோது...
ஆகாயத்துக்கு அப்பாலும்
கேட்கும் அளவுக்கு
உறக்கக் கத்தி...கதறித் துடிக்க
உள்ளம் தவித்தது...
உறுதி தடுத்தது...

எல்லாவற்றையும் துறந்த சன்னியாசி
இறுதியாக வைத்திருந்த ஒரே ஒரு
இடையாடையைப் போல
மீண்டும் எழுவேன் என்ற
நம்பிக்கை மட்டும்தான்
இருந்தது என்னிடம்...

விழுந்தவன் எழுவதற்குள்தான்
எத்தனை இடர்பாடுகள்...
விழுந்த இடம் மண்ணில்தான்...
ஆனாலும்...
கிடந்த இடங்கள் எங்கெங்கோ...

காட்டாற்று வெள்ளம்
கண்டபடி அடித்துச் சென்றது...
மூழ்க வைத்தது...
மூச்சுத் திணறச் செய்தது...
கல்லும்... மண்ணும்....
கருவேல மரங்களும் காயப்படுத்தின...

புரட்டிப் புரட்டிப் போட்டு
போகும் திசையெல்லாம் இழுத்துச் சென்றது...
ஏதோ ஒரு கொம்பு கண்ணில் தெரிந்தது...
பிடித்துக் கொள்ளளாம்...
பிழைத்துக் கொள்ளலாம்
என்று பிடித்தபோது...
பிடித்தது பாம்பென்று பிறகுதான் தெரிந்தது...

முகம் சிதைந்து...
முகவரி இழந்து...
மூச்சுத் திணறி....
முடியப் போகிறோம் என்று
முணகும் வேளையில்....

உயிர் துடிக்கும் ஓசை
உனக்குக் கேட்டிருக்குமோ...
எங்கிருந்தோ ஒரு கை வருகிறது...
தாங்கிப் பிடிக்கிறது...
அது நீயன்றி வேறில்லை
என்பதைக் கூட
உணர முடியாதவனாய் இருந்தேன்...

துயரத்தின் உயரத்தையும்
அவலத்தின் ஆழத்தையும்
அறியச் செய்தாய்...

விழுந்தவன் மீண்டும்
எழுந்து சிறந்திட
வேகத்தைக் கொடுத்தவனே!
வலியைக் கூட
வசதியாக்கிக் கொள்ளும் வகையில்
வசப்படுத்த கற்றுக்கொடுத்தாய்...
ஆனாலும் வலி...வலிதானே...


முகிழ்த்தெழச் செய்கிறாய்

நிறையன்றி வேறில்லை -4

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
இறைவா!
அத்தனையிலும்
அன்புக்கு நிகர் எதுவுமில்லை
என ஆக்கி வைத்தாய்.

உருவமில்லாத அந்த
உணர்வுக்குத்தான் எத்தனை சக்தி?
உயிர் ஒவ்வொன்றுக்குள்ளும்
உணர்வை வைத்தாய்...
உணர்வை வைத்தே
உயிர்களைப் படைக்கிறாய்...

அன்பின் தீண்டலில்
ஆனந்தத்தை படைத்தாய்...
தீண்டும் இன்பம் தெரிய வைத்தாய்...
அதை தீண்டாமையாய்
ஏன் ஆக்கி வைத்தாய்?

ஒரே ஒரு குளத்தில் மட்டுமே
தவமிருந்த கொக்கு நான்...
குளம் நிரம்பும்...
மீன்கள் வரும் என்று...

வற்றிய குளத்துக்கு
வராமலே போனது தண்ணீர்...
கோடை நிலமாய்
குளத்தில் வெடிப்புகள்...
குளத்தில்மட்டுமல்ல- என்
உள்ளத்திலும்தான்...
ஆனாலும்
அடி ஆழத்தின் ஈரமாய்
கசிந்துகொண்டிருக்கிறது அன்பு...

மனதுக்குள் மழை பொழியும்
என்றுதான் காத்திருந்தேன்...
மாறாக...
ரத்தத்தில் புயலடித்தது...

