Tuesday 9 December 2014

நான் எழுதிய ‘நனவோடை நினைவுகள்’ நூலில் இருந்து.


தூரத்தில் இருந்து பார்க்கும்போது உயரமாகத் தெரியும் பலர், அருகில் செல்லும்போது உயரம் குறைந்துவிடுவார்கள். அருகில் சென்று பழகியபோது ஒருவரின் உயரம் என் மனதில் அதிகரித்தது என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். அதற்குக் காரணம், கஷ்டப்படும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே அவருக்கு இருந்தது. அவரோடு பழகியபோது இதை என்னால் உணர முடிந்தது.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒருநாள் மாலை 7.30 மணிக்கு பத்திரிகையாளர்களை ராமாவரம் தோட்டத்தில் சந்திக்கிறார் என திடீரென்று அழைப்பு வந்தது. அவசரம் அவசரமாக் போனோம். ஹாலில் சோஃபாவில் எங்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் எம்ஜிஆர். 8 மணி ஆனது. ’எல்லா பத்திரிகையில் இருந்தும் நிருபர்கள் வந்தாச்சு. பேட்டியை ஆரம்பிக்கலாமே’ என்றோம்.

எம்ஜிஆர் உடனே ’பேட்டியெல்லாம் ஒண்ணுமில்லை. வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” என்றார்.

’பேட்டி இல்லையா?’ என்று கேட்டோம்.

‘செய்தி சொல்ல அழைக்கவில்லை. சும்மா சாப்பிடத்தான் உங்களையெல்லாம் அழைத்தேன்’ என்றார் எம்ஜிஆர்.

ஆங்கிலப்பத்திரிகை நிருபர் ஒருவர் கொஞ்சம் கோபமாக, ‘சாப்பிடுறதுக்கா வந்தோம்?’ என்று கேட்டார்.

எம்ஜிஆர் உடனே அருகில் சென்று, அவர் தோளில் கை போட்டு, ‘ஒரு நாள் உங்களோடு சாப்பிடணும்ன்னு ஆசைப்பட்டு வரச் சொன்னேன். தப்பா? வாங்க..உங்களுக்கு தனி டேபிளில் வெஜிடெரியன் ஏற்பாடு பண்ணியிருக்கேன்” எனறார். அவ்வளவுதான். நிருபர் கூல் ஆகிவிட்டார்.

பெரிய டைனிங் டேபிள். சிக்கன், மட்டன், மீன் என ஒவ்வொன்றிலும் பல ஐட்டங்கள். 20 பேர் உட்கார்ந்து சாப்பிட்டோம். எம்ஜிஆரும் சாப்பிட்டுக் கொண்டே, யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று கவனித்து ’அவருக்கு சிக்கன் வை, இவருக்கு மீன் வை’ என்று சொல்லி உபசரித்தார். வியப்பாக இருந்தது. என்னா ஷார்ப். அவருடைய வெற்றியின் ரகசியம் புரிந்தது.

---நான் எழுதிய ‘நனவோடை நினைவுகள்’ நூலில் இருந்து.


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_