Thursday 18 December 2014

குறும்பு-7



மாநிலக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பலகலைக்கழகத்தில் மட்டுமே எம்.பில். வகுப்பு நடத்தப்பட்டது. முதல் முறையாக கல்லூரிகளிலும் எம்.பில். வகுப்பு தொடங்க அரசு அனுமதி அளித்தது. மாநிலக்கல்லூரியில். தமிழ்த்துறைத் தலைவருக்கும் கல்லூரி முதல்வருக்கும் அட்டமத்தில் சனி. ஆகவே ஆகாது. அதனால், எம்.பில். வகுப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார் முதல்வர். பிறகு நான் போராட்டம் நடத்தி, கோட்டைக்கு மாணவர்களுடன் ஊர்வலம் போய், அப்போது முதல்வராக இருந்த திரு எம்ஜிஆர் அவர்களை சந்தித்து மனு கொடுத்தேன். எங்கள் கோரிக்கையை ஏற்று அன்றே ஆர்டர் போடச் சொன்னர் எம்ஜிஆர். மாலையே ஆர்டர் வந்துவிட்டது.
அதன் பிறகு ஒரு நாள், முதுகலை முதலாம் ஆண்டு வகுப்பில் அமர்ந்து மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு மாணவி, அடுத்த ஆண்டு இங்கேதானே எம்.பில். சேருவிங்க? என்று கேட்டார்.
இல்லை. சென்னைப் ப்லகலைக்கழ தமிழ்த்துறையில் போய் சேரப் போகிறேன் என்றேன். நீங்கதானே போராட்டம் நடத்தி, எம்.பில். வகுப்பு கொண்டுவந்திங்க. நீங்களே இங்க சேரமாட்டிங்களா? ஏன்? என்று கேட்டர் அந்த தோழி.
‘எல்லா இடத்திலும் இருக்கும் ஆசிரியர்களை அறிவாளி ஆக்கணும். அதனால் அடுத்த ஆண்டு பலகலைக்கழகத்தில் சேரப் போறேன்’ என்றேன்.
‘ஆசிரியர்களை நீங்க அறிவாளி ஆக்கப் போறிங்களா? என்ன சொல்றிங்க?’ என்று கேட்டார் தோழி.
“ஆமாம். வகுப்புல நாம் கேள்வி கேட்டாதான், சந்தேகம் கேட்போமேன்னு ஆசிரியர்கள் புது நூல்களையும் படிச்சுட்டு வருவாங்க. இல்லன்னா அரைச்ச மாவையே அரைப்பாங்க. நான் நிறைய கேள்வி கேட்பேன். அதனால ஆசிரியர்கள் படிச்சு அறிவாளி ஆவாங்கன்னு’ சொன்னேன்.
விருத்தாசலம் கல்லுரியில பி.ஏ. படிசேன். அங்க ஆசிரியர்களை அறிவாளி ஆக்க்கிட்டு இங்க மாநிலக் கல்லூரிக்கு வந்தேன். அடுத்ததா பல்கலைக்கழகம் போறேன்” என்றேன்.
‘இங்க இருக்கிறவங்களை அறிவாளி ஆக்கிட்டிங்களா? ” என்று கேட்டார் ஒரு தோழி.
‘முயற்சி பண்ணினேன். முடியல. வேற இடம் போறேன்” என்றேன்.

மரத்தடுப்பு போட்டு, அருகிலேயேதான் ஆசிரியர்கள் அறை. நான் சொன்னது ஆசிரியர்கள் காதில் விழுந்துவிட்டது.
நான் சொன்னது பற்றி அவர்களுக்குள் விவாதம்.
”அவன் சொன்னதில் நியயம் இருக்கு. என்ன பண்ணினாலும் படிச்சுடுறானே. முயற்சி பண்ணினேன் முடியல என்பதுதான் கொஞ்சம் அதிகம். ஆனாலும் மாணவக் குறுப்பு இதெல்லாம். ரசிச்சுட்டு போய்டணும். கோபப்படகூடாது” என்றார் ஒரு பேராசிரியர்.
இன்னொரு பேராசிரியருக்கு மகாகோபம். என்னிடம் எதுவும் கேட்கவில்லை. கோபத்தை காட்ட வேண்டிய இடத்தில் காட்டிவிட்டார். ஒரு வழியாக மீண்டு வந்தேன்.


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_