அணைக்க ஆளில்லாமலே
ராத்தீ பரவுகிறது...
இப்போது
மனமெல்லாம் ரணம்...

ஐம்பத்தியிரண்டு
வசந்த காலங்கள்
வந்து போயிருக்கின்றன
என் வாழ்வில்.
ஆனால்...
ஐம்பத்தியிரண்டு
கோடைகளின்
கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன்.

வாழ்க்கையே போதும் என்று
வலி வந்து விரட்டும்போது...
வசந்தம் ஒன்றை
வாசலில் நிறுத்துகிறாய்...
வாழ்வின் மீது
பாசத்தைக் கூட்டுகிறாய்...
ஆனால்...
வசந்தம் வாசலோடே போய்விடுகிறது...
வரும் மீண்டும் என்று
வழி பார்த்துக் காத்திருக்கிறேன்...
வலி கூடுகிறது...

வலி தெரியாமல் போய்விடக் கூடாது என்று
போதை தெளிய வைத்து
அடிக்கின்ற ரவுடிகளைப் போல...
இறைவா... நீயுமா?
வசந்தத்தை காட்டி...
வாழ்வில் ஆசையைக் கூட்டி
வலியைக் கொடுக்கிறாயே...

உனக்கும் எனக்கும் நடக்கும்
உரிமைச் சண்டையா இது?

ஆனாலும் ...
மோகத்தைக் கொல்லாமல்
மூச்சை அடைத்துவிடாமல்
முத்துக் குளிக்க கற்றுக்கொடுத்தவன் நீ...

ஒவ்வொரு முறை
மூழ்கும்போதும்
முடிந்துவிடுவோமோ என்றுதான்
மூச்சடக்குகிறேன்...
மூல முதல்வனே...
முத்துக்களோடு என்னை

முகிழ்த்தெழச் செய்கிறாய்


தீர மறுக்கிறது



பருகித் தீர்க்கத்தான்
பகீரதனாய் முயல்கிறேன்

தீர மறுக்கிறது....
என் தாகமும்
உன் மோகமும்.

யாதுமாகி



யாதுமாகி
நின்றாய் என்றாய்....

ஏதுமற்றே தொடர்கிறது
என் நீள் பயணம்.

Wednesday 3 December 2014

காதல் பயிர்

பார்வை நீர்
ஊற்றிச் செல்....

பயிர் வளர்ந்து
காதல் விளையட்டும்

சுவாசமாய்

காத்திருக்கிறது மனம்
வெற்றிடமாய்.....

காற்று வந்து
நிரப்புமென்று.....

வா.....
என்னுள் சுவாசித்துப் போ

காலியான இருக்கை


நின்றபடி பயணம்...

இறங்க வேண்டிய
நிறுத்தம் வந்தது...

ஓர் இருக்கையும்
காலியானது..

உயிர்ப் பூ


ஓய்ந்துதான் கிடந்தது
உள்மனமும்...

இன்று
உயிர் வரை பூத்தது...

உன் ஒரு சொல்லில்.

உண்கண்...

உன் கண்
உண்கண்.....

எனை உண்கண்...

என்னாவேன்?

எண்ணத்தின் வண்ணம்

என்னுள்
உன் எண்ணம்...

மின்னும் வண்ணம்...

எண்ணத்தில் பூசுகிறாய்
வண்ணம்

மேகம் அறியா தாகம்

மேகம்...
கார்மேகம்...

கடக்குது அதிவேகம்...

அறியுமோ
என் தாகம்..

மலர் மனம்


மிதிக்கின்றபோதெல்லாம்
மவுனமாகிறேன்...

சருகாக இருந்தால்
சத்தமிடலாம்...

மலரல்லவா....
என் மனம்.

வரமா? சாபமா?


உன் பார்வைப் பாதையில்
என்
வார்த்தைகளின் வலம்

வரமா? சாபமா?...

வெளிச்சமில்லா விடியல்

விடியலுக்கு
விதியில்லை.....

