=====================================
முத்தொள்ளாயிரத்தில் ஒரு பாடல்.....
இவன்என் நலங்க்கவர்ந்த கள்வன் இவன் எனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று - அஞ்சொலாய்
செல்லும் நெறியெலாம் சேரலார்க்கோக் கோதைக்குச்
சொல்லும் ப்ழியோ பெரிது.
தலைவி தன் தோழியை அழைத்துச் சொல்கிறாள். எப்படி அழைக்கிறாள்? “அஞ்சொலாய்” என்று அழைக்கிறாள். அதாவது, ”அழகிய சொல்லினளே” என்று தோழியை அழைக்கிறாள். ஏன் தெரியுமா? எப்போதும் தலைவி மகிழும்படியாகவேபேசுபவள் தோழி. தோழியின் சொல் மகிழ்ச்சி தருவதாகவே இருப்பதால், அவை அழகிய சொல்லாக இருக்கிறது தலைவிக்கு. அதனால், அழகிய சொல்லினளே என்று தோழியை அழைக்கிறாள். அழைத்து என்ன சொல்கிறாள்?
செல்லும் இடமெல்லாம் சேர மன்னன் மீது பழி சொல்கிறார்களே தோழி...என்கிறாள். சொல்வது யார்? இளம் பெண்கள். என்ன பழி சொல்கிறார்கள் தெரியுமா?
“என் அழகைக் கவர்ந்த கள்வன் இவன்”
”என் மன உறுதியை அழித்த கள்வன் இவன்”
என்று சேரனைப் பழி சொல்கிறார்களாம் இளம் பெண்கள்.சேர மன்னன் அவ்வளவு ஆணழகனாம். இதுவரை காதலில் விழாமல் இருந்தவள், சேர மன்னனைக் கண்டதும் காதலில் விழுந்தாள். அவனையே எண்ணி எண்ணி ஏங்குகிறாள். இதனால் உடல் இளைத்து, அழகை இழக்கிறாள். அதனால்தான், இவள் அழகை கவர்ந்து சென்ற கள்வன் அவன் என்று மன்னனைப் பழி கூறுகிறாள்.
இதுவரை யார் மீதும் காதல் கொள்ளாமல் உறுதியாக இருந்தாள். சேரனைப் பார்த்ததும் உடைந்ததாம் அவள் மன உறுதி. அதனால்தான், “எனது நெஞ்சம் நிறையழித்த கள்வன்” அதாவது, என் மன உறுதியை அழித்த கள்வன் சேரன் என்று சொல்கிறாள். இப்படி ஒருத்தி அல்ல...போகும் வழியெல்லாம் பல பெண்கள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு சேர மன்னனைக் கண்ட எல்லா பெண்களும் அவன் மீது காதல் கொண்டார்களாம். அப்படி ஒரு ஆணழகன் அவன்.
”என் நலம் கவர்ந்த கள்வன்” என்று தலைவி சொல்வதாகக் கூறுகிறார். இங்கே நலம் என்று குறிப்பிடுவது, தலைவியின் அழகைத்தான். அழகை ஏன் நலம் என்று சொன்னார் தெரியுமா?
பார்க்கும்போதும் பழகும்போது நினைக்கும்போதும் இன்பமளித்து தலைவனுக்கு நலம் பயக்கக் கூடியது தலைவியின் அழகு. அதனால்தான் அவள் அழகை ”நலம்” என்று குறிப்பிடுகிறார்.
எப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க நம்ம புலவர்கள்.
No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_