Friday 19 December 2014

எடுத்தது எங்கே-14



காதலர் இருவர் சந்தித்துக் கொள்கின்றனர். இருவரும் ஒரே ஊரினர் அல்லர். உறவினர்களும் அல்லர். ஒரு இடத்தில் சந்திக்கின்றனர். கண்கள் பரிமாறிக்கொள்கின்றன. இதயம் இடம் மாறுகிறது. காதல் அரும்பியது. அன்பு நெஞ்சங்கள் கலக்கின்றன. அதைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்கின்றனர். என்ன சொல்கிறார்கள்?

உன் தாயும் என் தாயும் எவரோ. என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையிலும் உறவினர்கள் அல்லர். நீயும் நானும் முன்பு ஒருவரை ஒருவர் பார்த்ததுகூட இல்லை. எந்த அறிமுகமும் இல்லாமல் இருந்தவர்கள் நாம். ஆனாலும் நம் அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டன. எப்படி? செம்மண் நிலத்தில் விழுந்த மழை நீர் எப்படி சிவப்பு நிறமாகிறதோ அதைப் போல, அதாவது, நிலமும் நீரும் அதனதன் தன்மை மிகாமல் கலந்து புதுத் தன்மை பெறுவது போல காதலர் இருவர் நெஞ்சமும் கலந்துவிட்டன, பிரிக்க முடியாதபடி.

இப்படி அருமையான கருத்துடைய பாடல் சங்க இலக்கியத்தின் குறுந்தொகையில் வருகிறது.

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

இதுதான் அந்தப் பாடல். காதலர்கள் மனம் கலப்பதை இதைவிட வேறு உவமை மூலம் விளக்க முடியுமா என்பது சந்தேகமே.

குறுந்தொகையின் இந்தப் பாடலை ‘இருவர்’ படத்தில் வரும் ‘நறுமுகையே நறுமுகையே’ என்ற பாடலில் அப்படியே பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து. அந்தப் பாடல் வரிகள் இதோ...

யாயும் ஞாயும் யார் ஆகியரோ

நெஞ்சு நேர்ந்தது என்ன?

யானும் நீயும் எவ்வழி அறிதும்

உறவு சேர்ந்தது என்ன?

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்

உயிர்க்கொடி பூத்ததென்ன

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்

அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன

‘இருவர்’ படத்தில் காதல் கைகூடுமா? கூடாதா என்று கவலைப்படும் காதலியின் அச்சத்தைப் போக்குவதற்காக காதலன் பாடுவதாக அமைந்த சூழலுக்கு இப்படிப் பாடல் எழுதியுள்ளார் கவிப்பேரரசு.

கடையேழு வள்ளல்களில் ஒருவனான பாரியை, பகைவர்கள் வஞ்சகத்தால் வீழ்த்தி விடுகிறார்கள். அனாதையாகிவிட்ட அவரது இரண்டு மகள்களை புலவர் கபிலர் அழைத்துச் செல்கிறார். ஒரு மாதம் கடந்த பிறகும் தந்தையை இழந்த சோகம் இரண்டு பெண்களுக்கும் தீரவில்லை. இரவு சூழ்கிறது. வானில் வெண்ணிலவு தோன்றுகிறது. அதைப் பார்த்ததும் அந்தப் பெண்களுக்கு தந்தையின் நினைவு வருகிறது. கடந்த மாதம் இதே வெண்ணிலவு நாளில் என் தந்தை இருந்தார். எமது பரம்பு மலையும் எம்மிடம் இருந்தது. இந்த மாதம் வெண்ணிலவு காலத்தில் என் தந்தை இல்லை. எமது குன்றும் பிறர் கொண்டுவிட்டார் என்று பாடுகின்றனர் பாரி மன்னனின் பெண்கள். அந்தப் பாடல்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்

வென்றெரி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே

சோகத்தை பிழியும் கையறுநிலைப் பாடலான இது புறநானூற்றில் 12வது பாடலாக இடம் பெற்றுள்ளது. இந்தச் சோகப் பாடலின் சொற்களை எடுத்து காதல் பாடலில் கையாளுகின்றார் வைரமுத்து. ஆம். இந்தப்பாடல் இடம் பெறுவதும் இருவர் படத்தின் அதே நறுமுகையே நறுமுகையே பாடலில்தான். அந்த வரிகள் இதோ..

அற்றைத் திங்கள் வெண்ணிலவில்

நெற்றித் தரள நீர் வடிய

கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா

என்று எழுதியுள்ளார் வைரமுத்து. அன்றொரு நாள் வெண்ணிலவின் ஒளியில் நீர்த்திவலைகள் முத்துப்போல் நெற்றியில் உருள, கொற்றவனுக்குச் சொந்தமான பொய்கையில் நீராடியவள் நீயா? என்று காதலியிடம் காதலன் கேட்கிறான். இதுதான் வைரமுத்து எழுதிய இருவர் படப்பாடலின் பொருள்.

- எடுத்தது வரும்.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_