Monday 17 October 2016

தமிழ் பழகலாம் வாங்க - 5



எனது மகன், என்னுடைய மனைவி ... என்று எழுதுவது தவறு. “இல்” என்பது இட வேற்றுமை உருபு என்று நேற்று சொன்னேன் அல்லவா, அதுபோல, மேலே சொன்ன தொடர்களில் எனது என்பதில் உள்ள ”அது”, என்னுடைய என்பதில் உள்ள “உடைய” ஆகிய இரண்டும் உடைமைப் பொருளுக்கான வேற்றுமை உருபுகள்.
மகன், மனைவி நமது உடைமை இல்லை. நம் உறவு, உரிமை. எனவே உடைமைப் பொருள் வேற்றுமை உருபை உறவுகளுக்கு சேர்த்து எழுதக்கூடாது. என்னுடைய வீடு, அவனுடைய மாடு என்று எழுதலாம். ஆனால், எனது மகன் என்றோ அவனுடைய மனைவி என்றோ எழுதுவது தவறு. என் மகன் அல்லது எனக்கு மகன் என்றும், அவன் மனைவி அல்லது அவனுக்கு மனைவி என்றுதான் எழுத வேண்டும்.
மனித உறவுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் மொழி நம் தமிழ் மொழி.

Friday 14 October 2016

தமிழ் பழகலாம் வாங்க 4


அறுபத்து மூன்று நாயன்மார்களுள் வணிக மரபில் வந்த ஐந்து பேர் பற்றி ஒரு நூல் வெளியிட்டேன். அதற்கு “அறுபத்து மூவருள் ஐவர்” என்று தலைப்பிட்டேன். அதைப்படித்த ஒரு நண்பர், “அறுபத்து மூவரில் ஐவர்” என்று இருந்தால் படிக்க எளிதாக இருக்குமே என்றார்.
அவர் சொன்னபடி எழுதினால் அது இலக்கணப்பிழை ஆகிவிடும்.

சென்னையில் வசிக்கிறான், கடையில் விற்கிறார்கள்...இந்த தொடர்களில் சென்னையில், கடையில் ஆகியவற்றின் இறுதியில் உள்ள “இல்” வேற்றுமை உருபு. அதாவது ஒரு இடத்தின் பெயரோடு வருகின்ற வேற்றுமை உருபு. அதனால் இதை இடவேற்றுமை உருபு என்பார்கள்.

இட வேற்றுமை உருபை மனிதர்களின் பெயரில் சேர்க்கக் கூடாது. எனவே, “அறுபத்து மூவருள் ஐவர்” என்றே எழுத வேண்டும்.
”இவர்களில் யார் நல்லவர்” என்று எழுதுவது தவறு.. “இவர்களுள் யார் நல்லவர்” என்றுதான் எழுத வேண்டும்.


Thursday 13 October 2016

சொற்கோயில் ஜூலை 1- 15



”சொற்கோயில்” மாதம் இருமுறை ஆன்மீக இதழ், கடந்த  ஜூலை முதல் வெளியாகி, மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. எழுத்துச் சித்தர் பாலகுமாரன், திரைப்பட வசன கர்த்தா கிரேசி மோகன், தன்னம்பிக்கை எழுத்தாளர் சோம வள்ளியப்பன் போன்ற பிரபலங்கள் தொடர்ந்து “சொற்கோயில் இதழில் எழுதி வருகின்றனர். ஆன் லைனில் வாசிக்க கீழ் உள்ள இணைப்பில் சொடுக்கவும்


                                     சொற்கோயில் ஜூலை 1 - 15



தமிழ் பழகலாம் வாங்க. 3



மனிதர்களை உயர்திணை என்றும் மனிதர் அல்லாத பிறவற்றை அஃறிணை என்றும் பிரித்தனர் நம் முன்னோர்.
அதாவது உயர் திணை, உயர்வு அல்லாத திணை. 
அல்லாத திணை, அல்திணை ஆகி, அஃறிணை என்றாயிற்று.
உயர்திணை, கீழ்திணை என்று சொல்லவில்லை. உயர்வு அல்லாத திணை என்று சொல்லி, மனிதர் அல்லாதவற்றுக்கும் மதிப்பு கொடுத்தனர் நம் முன்னோர்

