திருக்குறள் கவிதைகள் 500 எழுதி முடித்துள்ளதை அடுத்து, எங்க டாக்டர் சுந்தரி கதிர் எழுதிய வாழ்த்துக் கவிதைக்கு அன்புச் சகோதரர் திரு பாலச்சந்தர் அவர்கள் பதிவு செய்த கருத்து கண்டு நெகிழ்ந்து போனேன்.
திருக்குறள் தேர்...
திருவடம் பிடித்திருக்கிறார்.
அவர் அருகில் நான்...
அவருக்கு உதவவா?
அதற்கு முடியுமா என்னால்...
அதற்கல்ல....
தேரிழுக்கும் அவர்
தேகம் வடியும்...
வேர்வையை துடைக்க!
தேவை ஓய்வென்றால்
தோகை சாமரம் வீச!
என்ற அவரின் வரிகளைப் படித்து, விழி நீரைத் துடைத்துக்கொண்டேன். இதற்கெல்லாம் நான் தகுதிதானா என எண்ணியபோது, பழந்தமிழ் வரலாறு ஒன்று என் நினைவுக்கு வந்தது.
சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையக் காணச் சென்றார் புலவர் மோசிகீரனார். மன்னர் வெளியில் சென்றிருந்தார். பயணக்களைப்பில் இருந்த புலவர், கண்ணில் பட்ட ஒரு கட்டிலில் படுத்துவிட்ட்டார். அது, அரசின் முரசுக் கட்டில். அதில் வைக்கப்பட்டிருந்த முரசு நகர்வலம் போயிருந்தது. முரசுக்கட்டில் புனிதத்துவம் மிக்கது. அதில் மன்னர் உட்பட யாரும் உட்காரவோ படுக்கவோ கூடாது.
அரண்மனை திரும்பிய மன்னன், முரசுக்கட்டிலில் யாரோ படுத்திருப்பதைப்பார்த்து, கோபம்கொண்டு, உடைவாளை உருவியபடி வெட்டிவீழ்த்த, முரசுக்கட்டிலை நொக்கி விரைந்தான். அருகில் சென்றபோதுதான் தெரிந்தது, படுத்திருப்பது புலவர் மோசிகீரனார் என்று. உடனே, உடைவாளை வீசிவிட்டு, அருகில் இருந்த வெண்சாமரத்தை எடுத்து, புலவருக்கு வெண்சாமரம் வீசினான் மன்னன்.
தமிழுக்கு அவன் அளித்த மரியாதை அது. அப்படித்தான்...திரு பாலச்சந்தர் அவர்கள் அளிக்கும் மரியாதையும், தமிழுக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதை அறிவேன். அவரின் தமிழ்ப்பற்றுக்குத் தலைவணங்குகிறேன்.
அவரின் முழுமையான பதிவு இதோ...
திருக்குறள் தேர்...
திருவடம் பிடித்திருக்கிறார்...
திடமாக..
தடுமாற்றம் ஏதுமின்றி
தனியாகவே இழுக்கிறார்!
எத்தனை பெரிய தேர்
எப்படி முடிகிறது இவரால்....
எல்லோரும் மலைக்க...
எவ்வளவு லாவகமாக
எவ்வளவு எளிமையாக
எவ்வளவு அழகாக
எவ்வளவு கலை நயத்தோடு
எவ்வளவு அறிவாற்றலோடு...
எப்படி இழுக்கிறார் தேரை!
எல்லோரும் ஒன்று பாருங்களேன்!
தனிவித்தை படித்தவரோ..
தன்னம்பிக்கை சிகரமோ..
தமிழ்த்தாய் பாலகனோ..
தமிழ் மகன் என்ற வீரமோ!
அவர் அருகில் நான்...
அவருக்கு உதவவா?
அதற்கு முடியுமா என்னால்...
அதற்கல்ல....
தேரிழுக்கும் அவர்
தேகம் வடியும்...
வேர்வையை துடைக்க!
தேவை ஓய்வென்றால்
தோகை சாமரம் வீச!
திரு.இரா.குமார் அவர்களின்
திருப்பணி...
திருத்தொண்டு...
தொடரட்டும்!
தமிழ்த்தாய் கழுத்தில்
தனிநகையாய் அது மிளிரட்டும்!
ஆண்டவனை வேண்டுகிறேன்...
அவன் அருள் புரியட்டும்!
--------------------------
சார்....தங்களின் அன்புக்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதாது.நன்றி என்பது சொல்லப்படுவது அல்ல. அது செய்யப்படுவது. உங்களின் அன்புக்கு நான் என்ன செய்துவிட முடியும்? என்னிடம் இருக்கும் தமிழைத் தருவதை தவிர...
ஆஹா சார்...
ReplyDelete