சளைக்காமல் விடிகிறது....

வெளிச்சம்தான்
விழுவதில்லை...
என் மேல்

காத்திருக்கும் கவிதைகள்


உன்
ஒரு வார்த்தைக்காக
ஏங்கிக் கிடக்கிறது

என்னுள்
நூறு கவிதை

புன்னகைப்பூ


பூத்துக்கொண்டே இருக்கிறேன்
உன்
பூவிதழ்களில்
புன்னகையாய்

தொடரும் தாகம்...


நெருப்பை அணைக்க
நிலவில் காயலாம்...

ஒரு கோப்பை
மதுவின்றி
போதை தீரலாம்...

தேகம் முழுதும்
தீய்க்கும்...தாகம்
தீரலாம்....

இரவைத் தீர்த்தும்
இன்னும் தொடரலாம்...

Monday 1 December 2014

எடுத்தது எங்கே -4



சிவப்பு மல்லி படம் வெளியாகி அதில் வரும் ‘ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்’ பாடல் மிகவும் பிரலமானது. இதை எழுதியவர் வைரமுத்துதான். அதில்
நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ
என்று எழுதியிருக்கிறார்.
தமிழறிஞர் ஒருவருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, “தேன் குடிப்பதற்குத்தான் பூவில் வண்டு அமர்கிறது. இதனால் மகரந்தச் சேர்க்கையும் நடக்கிறது. இதைப் போய் தலை துவட்டுவதாக எழுதியிருக்கிறாரே. அவ்வளவு பொருத்தமாக இல்லையே” என்று சொன்னார். அவர் சொன்னது சரிதான். ஆனாலும், “திரைப்பாடல்தானே... ஏதோ புதுமையாக சிந்திப்பதாக எழுதியிருக்கிறார்” என்றேன். “மரபு மாற்றப்படுகிறதே” என்றார் அவர். “வைரமுத்து எழுதியிருப்பது ஒன்றும் இலக்கியம் இல்லையே” என்றேன்.
“விரிக்காத தோகை மயில் வண்டு வந்து
மடக்காத வெள்ளை மலர் நிலவு கண்டு
சிரிக்காத அல்லிமுகம் பாரில் யாரும்
ரசிக்காத இளமை நயம் பருவஞானம்”
கண்ணதாசன் எழுதிய மாங்கனி குறுங்காவியத்தில் வரும் வரிகள் இவை. கன்னிப் பெண் ஒருத்தியை இப்படி வர்ணிக்கிறார் கவியரசர்.

டிக் டிக் டிக் படத்தில் வரும் ‘இது ஒரு நிலாக்காலம்’ பாடலில்
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே
யாரும் வந்து நடக்காத சாலை நீயே
என்று எழுகிறார் வைரமுத்து.
வண்டு வந்து மடக்காத வெள்ளை மலர்
என்று கண்ணதாசன் எழுதியதுதான்
வண்டு வந்த உடைக்காத பூவும் நீயே
என்று வைரமுத்து பாடலில் வந்துள்ளது.


‘சிவந்த மண்’ படத்தில் வரும் ‘பார்வை யுவராணிக் கண்ணோவியம்’ எ ன்ற பாடலில்
பாலென்று சொன்னாலும்
பழமென்று சொன்னாலும்
ஏனென்று தேன் வாடுமே
என்று எழுதுவார் கண்ணதாசன். அவளை பால் என்றும் பழம் என்றும் வர்ணித்தால், என்னை ஏன் விட்டுவிட்டாய் என்று கேட்டு தேன் வருத்தப்படும் என்கிறார் கவியரசர்.
இதுதான் அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் ‘விழியில் விழுந்து உயிரில் கலந்து’ என்ற பாடலில் உருமாற்றம் பெற்றுள்ளது.


