Thursday 11 December 2014

எடுத்தது எங்கே -8





முதல்வன் படப் பாடலான ‘உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு’ பாட்டில் வரும்

‘முத்தமிட்டு நெத்தியில

மார்புக்கு மத்தியில

செத்துவிட தோணுதடி எனக்கு’

என்ற வரிகளைச் சொல்லிதான் வியந்துபோனார் நண்பர்.

இதைக் கேட்டதும் நான் சொன்னேன்...

நாகூர் அனீபா பாடிய ‘மதினா நகருக்கு போக வேண்டும்’ என்ற பாடலில்,

நேருக்கு நேர் நின்று

நெஞ்சத்தில் முகம் வைத்து

ஆரத் தழுவி என் ஆவி பிரிய வேண்டும்

என்று வரும் எனச் சொன்னேன். அதற்கு மேல் நான் எதுவும் விளக்கக்கூட வில்லை. ‘ அப்படியா? என்னமோ நினைச்சு வியந்தேன்...பொசுக்குன்னு ஆக்கிட்டிங்களே’ என்றார் நண்பர்.

மனிதன் திரைப்படத்தில் இடம் பெற்ற

வானத்தைப் பார்த்தேன்;

பூமியைப் பார்த்தேன்;

மனுஷனை இன்னும் பார்க்கலையே

பாடலில்,

குரங்கினில் இருந்து பிறந்தானா?

குரங்கை மனிதன் பெற்றானா?

இரண்டு பேரும் இல்லையே!

அது ரொம்ப தொல்லையே!

என்று வரும். இதைக் கேட்டவுடன் பாவேந்தர்தான் என் நினைவுக்கு வந்தார்.

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்கிறது டார்வின் தத்துவம். சிலரைப் பார்த்து ‘ அவனா? அவன் கிடக்கிறான் குரங்குப் பயல்’ என்று சிலர் திட்டுவதைப் பார்க்கிறோம். குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்று பொருளில்தான் இப்படி திட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, குரங்கின் குணம் அவனிடம் இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனாலும் குரங்கில் இருந்து மனிதன் வந்தானாஉ மனிதனில் இருந்து குரங்கு பிறந்ததா என்ற ஒரு விவாதமும் ஏனோ இருந்துகொண்டுள்ளது.

இதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன் ஒரு கவிதையில்

குரங்கினின்று மனிதன் வந்தானா?

மனிதனிலிருந்து குரங்கு வந்ததா?

வையகத்தை வைதிலேன்

ஐயப்பட்டேன், ஆய்க அறிஞரே! என்று எழுதியுள்ளார். இந்தக் கவிதையில் வரும் அதே வரிகளும் அதே கருத்தும்தான் வைரமுத்து எழுதியுள்ள மனிதன் படப்பாடலில் அப்படியேயும் கொஞ்சம் உருமாற்றம் பெற்றும் இடம் பெற்றுள்ளது.

எடுத்தது வரும் ...

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_