Monday 6 July 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க 3




”முத்தொள்ளாயிரம்” நூலில் இருந்து ஒரு பாடல்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
முத்தொள்ளாயிரம் என்பது சேர சோழ பாண்டியர் ஒவ்வொருவர் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் எழுதப்பெற்ற ஒரு நூல். பல ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பெற்ற புறத்திரட்டு என்னும் தொகுப்பில் இந்நூல் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 2,700 பாடல்கள் எழுதப் பெற்றன எனினும் கிடைத்திருப்பது 109 பாட்ல்கள்தான். இவற்றில் கடவுள் வாழ்த்து 1, சேரன் பற்றியது 21, சோழன் 30, பாண்டியன் 57. மற்ற பாடல்கள் கிடைக்கவில்லை.
அகம், புறம் ஆகிய இரண்டு பொருளிலும் பாடல்கள் உள்ளன. அற்புதமான கற்பனை வளம் கொண்டவை இந்தப் பாடல்கள். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கிடைக்காமல் போனது நமக்குப் பேரிழப்பு. இந்தப் பாடல்களைப் படிக்கும்போது, இவ்வளவு அற்புதமாக இருக்கிறதே, கிடைக்காமல் போன பாடல்கள் இன்னும் எப்படியெல்லாம் இருக்குமோ என மனம் வருந்தும். அத்தகைய முத்தொள்ளாயிரம் நூலில் இருந்து ஒரு பாடல்:

அள்ளல் பழனத் தரக்காம்பல் வாய்அவிழ
வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப்- புள்ளினம்தம்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு.


வேல் படையை உடைய சேர மன்னனின் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அங்கே எந்த ஒரு சண்டை சச்சரவுக்கோ சத்தத்துக்கோ இடமில்லாமல் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். அந்த நாட்டில் சத்தம் ஒன்று உண்டு என்றால் அது ஒன்றே ஒன்றுதான். அது என்ன சத்தம் தெரியுமா?
காலை நேரம். பொய்கையில் அன்னப் பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் நீந்திக்கொண்டிருக்கின்றன. அப்போது சிவந்த ஆம்பல் மலர்கள் மலர்கின்றன. இதைக்கண்ட அன்னப் பறவைகள், தண்ணீரில் தீப்பிடித்துக்கொண்டதாக எண்ணி, தங்கள் குஞ்சுகளை அவசரம் அவசரமாக அழைத்து, தங்கள் இறக்கைகளுக்குள் மூடிக்கொள்ளும்.
இப்படி, அன்னப்பறவைகள் தங்கள் குஞ்சுகளை அழைக்கின்ற சத்தமும், அவற்றை தங்கள் இறக்கைகளுக்குள் மூடிக்கொள்வதால் ஏற்படும் சத்தமும் தவிர வேறு எந்தசத்தமும் சேரன் நாட்டில் இல்லை.

அமைதியான நாடு என்று சொல்ல, எப்படியெல்லாம் கற்பனை செய்து அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_