++++++++++++++++++++++++++++++++++++
கலிங்கத்துப் பரணி யில் வரும் கடை திறப்புக் காதை போல சிருங்கார ரசத்தைப் பாடும் இலக்கியம் ஒன்று இல்லை என்றே சொல்லலாம். போர் முடிந்து வீடு திரும்பும் வீரார்கள், தன் வீட்டுக் கதவைத் தட்டுகின்றனர். பிரிவால் வருத்தத்தில் இருக்கும் பெண்கள், கதவைத் திறக்க மறுக்கின்றனர். அவர்களைப் புகழ்ந்து பாடி, கதவைத் திறக்கச் சொல்கிறார் செயங்கொண்டார். அதுதான் கடை திறப்புக்காதை. அதில் இருந்து ஒரு பாடல்....
முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல் மடவீர்
செம்பொற் கபாடம் திறமினோ!.
தங்களை ஒப்பனை செய்துகொண்ட அழகிய இளம் பெண்கள், பூப் பறிக்க தோட்டத்துக்குச் செல்கின்றனர். அவர்களின் அங்க அழகை ஒவ்வொன்றாக ரசித்து உருகிக் கிடக்கின்றனர் இளைஞர்கள். அப்போது அந்தப் பெண்கள், தோட்டத்தில் உள்ள செங்கழுநீர்ப் பூவைத் திருகி எடுத்து தங்கள் கூந்தலில் செருகுகிறார்கள்.
செங்கழுநீர்ப் பூவை மட்டுமா திருகி எடுத்து செருகினார்கள்? இல்லை. உருகிக் கிடந்த இளைஞர்களின் உயிரையும் சேர்த்துத் திருகி எடுத்து கூந்தலில் செருகிக் கொண்டு போகிறார்களாம். உருகிக் கிடந்தவன் செத்தான். அவன் உயிர் அவளிடம் அல்லவா இருக்கிறது இப்போது?
. அத்தகைய அழகிய பெண்களே போர் முடித்து உங்கள் காதலர் வந்துள்ளார், கோபம் தணிந்து, கதவைத் திறவுங்கள் என்கிறார் செயங்கொண்டார்.
இதே கருத்தை ”என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி” என்ற திரைப்பாடலைல் வைத்துள்ளார் முனியம்மா நடராஜன்.
கண்டாங்கி சேலை கட்டி
கைநிறைய கொசுவம் வச்சு
இடுப்புல சொருவுறியே கண்ணாம்மா
அது கொசுவமல்ல என் மனசு பொன்னம்மா.
எப்புடி?
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_