அகரம் தொடங்கி
சிகரத்தில் இன்று
================
ஒரு மாபெரும் பணி....
அன்னை மொழியின் அருளாலும்
ஐயனின் துணையாலும்
33 ஆண்டு கனவு
நனவாகியுள்ளது இன்று.
ஆம்....
திருக்குறள் முழுமையும்
ஒவ்வொரு குறளையும்
ஒரு புதுக்கவிதையாக எழுத வேண்டும் என்று
படிக்கின்ற காலத்திலேயே ஆசைப்பட்டேன்.
அது இப்போது நிறைவேறியுள்ளது.
ஒரு குறளை புதுக்கவிதையாக எழுதி,
இப்படி எல்லா குறளையும் எழுதலாமா? என்று
முகநூலில் பதிவிட்டேன்.
எழுதுங்கள் என்று நட்புகள் உற்சாகம் கொடுத்தனர்.
2014 ஏப்ரல் 9ம் தேதி தொடங்கினேன்.
தினம் ஒரு குறள் எழுதத்தான் முதலில் திட்டமிட்டேன்.
அதன்படி, முடிப்பதற்கு 4 ஆண்டுகள் ஆகும்.
தினம் ஒரு குறள் எனத் தொடங்கி,
பின்னர் ஒரு பாலுக்கு ஒன்று வீதம்
தினம் 3 குறள் என்று எழுதி,
அது வேகம் பிடித்து
தினமும் 8, 9 என்றாகி 20, 25 குறள்கள் எழுதினேன்.
பதினான்கே மாதத்தில்
1330
=====
குறள்களையும் புதுக்கவிதையில் எழுதி நேற்று நிறைவு செய்தேன்.
.
இந்த 14 மாதத்தில்
எத்தனையோ இடையூறுகள்.
துரோகங்கள்
துவள வைக்கும் சோகங்கள்
உக்கிர வெயிலால் உடல் சோர்வு
பணிச்சுமை,
வெளியூர் பயணம்
இப்படி தடை போட்டவை பல.
தாய்மொழிப் பற்றால்
குறள் நெறிக் கொள்கையால்
எடுத்தது முடிக்க வேண்டும் என்ற உறுதியால்
அகரம் தொடங்கியவன்
சிகரம் தொடுவேன் என்று சொல்லி
தளராது எழுதினேன்.
ஐயன் சொல்லும் பொருள் மாறிவிடக்கூடாது.
அதே நேரம் கவிச்சுவை குறையக்கூடாது.
ஐயனைக் குருவாகக் கொண்டு
அவரை மீறாமல் இருக்க வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்து எழுதினேன்.
இங்கே இதைப் படித்தவர்கள் சிலர்தான்.
தரத்துக்கான தளமில்லை இது என்பதறிந்தேன்.
ஆனால் படித்த சிலருள் சிலர்,
குறள் கவிதை படித்து மனம் மாறியதாகத் தெரிவித்தனர்.
இது, எழுத இன்னும் ஊக்கம் அளிப்பதாக இருந்தது
உலகப் பொதுமறையாம்
திருக்குறள் முழுவதையும்
புதுக்கவிதையில் எழுதி முடித்ததை
அதுவும் 14 மாதங்களில் முடித்ததை
எண்ணும்போது
எனக்கே இன்னமும் வியப்பாக இருக்கிறது.
அனைத்தும்
அன்னை மொழியால்
ஐயன் அருளால்
அன்பு நட்புகளின்
ஆதரவால் மட்டுமே
கை கூடியது
இமாலய சாதனையாக
எழுதி முடித்து
இளைப்பாரும் இந்த நேரத்தில்
எல்லாருக்கும் என் நெஞ்சு நிறை நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இப்பணி இன்னும் முடியவில்லை.
தொகுத்து நூலாக வெளியிட வேண்டும்.
அதுவரை ஓய்வில்லை.
உங்கள் அன்பான ஆதரவோடு அதுவும் முடியும்.
காத்திருங்கள்
குறளமுதம்
============
வெளியீட்டு விழாவுக்காக.
நானும் காத்திருக்கிறேன்
விழா எப்போது நடக்கும்
நட்புகளைக் காணலாம் என்று.
நன்றி நட்புகளே.
வணக்கம்.
---
அன்புடன்
இரா. குமார்
வாழ்த்துகள்...
ReplyDeleteவரும் பதிவர் விழாவில் வெளியிடலாம்... தங்களின் கருத்தை எதிர்நோக்கி...
வலைச்சரம் மூலமாக தங்கள் பதிவு பற்றி அறிந்து, வந்தேன். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete