Thursday 4 December 2014

முகிழ்த்தெழச் செய்கிறாய்

நிறையன்றி வேறில்லை -4

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
இறைவா!
அத்தனையிலும்
அன்புக்கு நிகர் எதுவுமில்லை
என ஆக்கி வைத்தாய்.

உருவமில்லாத அந்த
உணர்வுக்குத்தான் எத்தனை சக்தி?
உயிர் ஒவ்வொன்றுக்குள்ளும்
உணர்வை வைத்தாய்...
உணர்வை வைத்தே
உயிர்களைப் படைக்கிறாய்...

அன்பின் தீண்டலில்
ஆனந்தத்தை படைத்தாய்...
தீண்டும் இன்பம் தெரிய வைத்தாய்...
அதை தீண்டாமையாய்
ஏன் ஆக்கி வைத்தாய்?

ஒரே ஒரு குளத்தில் மட்டுமே
தவமிருந்த கொக்கு நான்...
குளம் நிரம்பும்...
மீன்கள் வரும் என்று...

வற்றிய குளத்துக்கு
வராமலே போனது தண்ணீர்...
கோடை நிலமாய்
குளத்தில் வெடிப்புகள்...
குளத்தில்மட்டுமல்ல- என்
உள்ளத்திலும்தான்...
ஆனாலும்
அடி ஆழத்தின் ஈரமாய்
கசிந்துகொண்டிருக்கிறது அன்பு...

மனதுக்குள் மழை பொழியும்
என்றுதான் காத்திருந்தேன்...
மாறாக...
ரத்தத்தில் புயலடித்தது...

அணைக்க ஆளில்லாமலே
ராத்தீ பரவுகிறது...
இப்போது
மனமெல்லாம் ரணம்...

ஐம்பத்தியிரண்டு
வசந்த காலங்கள்
வந்து போயிருக்கின்றன
என் வாழ்வில்.
ஆனால்...
ஐம்பத்தியிரண்டு
கோடைகளின்
கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன்.

வாழ்க்கையே போதும் என்று
வலி வந்து விரட்டும்போது...
வசந்தம் ஒன்றை
வாசலில் நிறுத்துகிறாய்...
வாழ்வின் மீது
பாசத்தைக் கூட்டுகிறாய்...
ஆனால்...
வசந்தம் வாசலோடே போய்விடுகிறது...
வரும் மீண்டும் என்று
வழி பார்த்துக் காத்திருக்கிறேன்...
வலி கூடுகிறது...

வலி தெரியாமல் போய்விடக் கூடாது என்று
போதை தெளிய வைத்து
அடிக்கின்ற ரவுடிகளைப் போல...
இறைவா... நீயுமா?
வசந்தத்தை காட்டி...
வாழ்வில் ஆசையைக் கூட்டி
வலியைக் கொடுக்கிறாயே...

உனக்கும் எனக்கும் நடக்கும்
உரிமைச் சண்டையா இது?

ஆனாலும் ...
மோகத்தைக் கொல்லாமல்
மூச்சை அடைத்துவிடாமல்
முத்துக் குளிக்க கற்றுக்கொடுத்தவன் நீ...

ஒவ்வொரு முறை
மூழ்கும்போதும்
முடிந்துவிடுவோமோ என்றுதான்
மூச்சடக்குகிறேன்...
மூல முதல்வனே...
முத்துக்களோடு என்னை

முகிழ்த்தெழச் செய்கிறாய்


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_