Sunday 28 December 2014

களவு நெறி....கற்பு நெறி


நான் எழுதியுள்ள குறள் கவிதை படித்துவிட்டு, நண்பர் ஒருவர் ஒரு சந்தேகம் எழுப்பியுள்ளார். இதே சந்தேகம் பலருக்கு எழலாம் என்பதால் கீழே உள்ள விளக்கத்தைத் தருகிறேன்.

பழங்காலத்தில் களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என இரண்டு இருந்தது. முதலில் களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டு, பின்னர்தான் கற்பு வாழ்க்கைக்கு வந்தனர். இன்னும் சொல்லப் போனால், திருமணம் என்ற ஒன்றே இல்லாமல் இருந்தது. களவு வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் பின்னர் ஊரறிய கற்பு வாழ்க்கையில் ஈடுபட்டனர்
களவு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு ஏமாற்றுபவர்கள் வந்த பிறகுதான், திருமணம் என்ற சடங்கு தோன்றியது. இதைத்தான்

பொய்யும் வழுவும் தோன்றிய காலை
ஐயர் யாத்தனர் கரணம்

என்று தொல்காப்பியர் சொல்கிறார். பொய் சொல்வதும், ஏமாற்றுகின்ற தவறும் தோன்றிய பிறகே திருமணம் என்ற ஒன்றை கொண்டு வந்தனர் என்கிறார் தொல்காப்பியர். இங்கே ஐயர் என்று அவர் குறிப்பிடுவது பிராமணரை அல்ல. ஐயர் என்பது தலைவர் என்று பொருள் படும். கரணம் என்றால் திருமணம். ஊர் பெரியவர் அல்லது தலைவர் முன்னிலையில் திருமணம் நடத்தினர்.

நம் பண்பாடும் கால மாற்றத்துக்கு ஏற்ப மாறி வந்துள்ளது. கால மாற்றம் காரணமாக, இப்போது சிலர் மணம் செய்துகொள்ளாமலே, Living together என்று வாழ்கிறார்கள். அது தவறில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். பழங்காலத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோமா?


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_