======================
பாண்டிய மன்னன் அவையில் கண்ணகி வழ்க்குரைக்கிறாள். தான் நீதி தவறியது அறிந்த மன்னன் உடனே உயிர் துறக்கிறான். இதைப் பார்த்தவர்கள், அந்த நிகழ்வு பற்றி சொல்வதாக நான்கே வரிகளில் இளங்கோ அடிகள் சொல்கிறார்....அந்தப்பாடல் இதோ....
மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொல் செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.
கணவன் கொலை செய்யப்பட்ட தகவல் கேட்டு, மண்ணில் விழுந்து புரண்டு அழுகிறாள் கண்ணகி. அப்படியே எழுந்து கண்ணீரும் கம்பலையுமாக பாண்டியன் அரசவைக்கு செல்கிறாள். அதன் பிறகு நடந்த நிகழ்வை, அதைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர்..எப்படி?
கண்ணகியின் உடம்பில் படிந்திருந்த புழுதியையும் அவளின் தலைவிரி கோலத்தையும் கையில் ஒற்றைச் சிலம்பையும் கண்ணீரையும் கண்டதுமே வழக்கிலே மன்னன் தோற்றான். வழக்குரைத்து கண்ணகி சொன்ன சொற்களைச் செவியில் கேட்ட உடனே உயிர்விட்டான் பாண்டியன்.
இதை எவ்வளவு அழகாக நான்கு வரியில் சொல்கிறார் இளங்கோவடிகள்.அதிலும் குறிப்பாக கடைசி இரண்டு வரிகள் படிக்கவே எவ்வளவு நயமாக இருக்கிறது பாருங்கள்....
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொல் செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_