Thursday 30 July 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க..7


முத்தொள்ளாயிரம் காட்டும் “அட்டோமெடிக் பூட்டு”
=============================================
சில வீடுகளில், பெரும்பாலும் ஓட்டல் அறைகளில் ஆட்டோமெடிக் பூட்டு இருப்பதை கவனித்திருப்பீர்கள். அறையின் உட்புறம் கதவில், ஒரு குமிழ் இருக்கும் அதை திருகிதான் அறையை பூட்டவோ திறக்கவோ செய்வோம். வெளியில் போகும்போது கதவை சாத்தினால் அதுவாக பூட்டிக்கொள்ளும். அப்படி ஒரு குமிழ் பூட்டை சொல்கிறது முத்தொள்ளாயிரம். அந்தப்பாடல் இதோ.....

தாயார் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே - ஆய்மலர்
வண்டுலாங்க் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு.

எந்த மலரில் சுவையான தேன் இருக்கும் என்று மலர்களை ஆராய்கின்ற வண்டுகள் உலவும் மலர் மாலையை அணிந்தவன். வலிமை மிக்க குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடையவன். அத்தகைய அழகிய சேர மன்னன் வீதி வலம் வருகின்றான்.அவனைக் காண, வீடுகளில் இருக்கும் கன்னிப் பெண்கள் ஆசை கொள்கிறார்கள். ஆணழகனான மன்னனைத் தம் வீட்டுப் பெண்கள் பார்த்தால் காதல்கொள்வார்கள் என்று, மன்னனைத் தன் வீட்டுப் பெண் பார்க்காதவாறு, கதவைப் பூட்டி வைக்கிறாள் தாய். அந்தக் கதவில் பொருத்தப்பட்டுள்ள பூட்டு குமிழ் வடிவில் அமைந்துள்ளது. குமிழைத் திருகிப் பூட்டுகிறாள் தாய். அவள் அந்தப்பக்கம் போனதும், பூட்டைத்திறந்து, கதவைத் திறந்து மன்னனைப் பார்க்கிறாள் மகள். தாய் வந்து, மீண்டும் பூட்டுகிறாள். மகள் மீண்டும் கதவைத் திறக்கிறாள். இப்படித் திறந்து...மூடி.....திறந்துமூடியே....தாழ்ப்பாள் குமிழ் தேய்ந்துவிடுகிறது.

இப்படி சொல்கிறது முத்தொள்ளாயிரம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குமிழ் வடிவ பூட்டு இருந்திருக்கிறது தமிழகத்தில்

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_