Wednesday 11 February 2015

குறும்பு-18



செய்யுளில் வரும் உவமையை ‘ஒருபுடை உவமை’ ’பலபுடை உவமை’ என இரண்டு வகையாக சொல்வார்கள். அதாவது ஒரு காரணத்தை வைத்து உவமையாக சொல்வது ஒருபுடை உவமை. ஒன்றுக்கும் மேற்பட்ட காரணத்துக்காக உவமையாக சொல்வது பலபுடைஉவமை.
அந்த, வாழ்த்தும் பேராசிரியர் ஒரு நாள், ‘ப்லபுடை உவமைக்கு ஒரு உதாரணம் சொல்’ என்றார்.
‘கொவ்வை இதழ்’ என்றேன்.
’பலபுடை உவமையா இது? எப்படி சொல்லு...” என்றார்.
’பெண்களின் இதழ் வடிவத்தில் கோவைப் பழம் போல இருக்கும். நிறமும் கோவைப் பழம் போல சிவப்பாக இருக்கும்’ என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘சரி உட்கார்’ என்றார் பேராசிரியர்.
’இன்னும் இருக்குங்க ஐயா’ என்றேன்.
‘இன்னும் என்ன இருக்கு?’ என்று கேட்டார்.
‘இனிப்பாக இருக்கும்’ என்றேன்.
‘இனிப்பா இருக்குமா? உனக்கு தெரியுமா?’ என்று கேட்டார்.
’எனக்குத் தெரியாதுங்க ஐயா. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்’ என்றேன்.
‘டெஸ்ட் பண்ணி பார்க்கிறேன்னு எங்கியாவது போய் அடி வாங்கிகிட்டு வராதே’ என்றார்.

’’பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்

என்று வள்ளுவரே சொல்லியிருக்காரே ஐயா” என்றேன். அவரால் ஒன்றும் சொல்ல்ல முடியவில்லை. ஆனாலும் கோபத்தைக் காட்ட வேண்டும். அதனால். ‘ இது மாதிரியான குறளை மட்டும் நல்லா நினைவு வச்சுக்கோ’ என்றார்.

‘முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்

(நல்லவர் போல முகத்தில் சிரிப்பு காட்டி, மனத்தில் தீயவராக இருக்கும் வஞ்சகரைக் கண்டு அஞ்சுதல் வேண்டும்)’’ என்ற குறளும் நினைவில் இருக்குங்க ஐயா” என்றென். அத்துடன் வகுப்பு கேன்சல்.


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_