Monday 1 December 2014

ஊமை மனம் அழுகிறது.

நிறையன்றி வேறில்லை -3

கல்வி...அதுவும்
கல்லூரிக் கல்வி...
மனதுக்கு மகிழ்ச்சியாய்...
இதயம் கவர்ந்ததாய்...
இருக்க வேண்டும்...
இதுதான் எனக்கு மகிழ்ச்சி யென்று
மனம் சொல்லியது...
மனத்துக்குப் பிடித்ததை படித்தேன்.

பிடித்ததைப் படித்தது
பிடிக்கவில்லை பலருக்கு...
கல்வியை காசாக்க வேண்டும் என்று
கங்கணம் கட்டும்போது...
விருப்பத்துக்கு அங்கே
வேலையன்றிப் போனது...

விலை கிடைக்க கூடியதே
வித்தகக் கல்வி என்று கருதியதால்
விரும்பிய கல்வி யை
வீண் என்று இகழ்ந்தனர்...
காசுக்கு ஆகாத கல்வி...
வாழ்வை உயர்த்தாது என்று
வசை பாடித் தீர்த்தனர்.

கற்காமல் இருந்திருந்தால் கூட
கவுரவம் கிடைத்திருக்கும்...
காசுக்காகத கல்வி என்ற
கணிப்பு அவர்களுக்கு இருந்ததால்
கவுரவம் எனக்கு மறுக்கப்பட்டது...

இதைப் படிக்கிறான்
இவன் என்று சொல்வதைக் கூட
இழிவாகக் கருதினர்...

இறைவா...!
இழிசொல் கேட்டு
இடிந்து போகாத மனம் கொடுத்தாய்...
அழிந்து போகாமல் இருக்க
ஆக்கம் கொடுத்தாய்...

அழுத்தம் தாங்கும்
கரிதான் வைரமாகும் என்பதை என்
அகத்தினுள் விதைத்தாய்...
விதைத்தது இன்று
வீண் போகவில்லை.
விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது...

வலி கொடுத்த தாக்கம்
வளர்ச்சிக்கு வித்திட்டது...
வளர்ந்தேன்....
ஆலமரமாய் அல்ல...
அருகம்புல்லாய்தான்....
அருகம் புல்லானாலும்
ஆண்டவனே உன் தோள்களில்...

ஆலமரத்தினும்
அருகம்புல்லாய் இருப்பதிலேயே
அகம் மகிழ்கின்றேன்...
ஆலமரத்தின் அடியில் எதுவுமே வளராது...
ஆதலால்....
ஆலமரத்தினும்
அருகம்புல்லாய் இருப்பதையே
அகம் விரும்புகிறது...

ஆண்டவனே உன்னால்
ஆசிர்வதிக்கப் பெற்றேன்.

கற்றது இன்று
கை கொடுக்கிறது...
காலத்தால் அழியா பேர் கொடுக்கிறது..

கற்றோர் அவையில்
கவுரவம் பெற்றுத் தருகிறது...
அவை கூடி போற்றுகிறது...
அகிலம் வாழ்த்துகிறது...

ஆனாலும் இறைவா....
வலி மட்டும் ஏனோ....
வழி நெடுக தொடர்கிறது...

வாழ்த்து மழையில் நனைந்தபோதும்...
வலிகள் மட்டுமே ஏனோ
வரிசை கட்டி நின்று
வாட்டம் தருகின்றன....

மறக்கத்தான் நினைக்கிறேன்...
மறக்க நினைப்பதாலேயே
மறக்காமல் நினைவுக்கு வருகிறது...
வலியின் ஆழம் வலியது அல்லவா...
அதனால்தான்....
ஊரே புகழ்கிறது....என்
ஊமை மனம் அழுகிறது.

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_