Wednesday 8 July 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க... 6


கோபத்தை கொட்டும் சொற்கள்
=================================
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. ஆராயாமல், கோவலனைக் குற்றவாளி என்று முடிவு செய்து அவன் தலையை வெட்டச் செய்து மரண தண்டனை நிறைவேற்றிவிடுகிறான் பாண்டிய மன்னன். தகவல் அறிந்து, மன்னனிடம் நீதி கேட்க அரண்மனை வாயிலை அடைகிறாள் கண்ணகி. தனது வருகையை மன்னனிடம் போய்ச் சொல் என்று வாயிற்காவலனிடம் கூறுகிறாள். இதை இளங்கோவடிகள் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்....

வாயிலோயே ! வாயிலோயே !
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே.

வாயிற்காவலனே.... வாயிற்காவலனே...அறிவற்றுப் போன.... அறச் சிந்தனை கொஞ்சமும் இல்லாத.... அரசநீதி தவறிய பாண்டிய மன்னனின் வாயிற்காவலனே....இணையான சிலம்புகளுள் ஒன்றைக் கையில் ஏந்தியவளாய், கணவனை இழந்த ஒருத்தி வாயிலில் வந்து நிற்கிறாள் என்று உன் மன்னனுக்குப் போய்ச் சொல்...போய்ச் சொல்...என்கிறாள் கண்ணகி.

அநியாயமாக கணவன் கொல்லப்பட்டதால் கடும் கோபத்தில், நீதி கேட்க வருகிறாள் கண்ணகி, அவள் கோபம் கொப்பளிக்கப் பேசுவதை எப்படிச் சொல்கிறார் பாருங்கள் இளங்கோவடிகள்...

அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே

என்று சொல்கிறார்.

இந்த இரண்டு வரிகளில் 6 முறை வல்லின ”ற” பயன்படுத்துகிறார். வல்லின எழுத்தை போடுவதன் மூலமே கண்ணகியின் கோபத்தைக் காட்டுகிறார்.
இந்த இரண்டு வரிகளைப் படிக்கும்போது கோபத்தில் நறநற என்று பல்லைக் கடிப்பது போல இருக்கும். நீங்களும் படித்துப் பாருங்கள். இருக்கிறதா? சோகத்தையும் கோபத்தையும் கூட ரசிக்கும்படி சொல்வதுதான் மொழியின் சிறப்பு.

2 comments:

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_