Thursday 18 December 2014

குறும்பு -6

பொருட்பாலில் கல்லாமை அதிகாரம் எழுதலாமென்று எடுத்துப் படித்தேன் இன்று. அதில் இரண்டாவது குறள்....

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்கா முற்றற்று. (402)

இப்படி ஒரு குறள் இருக்கு. என்ன செய்ய?

இதைப்படித்தபோது கல்லூரிக்காலம் நினைவுக்கு வந்தது.

விருத்தாசலம் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள், ஏராளமான மாணவர்கள் வந்து திருக்குறள் புத்தகம் கொடுங்க பார்த்துட்டு தரேன்னு கேட்டாங்க. எனக்கு ஆச்சரியம். என்ன திடீர்ன்னு எல்லாருக்கும் திருக்குறள் மீது ஆர்வம் வந்துடுச்சேன்னு. விசாரித்தேன்.

யாரோ ஒரு மாணவர், மேற்சொன்ன குறளைப் படித்திருப்பார் போலிருக்கு. காலையிலேயே கல்லூரிக்கு வந்து, எல்லா வகுப்பறைகளுக்கும் போய் ”402 வது குறள் படிக்கவும்” என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளார். அதைப் படித்துவிட்டுதான், 402 வது குறள் என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் பலரும் வந்து திருக்குறள் புத்தகம் கேட்டிருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டேன்.
இதில் இன்னொரு தகவலும் உண்டு.

உவமையணிக்கு ஒரு உதாரணம் சொல் என்று ஆசிரியர் கேட்டார்.. என் அருகில் இருந்த மாணவர் உடனே எழுந்து 402 வது குறளைச் சொல்லத் தொடங்கியதுமே, பதறிப்போன ஆசிரியர், போதும் போதும் என்றார்.

ஆசிரியர் ஏன் பதறினார் தெரியுங்களா? நான் படித்தது, ஆண் பெண் இருபாலரும் படிக்கும் கல்லூரி.

வகுப்பில் இந்தக்குறளைச் சொன்ன மாணவர்தான் எல்லா வகுப்பு போர்டிலும் 402 வது குறள் படிக்கவும் என்று எழுதினார் என்பது பின்னர் தெரிய வந்தது.


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_