அவனை நான் தேடிச் சென்றதில்லை. நாடிக் கேட்டதும் இல்லை. ஆனாலும், என்னை இழுத்துப் பிடித்து தன்னை எழுத வைத்திருக்கிறான். என்னை அவன் தேர்வு செய்தது எனக்குப் பெருமை. அதற்குத் தகுதி உடையவனாக என்னை ஆக்கியிருக்கிறான் என்பதில் மகிழ்ச்சி.
என் ஞான குரு மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகத்தை அழுதும் தொழுதும் வாசித்திருக்கிறேன். வாசித்தும் நேசித்தும் கண்ணீர் பெருகியிருக்கிறேன். அவர் போல் அல்ல....அது சாத்தியமும் அல்ல...ஆனாலும், அவர் கருத்துகளை உள் வாங்கிக் கொண்டு எழுத வேண்டும்...வாசிப்போர் உருக வேண்டும் என விரும்பினேன்.
இதை நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, எழுது என்று உற்சாகப்படுத்தினார்கள். இதில் முக்கியமானவர் எங்க டாக்டர் Sundari Kathir
முக நூலில் தினம் ஒரு பாடல் என பொருளோடு எழுதத் தொடங்கினேன். என் எழுத்தை வாசித்தும் அதில் இறையை பூசித்தும் என்னை உற்சாகப்படுத்தியவர்கள் பலர். இதில் முக்கியமானவர்கள் Pathy Ayyappan, Deepapriya Ramanan,Sivarama Krishnan iva ,Manju Bashini Sampathkumar , Manchula Jai .இவர்கள் தந்த உற்சாகத்தால்தான் இது சாத்தியமாயிற்று.
முகநூலில் தினமும் நான் எழுதிய பாடல்கள் எங்கோ கரைந்துவிடாமல், அதற்கென ஒரு பக்கம் உருவாக்கி, நண்பர்களுக்கெல்லாம் அழைப்புவிடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இதை வாசிக்க வைத்து 100 பாடல்களையும் சிந்தாமல் சிதறாமல் சேமித்துத் தந்தவர் முகநூல் தோழி Meera Blossom.
100 வது பாடல் எழுதி முடித்து, படித்துப் பார்த்தேன். கண்கள் பனித்தன. என் எழுத்துகள் எனக்கே இனித்தன. நம்ப முடியவில்லை...நானா எழுதினேன்... ஆனாலும் 100 பாடல்கள் நிறைவு பெற்றுள்ளன. சதமடித்துவிட்டேன் என சொல்ல முடியவில்லை. சதமடித்துவிட்டார் சிவன்.
இந்த நூறு பாடல்களும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவரும். ஆனந்தக் கூத்தன் நடம் புரியும் சிதம்பரத்தில் மே மாத இறுதியில் வெளியீட்டு விழா.
உருக வைத்து
கண்ணீர் பெருக வைத்து
என்னை எழுத வைத்த
என் ஞான குரு
மணிவாசகப் பெருமானின்
மலரடிகளில்
சமர்ப்பிக்கிறேன்
இந்நூலையும்
என்னையும்.
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_