Wednesday 12 October 2016

தமிழ் பழகலாம் வாங்க 2



தமிழைத் தவறாக எழுதுவது சிலருக்கு இயல்பு. அதில் அவர்களுக்கு ஒரு சுகம் போலிருக்கிறது.
ஒரு நாளிதழின் செய்திப்பிரிவில் நான் வேலை பார்த்தபோது, நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) என நான் எழுதியிருந்ததை, எனக்கும் மேலே உயர் பதவியில் இருந்தவர், “நீரழிவு நோய்”என்று மாற்றி எழுதினார். “நீரிழிவு நோய்” என்பதுதான் சரி என்றேன்.
எப்படி என்று கேட்டார்.
இழிதல் என்றால் இறங்குதல் என்று பொருள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர் அதிகம் இறங்கும். அதனால்தான் நீரிழிவு நோய் என்று பெயரிட்டனர் என்று விளக்கம் அளித்தேன்.
இணையத்தில் பார்க்கிறேன் என்று சொல்லி, இணையத்தில் பார்த்தார். நீரழிவு, நீரிழிவு என இரண்டு விதமாகவும் எழுதியிருந்தனர்.அதனால், நீரழிவு என்றே எழுதுங்கள் என உத்தரவிட்டார். தவறாகத்தான் எழுத வேண்டும் என்பது அவர் இயல்பு போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன்.

கல்லூரியில் படிக்கும்போது ஒரு கவிதை நூல் வெளியிட்டேன். நூல் அச்சாகிக்கொண்டிருந்த அச்சகத்துக்கு, பேராசிரியர் ஒருவருடன் போனேன். அச்சக உரிமையாளர் வெளியில் போயிருந்தார். அங்கு வேலை பார்த்த சிறுவனிடம் பணம் கொடுத்து டீ, பிஸ்கட் வாங்கி வரச் சொன்னேன். வாங்கி வந்தான்.
பிஸ்கட் சாப்பிடு என்று, சிறுவனிடம் கொடுத்தேன்.
””எனக்கு வேணாம் நீ சாப்பிடு”” என்றான்.
பேராசிரியர் உடனே, “ தம்பி, அவர் உன்னைவிட எவ்வளவு மூத்தவர். நீ என்று சொல்லக்கூடாது. நீங்க சாப்பிடுங்கன்னு மரியாதையா சொல்லணும்” என்று சிறுவனிடம் கூறினார்.
அவன் சொன்னான்.....
”நீங்கன்னுதான் நான் சொன்னேன். உன் காதில் அப்படி விழுந்திருக்கு”
என்ன செய்ய முடியும். இவனைப்போலதான் அவரும் என்று நினைத்துக்கொண்டேன்
.

Tuesday 11 October 2016

தமிழ் பழகலாம் வாங்க 1



ஒரு மாணவன், ஒரு மனிதன் என்று சொல்கிறோம். இலக்கணப்படி இது தவறு. அஃறிணைக்குதான் ஒரு என்று பயன்படுத்த வேண்டும். அதாவது, ஒரு வீடு, ஒரு மாடு என்று சொல்லலாம். உயர்திணைக்கு இவ்வாறு சொல்லக் கூடாது.

மாணவன் ஒருவன், மனிதன் ஒருவன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், ஒரு மாணவன், ஒரு நடிகை என்று சொல்வது பெருவழ்க்காக வந்துவிட்டதால், அதை ஏற்றுக்கொண்டுவிட்டோம்.
”ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” என்று ஒரு புதினம் எழுதி வெளியிட்டார் ஜெயகாந்தன். இந்தத் தலைப்பு, “நடிகை ஒருத்தி நாடகம் பார்க்கிறாள்” என்றுதான் இருக்க வேண்டும். ஜெயகாந்தனுக்குத் தமிழ் தெரியவில்லை” என்றார் ஒரு தமிழறிஞர்.
இதற்கு ஜெயகாந்தன் சொன்ன பதில்......
எனக்குத் தமிழ் தெரிகிறதோ இல்லையோ.....தமிழுக்கு என்னைத் தெரியும்.