Thursday 11 December 2014

எடுத்தது எங்கே -9



அவரைக்குப் பூவழகு

அவ்வைக்கு கூனழகு

என்று ஒரு பழயை தனிப்பாடல் உண்டு. இதை வைத்து, எதெல்லாம் எதற்கு அழகு என்று சிந்தித்தார் வைரமுத்து. அதில் பிறந்ததுதான் ‘புதிய முகம்’ படத்தில் வரும்

கண்ணுக்கு மையழகு

கவிதைக்குப் பொய்யழகு

என்ற பாடல். அவரைக்குப் பூவழகு என்ற தனிப்பாலின் நீட்சிதான் புதிய முகம் பாடல்.

இதே போல, திருடா திருடா படத்துக்கு

‘கண்ணும் கண்ணும்

கொள்ளையடித்தால்

காதல் என்று அர்த்தம்

என்று முதல்வரியை எழுதிய வைரமுத்து, அடுத்து எது எதுக்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்தார்.

பூவை வண்டு கொள்ளையடித்தால்

புதையல் என்று அர்த்தம்

புதையல் என்னை கொள்ளையடித்தால்

மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்

என்ற அழகிய பாடல் வரிகள் பிறந்தன. ஆனால், இந்தப் பாடலில் ஒரு வரியில் சிக்கிக்கொண்டார் வைரமுத்து. அதாவது,

அழகு பெண்ணின்

தாயார் என்றால்

அத்தை என்றே

அர்த்தம் அர்த்தம்

என்று எழுதி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அழகான பெண்ணையெல்லாம் மணந்துகொள்வதற்கான முறைப் பெண்ணாக பார்க்கும் பார்வைதான் இந்த வரிகள். மனைவியைத் தரவிர மற்ற பெண்களை தாயாக, தங்கையாக, தமக்கையாக கருத வேண்டும் என்று போதிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு கவிஞனுக்கு உண்டு. அதுதான் இந்தியப் பண்பாடு.

வானும் மண்ணும் ஹேண்ட் ஷேக் பண்ணுது

உ<ன்னால் ஈஸ்வரா...

என்ற பாடலில்

‘பிரியமா பெண்ணை ரசிக்கலாம்’

என்று ஒரு வரி வரும். தமிழ் தெரியாத உதித் நாராயணன் இந்தப் பாடலைப் பாடும்போது, பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’ என்று பாடினார். நல்ல வேளை ரெக்கார்டிங் நடந்த போது அருகில் இருந்த வைரமுத்து, உடனடியாக தலையிட்டு அதை திருத்தினார். இது பற்றி குறிப்பிட்ட வைரமுத்து,

‘பிரியமா பெண்ணை ரசிக்கலாம்’ என்பதை ‘பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’ என்று பாடினார். நான் அருகில் இருந்ததால் பாடல் தப்பியது. பாட்டு கெட்டாலும் பரவாயில்லை; பண்பாடு கெடலாமா?’ என்று சொன்னார்.

இப்படி பண்பாடு பற்றி பேசிய வைரமுத்துதான், ‘அழகு பெண்ணின் தாயார் என்றால் அத்தை என்றே அர்த்தம்’ என்று எழுதினார். அவரை விமர்சித்தவர்கள், தங்கை அழகாக இருந்தால் அம்மாவை அத்தை என்று அழைக்க முடியுமா? என்று கேட்டனர்.

இந்தப் பாடலில்

இரவின் மீது வெள்ளையடித்தால்

விடியல் என்றே அர்த்தம்

என்று ஒரு வரி வரும்.

குடும்ப விளக்கு காவியத்தில்

தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த

கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது

புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்

மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்

என்று வரும் வரிகளில் விடியலை வர்ணிக்கிறார் பாவேந்தர். எப்படி?

ஒரு தொட்டி நிறைய நீலம் கரைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதில் சுண்ணாம்பை கலந்தால் எப்படி இருக்கும்? அத போல, விடியலில் இருள் தன் கட்டுக் குலைந்தது என்று சொல்கிறார்.

தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த

கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது

என்ற வரிகள்தான்

இரவின் மீது வெள்ளையடித்தால்

விடியல் என்றே அர்த்தம்

என்று உருமாற்றம் பெற்றுள்ளது.

முதலாளி படத்தில்

ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நான் ஒரு தொழிலாளி

என்ற பாடல்தான் ரஜினி நடித்த முத்து படத்தில்

ஒருவன் ஒருவன் முதலாளி

உலகில் மற்றவன் தொழிலாளி

என்று உருமாற்றம் பெற்றுள்ளது. இதை எழுதியவரும் வைரமுத்துதான்.

(எடுத்தது வரும்)

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_