Tuesday 9 December 2014

எடுத்தது எங்கே -7



அமர தீபம் படத்துக்கு பாட்டெழுதும்படி கவிஞர் தஞ்சை ராமையாதாசிடம் கேட்டார் இயக்குனர் ஸ்ரீதர். பாட்டு ஜாலியானதாக இருக்க வேண்டும் என்றார்.

ஜாலிலோ ஜிம்கானா

டோலிலோ கும்கானா

என்று எழுதிக்கொடுத்தார் ராமையாதாஸ்.

இதுக்கு என்ன அர்த்தம்? ஒன்னும் புரியவில்லையே என்றார் ஸ்ரீதர்.

‘படத்தில் குறவன்- குறத்தி பாடும் பாடல்தானே இது. நரிக்குறவர் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. இதில் அர்த்தம் புரியாட்டி என்ன? பாட்டை எடுத்துக்கொண்டு போய் ரெக்கார்டு பண்ணு. படம் நல்லா ஓடும்’ என்று சொல்லி அனுப்பினார் ராமையாதாஸ்.

இதுபோன்ற பழைய பாடல்களைக் குறிப்பிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார் வைரமுத்து. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,

முக்காலும் காலும் ஒண்ணு

ஒங்கக்காளும் நானும் ஒண்ணு

என்றெல்லாம் பாட்டெழுதினார்கள். இப்படி இருந்த தமிழ்த் திரைப்பாடலில் படிமங்களைப் புகுத்தி புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளேன் என்றார்.

வைரமுத்து இப்படிச் சொல்லிய சில மாதங்களில் அம்மன்கோவில் கிழக்காலே படம் வெளியானது. அந்தப்படத்துக்காக

நம்ம கடைவீதி கலகலக்கும்

என் அக்காமக அவ நடந்து வந்தா

என்ற பாடலை எழுதினார் வைரமுத்து. இந்தப் பாடலில், ‘முக்காலும் காலும் ஒண்ணு’ என்ற பழைய பாடல் வரியை அப்படியே எடுத்து கையாண்டுள்ளார்.

கடைவீதி கலகலக்கும் பாடலில்

அடி முக்காலும் காலும் ஒண்ணு

இனி ஒண்ணோட நானும் ஒண்ணு

என்று எழுதி புதிய ‘பரிணாம’த்தை ஏற்படுத்தியுள்ளார்.

துõக்குத் துõக்கி படத்தில் ஒரு பாடல். மருதகாசி எழுதியது.

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த

மின்னொளியே ஏன் மவுனம்

வேறெதிலே உந்தன் கவனம்

என்று எழுதியுள்ளார் மருதகாசி. இந்தப் பாடல் முடியும்போது,

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே

கனிவுறும் காதல் ஜோதி

காண்போமே பாதி பாதி

என்று முடிகிறது.

இந்தப் பாடல்தான், வைரமுத்துவின் சிந்தனையில் புதிய ‘பரிணாமம்’ பெற்று

அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்றுள்ளது.

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே

கனிவுறும் காதல் ஜோதி

என்ற வரிகளை

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

என்று எழுதுகிறார் வைரமுத்து.

சங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனபடம் முதல்வன். இதன் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்தப் படத்தில் வரும் ‘உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு’ என்ற பாடலும் சூப்பர் ஹிட். வைரமுத்து எழுதியது.

இந்தப் பாடலைக் கேட்ட நண்பர் ஒருவர், அதில் வரும் ஒரு வரியைச் சொல்லி, ‘ஆஹா...என்ன அற்புதம்’ என்று வியந்து பாராட்டினார். உடனே நான், அந்த வரி எங்கிருந்து வந்தது என்பதை அவருக்குச் சொன்னேன். “அப்படியா? பாடலைக் கேட்டபோது நான் வியந்துபோனேன். அதை பொசுக்கென்று ஆக்கிவிட்டீர்களே” என்றார்.

எடுத்தது வரும் ...

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_