Thursday 11 December 2014

எடுத்தது எங்கே-10



இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சி முதன் முதலாக ஆட்சியைப் பிடித்தது தமிழகத்தில்தான். அது, 1967ல் அண்ணாதுரை தலைமையில் அமைந்த திமுக ஆட்சி. அந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காமராஜரை தோற்கடித்தவர் திமுக வேட்பாளர் மாணவர் தலைவர் பெ. சீனிவாசன். 1983ல் அமைச்சர் காளிமுத்துவை கோட்டையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது பெ. சீனிவாசனும் அங்கு இருந்தார். திரைப்பாடல்கள் பற்றி பேச்சு வந்தது. “பயணங்கள் முடிவதில்லை படத்தின் ‘சாலையோரம் சோலை ஒன்று வாடும்’ பாடலில்

கண்ணாளனைப் பார்த்து

கண்ணோரங்கள் வேர்த்து

எழுதியிருக்கிறாரே வைரமுத்து. அது என்ன கண்ணோரங்கள் வேர்த்து, நெற்றி வியர்க்கும். கண்ணோரம் வியர்த்ததாக கேள்விப்பட்டதில்லையே” என்று விமர்சனம் செய்தார் பெ. சீனிவாசன். இப்படி வைரமுத்துவின் பாடல்கள் பற்றி பல தரப்பில் இருந்தும் அவ்வப்போது விமர்சனம் வருவதுண்டு.

மண் வாசனை படத்தில் ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ பாடலில்,

பெண்: ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்

வெட்க நிறம்போக மஞ்சக் குளிச்சேன்

ஆண்: கொஞ்சம் மறைஞ்சு பார்க்கவா?

இல்ல முதுகு தேய்க்கவா?

பெண்: அது கூடாது

இது தாங்காது

ஆண்: சின்னக் காம்புதானே

பூவத் தாங்குது

என்று வரும். அவள் குளிப்பதை மறைந்திருந்து பார்க்கவா? அல்லது அருகில் வந்து உனக்கு முதுகு தேய்த்துவிடவா? என்று கேட்கிறான் அவன். இன்னும் திருமணம் ஆகவில்லை. ‘நீ முதுகு தேய்த்தால்; உன் கைபட்டால், அதனால் ஏற்படும் காம வேட்கையை என்னால் தாங்க முடியாது’ என்கிறாள் அவள்.

அதற்கு அவன் சொல்கிறான். ‘பூவை சின்னக் காம்பு தாங்கவில்லையா? அதுபோல, காமம் பெரிதானாலும் அதை உன்னால் தாங்க முடியுமே’ என்கிறான். இதான் இந்தப் பாடல் உணர்த்தும் பொருள்.

சங்க இலக்கியமான குறுந்தொகையில் ஒரு பாடல் வரும்.

வேரல்வேலி வேர்க்கோட் பலாவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!

யார் அஃது அறிந்திசினாரே! சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் துõங்கியாங்கு, இவள்

உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே

என்பது அந்தப் பாடல்.

இதில்,

சிறுகோட்டுப் பெரும்பழம் துõங்கியாங்கு, இவள்

உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே

என்ற வரிகளுக்கு, ‘சிறிய காம்பிலே பெரிய பலாப்பழம் தொங்கிக்கொண்டிருப்பது போல, தலைவியின் உயிர் மிகச் சிறிது; அவளின் காமமோ மிகப் பெரிது. அதாவது, பெரிய பலாப்பழத்தை சிறு காம்பு தாங்குவது போல பெரும் காமத்தை சிறிய இவள் உயிர் தாங்கிக்கொண்டுள்ளது’ என்பது இதற்கு பொருள்.

இதுதான். பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில்

பெண்: அது கூடாது

இது தாங்காது

ஆண்: சின்னக் காம்புதானே

பூவத் தாங்குது

என்று வருகிறது. அங்கே பலாப்பழம்; இங்கே பூ; அவ்வளவுதான்.

சங்கர் இயக்கத்தில் வெளியான படம் ஜீன்ஸ். பெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. வைரமுத்து எழுதிய பாடல்கள்தான். இந்தப் பாடல்கள் வைரமுத்துவுக்கு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தன. இந்தப் பாடல்கள் எங்கிருந்து வந்தன என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன். (எடுத்தது வரும்)

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_