Tuesday, 23 December 2014

விதைத்தவனே விருட்சமானான்


எழுத்தராய் வாழ்வு தொடங்கி
எவரும்
எழமுடியா உயரத்துக்கு
எழுந்தவன் நீ.

கதாநாயகர்கள் கோலோச்சிய
கற்பனை உலகில்
கதையை நாயகனாக்கி
கதநாயகிகளை
செதுக்கிய சிற்பி நீ.

முயன்றாலும் முடியாத
முடிச்சுகளைப் போடவும்
போட்டதை அவிழ்க்கவும்
முடிந்தது உன்னால் மட்டுமே..

கற்பனையிலும் எண்ண இயலா
கருக்களை
கதையாக்கினாய்....
திரையுலகு செழிக்க
விதையாக்கினாய்....

விதைதான் விருட்சமாகும்
இங்கே வினோதம்..
விதைத்த நீயே
விருட்சமானாய்...

ஆகாயத்துக்கு அப்பாலும்
சென்று சிந்தித்த
சிற்பியே.....

அங்கே உன்னை
அழைத்தது யார்?
எமக்குச் சொந்தமான உன்னை
எவன் கொள்ளை கொண்டான்...

ஆனாலும்
அனுப்பி வைக்கிறோம்
ஏன் தெரியுமா?
இவ்வுலகோடு மட்டும்
இருக்க வேண்டியவன் அல்ல நீ.

அவ்வுலகிலும் ஆளுமை செய்
ரம்பை, ஊர்வசியையும் இயக்கு
மேனகையும் உன்னால்
மேன்மையடையட்டும்.

கலை என்ற ஈரெழுத்து..
திரை எனற் ஈரெழுத்து...
இருக்கும் வரை
இருக்கும் இந்த ஈரெழுத்தும்

“கே. பி,”


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_