Thursday 18 December 2014

எடுத்தது எங்கே- 13



ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் எனது நண்பர். சிறந்த தமிழறிஞர். நாடறிந்த நல்ல பேச்சாளர். எளிதில் யாரையும் குறை சொல்லமாட்டார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்....

வைரமுத்து ஏன் இப்படி பேசுகிறார்? ஒரு விழாவில் அவர் பேசியதைக் கேட்டேன்.

“நானோ கண் பார்த்தேன்

நீயோ மண் பார்த்தாய்”

என்ற பாடல் வரிகள் இதுவரை எவரும் சொல்லாத ஒன்று. எனது புதிய சிந்தனை’ என்று பேசினார். எல்லாருக்கும் தெரிந்த பிரபலமான திருக்குறள் கருத்துதானே இது. இதைப்போய் தனது புதிய சிந்தனை என்று சொல்கிறாரே என்று வருத்தப்பட்டார் அந்தப் பேராசிரியர்.

யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்

என்கிறார் திருவள்ளுவர்.

இதைத்தான் பேசும் தெய்வம் படத்தில்

உன்னை நான் பார்க்கும்போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

மண்ணை நான் பார்க்கும்போது

என்னை நீ பார்க்கின்றாயே

என்று கண்ணதாசன் எழுதினார்.

இதையேதான் ‘புதியவன்’ படத்தில்

நானோ கண் பார்த்தேன்

நீயோ மண் பார்த்தாய்

என்று வைரமுத்து எழுதியுள்ளார்.

இதே கருத்துப் பட ’புதுமைப் பெண்’ படத்தில்

நான் வந்து பெண் பார்க்க

நீ அன்று மண் பார்க்க

என்று எழுதியுள்ளார் வைரமுத்து. இதைத்தான் தனது புதிய சிந்தனை என்று அவர் சொன்னதாக வருத்தப்பட்டார் தமிழ்ப் பேராசிரியர்.

புதியவன் படத்தில் வரும் இதே பாடலில்

இது என்ன கூத்து அதிசயமோ

இளநீர் காய்க்கும் கொடி இதுவோ

என்று எழுதுவார் வைரமுத்து.

பேசும் தெய்வம் படத்தில் கண்ணதாசன் எழுதிய

‘அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ’ பாடலில் பெண்ணை வர்ணிக்கும்போது,

இள நீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல

மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல

இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல

இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல

என்று வரும். ‘இளநீரைச் சுமந்திருக்கும் தென்னைமரம்’ என்பதைத்தான் ‘இளநீர் காய்க்கும் கொடி இதுவோ’ என்று எழுதுகிறார் வைரமுத்து.

அதுமட்டுமல்ல, இதே பாடலில்

பருவம் அடைந்தால்

ஒரு பஞ்சம் இல்லை

அடடா பிரம்மன்

அவன் கஞ்சன் இல்லை

நீயே அழகின் எல்லை

என்று எழுதுகிறார் வைரமுத்து.

பிரம்மனை கஞ்சன் என்றுதான்

நினைத்தேன்

உன் இடையைப் பார்த்தபோது

என்ற புதுக்கவிதையை அப்படியே எடுத்து ஜீன்ஸ் படப்பாடலில் பயன்படுத்தியதை ஏற்கனவே சொன்னேன் அல்லவா? அதைத்தான் இங்கே கொஞ்சம் மாற்றி

பருவம் அடைந்தால்

ஒரு பஞ்சம் இல்லை

அடடா பிரம்மன்

அவன் கஞ்சன் இல்லை

என்று எழுதுகிறார். பரவாயில்லையே, ஒரு புதுக்கவிதையின் சில வரிகள் மட்டுமே பல பாடல்களை எழுத வைரமுத்துவுக்கு உதவி இருக்கிறதே.

புதியவன் படத்தின் இந்த ஒரு பாடலில் மட்டும் ஒரு திருக்குறள், ஒரு கண்ணதாசன் பாடல், ஒரு புதுக்கவிதை ஆகியவற்றின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. ஆனாலும் இதை திருட்டு என்று சொல்வது தவறு. ஒன்றில் இருந்து எடுத்தால்தான் திருட்டு. பலவற்றில் இருந்து எடுத்தால் அது திரட்டு.

(எடுத்தது வரும்)

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_