Monday 1 December 2014

எடுத்தது எங்கே -4



சிவப்பு மல்லி படம் வெளியாகி அதில் வரும் ‘ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்’ பாடல் மிகவும் பிரலமானது. இதை எழுதியவர் வைரமுத்துதான். அதில்
நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ
என்று எழுதியிருக்கிறார்.
தமிழறிஞர் ஒருவருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, “தேன் குடிப்பதற்குத்தான் பூவில் வண்டு அமர்கிறது. இதனால் மகரந்தச் சேர்க்கையும் நடக்கிறது. இதைப் போய் தலை துவட்டுவதாக எழுதியிருக்கிறாரே. அவ்வளவு பொருத்தமாக இல்லையே” என்று சொன்னார். அவர் சொன்னது சரிதான். ஆனாலும், “திரைப்பாடல்தானே... ஏதோ புதுமையாக சிந்திப்பதாக எழுதியிருக்கிறார்” என்றேன். “மரபு மாற்றப்படுகிறதே” என்றார் அவர். “வைரமுத்து எழுதியிருப்பது ஒன்றும் இலக்கியம் இல்லையே” என்றேன்.
“விரிக்காத தோகை மயில் வண்டு வந்து
மடக்காத வெள்ளை மலர் நிலவு கண்டு
சிரிக்காத அல்லிமுகம் பாரில் யாரும்
ரசிக்காத இளமை நயம் பருவஞானம்”
கண்ணதாசன் எழுதிய மாங்கனி குறுங்காவியத்தில் வரும் வரிகள் இவை. கன்னிப் பெண் ஒருத்தியை இப்படி வர்ணிக்கிறார் கவியரசர்.

டிக் டிக் டிக் படத்தில் வரும் ‘இது ஒரு நிலாக்காலம்’ பாடலில்
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே
யாரும் வந்து நடக்காத சாலை நீயே
என்று எழுகிறார் வைரமுத்து.
வண்டு வந்து மடக்காத வெள்ளை மலர்
என்று கண்ணதாசன் எழுதியதுதான்
வண்டு வந்த உடைக்காத பூவும் நீயே
என்று வைரமுத்து பாடலில் வந்துள்ளது.


‘சிவந்த மண்’ படத்தில் வரும் ‘பார்வை யுவராணிக் கண்ணோவியம்’ எ ன்ற பாடலில்
பாலென்று சொன்னாலும்
பழமென்று சொன்னாலும்
ஏனென்று தேன் வாடுமே
என்று எழுதுவார் கண்ணதாசன். அவளை பால் என்றும் பழம் என்றும் வர்ணித்தால், என்னை ஏன் விட்டுவிட்டாய் என்று கேட்டு தேன் வருத்தப்படும் என்கிறார் கவியரசர்.
இதுதான் அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் ‘விழியில் விழுந்து உயிரில் கலந்து’ என்ற பாடலில் உருமாற்றம் பெற்றுள்ளது.


நீ
மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டால்
ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்
என்று எழுகிறார் வைரமுத்து.
அவள் மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டால், தன்னை சூடிக்கொள்ளவில்லையே என்று ரோஜாவுக்கு காய்ச்சல் வரும் என்கிறார் வைரமுத்து. ‘பால், பழம், தேன்’ என்று கவியரசர் சொன்னதையே ‘மல்லிகை, ரோஜா’ என்று மாற்றிப் போடுகிறார் கவிப்பேரரசர்
(எடுத்தது வரும்)

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_