Saturday 4 July 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க 2

கம்ப இராமாயணத்தில் ஒரு பாடல்
================================

வெய்யோனொளி தன்மேனியில் விரிசோதியின் மறைய
பொய்யோயெனும் இடையாளுடன் இளையானுடன் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோஇவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.


விளக்கம்
==========
இராமன் வனவாசத்தில் இருந்தபோது,சீதையுடனும் லட்சுமணனுடனும் காட்டு வழியில் சென்றதை கம்பர் வர்ணிக்கிறார். எப்படி?

சூரிய ஒளி இராமனின் மேனியில் பட, சூரியனே மறைந்து போகிறான். அந்த அளவுக்கு கரிய மேனியை உடையவன் ராமன். அப்படிப்பட்டவன், தனது இளையவனான லட்சுமணனுடனும் மனைவி சீதையுடனும் போகிறான். சீதையோ மெல்லிடையாள். அந்த இடை எவ்வளவு மெல்லியது என்று சொல்ல வருகிறார் கம்பர்.

சிற்றிடை, மிகச்சிற்றிடை, மிகமிகச் சிற்றிடை என்று ஏதேதோ வார்த்தைகள் போட்டுப் பார்க்கிறார் ஒன்றிலும் சொல்ல முடியவில்லை. இறுதியாக சொல்கிறார் “பொய்யோ எனும் இடையாள்” என்று. இடை இருக்கிறதா? இருக்கிறது என்று சொன்னால் அது பொய்யோ? என்கிறார். அந்த அளவுக்கு இருப்பதே தெரியாத சிறிய இடை.
அண்ணா ஒரு இடத்தில், பெண்ணின் இடையை வர்ணிக்கும்போது, “அவள் இடையோ கடவுளைப் பொன்றது” என்பார். இருக்கிறதா....இல்லையா என சந்தேகம் என்பதையே இப்படிச் சொல்வார் அண்ணா. சரி, கம்பருக்கு வருவோம்.

இந்தப் பாடலின் மூன்றாவது வரியில், இராமனின் நிறத்தை மீண்டும் வர்ணிக்க முயல்கிறார் கம்பர். என சொல்கிறார்?

”மையோ, மரகதமோ, மறிகடலோ மழைமுகிலோ” என்கிறார். இவன் நிறம் இருட்டா? மரகதத்தின் கரும்பச்சையோ, கடலின் கருநீலமோ கார்முகிலின் கறுப்பு நிறமோ.....அடடா எதிலுமே அடக்க முடியவில்லையே, ஐயோ...... வடிவத்தில் இவன் அழியாத அழகுடைவன்என்று சொல்கிறார் கம்பர்.

மை , மரகதம் ,மறிகடல், மழை முகில் என்று எல்லாவற்றையும் சொல்லி, எதிலுமே இராமனின் அழகை அடக்க முடியவில்லை. இராமனின் அழகைச் சொல்ல வார்த்தை கிடைக்காமல் “ஐயோ” என்று கதறுகிறான் கம்பன். சொற்களுக்குள் இராமனை ஏன் அடக்க முடியவில்லை என்றால், சொற்பதம் கடந்த பரம்பொருள் அவன். அதனால் அவன் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை. ஐயோ என்று கதறுகிறார் கம்பர்.

இந்தப் பாடலில், இன்னொரு சிறப்பு உண்டு. பாடலைப் பொறுமையாகப் படியுங்கள். மெதுவாக, நடப்பது போல இருக்கும் இதன் சந்தம். பாடல் ஏன் மெதுவாகப் பொகிறது?
முதலில் இராமன் போகிறான். கடைசியாக லட்சுமணன் போகிறான். நடுவிலே சீதை போகிறாள். போகும் வழி காட்டு வழி. மென்பஞ்சு பாதத்தாள் சீதையால் வேகமாக நடக்கமுடியாது. மெதுவாக நடக்கிறாள். அதனால், பாடலின் சந்தமும் மெதுவாகப் போகிறது

3 comments:

  1. பாடலுக்கு அருமையான விளக்கம் ஐயா...

    ReplyDelete
  2. ithai padikkum pothu pokkiri padathin dole dole paadal gnabagam varugirathu.. athil oru vari 'pen idaiyum iraivanum ondru than, rendum irunthum therivathe illai' endru varum

    ReplyDelete

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_