நீ
மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டால்
ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்
என்று எழுகிறார் வைரமுத்து.
அவள் மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டால், தன்னை சூடிக்கொள்ளவில்லையே என்று ரோஜாவுக்கு காய்ச்சல் வரும் என்கிறார் வைரமுத்து. ‘பால், பழம், தேன்’ என்று கவியரசர் சொன்னதையே ‘மல்லிகை, ரோஜா’ என்று மாற்றிப் போடுகிறார் கவிப்பேரரசர்
(எடுத்தது வரும்)

ஊமை மனம் அழுகிறது.

நிறையன்றி வேறில்லை -3

கல்வி...அதுவும்
கல்லூரிக் கல்வி...
மனதுக்கு மகிழ்ச்சியாய்...
இதயம் கவர்ந்ததாய்...
இருக்க வேண்டும்...
இதுதான் எனக்கு மகிழ்ச்சி யென்று
மனம் சொல்லியது...
மனத்துக்குப் பிடித்ததை படித்தேன்.

பிடித்ததைப் படித்தது
பிடிக்கவில்லை பலருக்கு...
கல்வியை காசாக்க வேண்டும் என்று
கங்கணம் கட்டும்போது...
விருப்பத்துக்கு அங்கே
வேலையன்றிப் போனது...

விலை கிடைக்க கூடியதே
வித்தகக் கல்வி என்று கருதியதால்
விரும்பிய கல்வி யை
வீண் என்று இகழ்ந்தனர்...
காசுக்கு ஆகாத கல்வி...
வாழ்வை உயர்த்தாது என்று
வசை பாடித் தீர்த்தனர்.

கற்காமல் இருந்திருந்தால் கூட
கவுரவம் கிடைத்திருக்கும்...
காசுக்காகத கல்வி என்ற
கணிப்பு அவர்களுக்கு இருந்ததால்
கவுரவம் எனக்கு மறுக்கப்பட்டது...

இதைப் படிக்கிறான்
இவன் என்று சொல்வதைக் கூட
இழிவாகக் கருதினர்...

இறைவா...!
இழிசொல் கேட்டு
இடிந்து போகாத மனம் கொடுத்தாய்...
அழிந்து போகாமல் இருக்க
ஆக்கம் கொடுத்தாய்...

அழுத்தம் தாங்கும்
கரிதான் வைரமாகும் என்பதை என்
அகத்தினுள் விதைத்தாய்...
விதைத்தது இன்று
வீண் போகவில்லை.
விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது...

வலி கொடுத்த தாக்கம்
வளர்ச்சிக்கு வித்திட்டது...
வளர்ந்தேன்....
ஆலமரமாய் அல்ல...
அருகம்புல்லாய்தான்....
அருகம் புல்லானாலும்
ஆண்டவனே உன் தோள்களில்...

ஆலமரத்தினும்
அருகம்புல்லாய் இருப்பதிலேயே
அகம் மகிழ்கின்றேன்...
ஆலமரத்தின் அடியில் எதுவுமே வளராது...
ஆதலால்....
ஆலமரத்தினும்
அருகம்புல்லாய் இருப்பதையே
அகம் விரும்புகிறது...

ஆண்டவனே உன்னால்
ஆசிர்வதிக்கப் பெற்றேன்.

கற்றது இன்று
கை கொடுக்கிறது...
காலத்தால் அழியா பேர் கொடுக்கிறது..

கற்றோர் அவையில்
கவுரவம் பெற்றுத் தருகிறது...
அவை கூடி போற்றுகிறது...
அகிலம் வாழ்த்துகிறது...

ஆனாலும் இறைவா....
வலி மட்டும் ஏனோ....
வழி நெடுக தொடர்கிறது...

வாழ்த்து மழையில் நனைந்தபோதும்...
வலிகள் மட்டுமே ஏனோ
வரிசை கட்டி நின்று
வாட்டம் தருகின்றன....

மறக்கத்தான் நினைக்கிறேன்...
மறக்க நினைப்பதாலேயே
மறக்காமல் நினைவுக்கு வருகிறது...
வலியின் ஆழம் வலியது அல்லவா...
அதனால்தான்....
ஊரே புகழ்கிறது....என்
ஊமை மனம் அழுகிறது.