Tuesday 9 December 2014

எடுத்தது எங்கே 6



பழந்தமிழ் இலக்கியங்களில் காதலன், காதலியை ‘தலைவன், தலைவி’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் தேடச் செல்வான். இதற்குப் ‘பொருள்வயிற் பிரிவு’ என்று பெயர். இந்தப் பிரிவுக் காலம் மூன்று மாதங்களைத் தாண்டக் கூடாது.

அப்படி, தலைவன் பிரிந்து சென்றதால் வருந்தும் தலைவி, அவன் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து, கண்கள் பொலிவு இழக்கிறாள். அவன் சென்ற நாளை எண்ணி எண்ணிப் பார்த்து வருந்துகிறாள்.

விரல் விட்டு எண்ணுவது ஒரு வகை. விரலை ஒற்றி எண்ணுவது இன்னொரு வகை. அதாவது, பெருவிரல் நுனியால் மற்ற விரல்களின் நுனியை தொட்டு, ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவார்கள். அப்படி தலைவன் பிரிந்து சென்ற நாட்களை விரலை ஒற்றி ஒற்றி எண்ணி எண்ணிப் பார்க்கிறாள் தலைவி. இவ்வாறு எண்ணி எண்ணியே அவளின் விரல்கள் தேய்ந்துவிட்டன என்கிறார் திருவள்ளுவர். அந்தக் குறள் இதோ...

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.

இலங்கையின் அசோக வனத்தில் சீதையை சிறை வைத்துள்ளான் இராவணன். அங்கே,ராமனை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் விடுகிறாள் சீதை. அந்தக் கண்ணீரில் அவளது சேலை நனைகிறது. துன்பத்தாலும், தன் நிலையை எண்ணி அவள் விடும் பெருமூச்சாலும் உண்டாகும் உடல் வெப்பத்தால், கண்ணீரால் நனைந்த சேலை காய்ந்துவிடுகிறது என்று கம்பன் சொல்வான்.

ஒப்பினான்தனை நினைதொறும்

நெடுங்கண் உகுத்த

அப்பினால் நனைந்து அருந்துயர்

உயிர்ப்புடை யாக்கை

வெப்பினால்புலர்ந்த ஒரு நிலை

உறாத மென்துகிலாள்

என்பான் கம்பன்.

‘நாளொற்றித் தேய்ந்த விரல்’ என்று வள்ளுவனும் ‘வெப்பினால்புலர்ந்த ஒரு நிலை உறாத மென்துகிலாள்’ என்று கம்பனும் சொன்னதைத்தான் பாலை வனச்சோலை படத்தில் அப்படியே கையாண்டிருப்பார் வைரமுத்து.

அந்தப் படத்தில் வரும் ‘ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு’ பாடலில்

மாலை சூடும் தேதி எண்ணி பத்துவிரல் தேயும்- இவ

இழுத்துவிடும் பெருமூச்சில் ஈரச் சேலை காயும்

என்கிறார் வைரமுத்து.

தவப்புதல்வன் படத்தில்,

இசை கேட்டால் புவி அசைந்தாடும்- அது

இறைவன் அருளாகும்

என்று ஒரு பாடல். கண்ணதாசன் எழுதியது. 1970களில் வெளியான இந்தப் படப்பாடல் மிகவும் பிரலமானது. ‘கடல் மகள் தன்னுடை களைந்து பொன்னுடை பூண்டாள்’ என்று பாரதிதாசன் சொன்னதை எதிர்மறையாக சிந்தித்து நிழல்கள் படத்தின் ‘பொன் மாலைப்பொழுது’ பாடலில் ‘வானமகள் நாணுகிறாள்’ என்று சொன்னதுது போலவே, ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ என்ற வரியையும் எதிர்மறையாக சிந்திக்கிறார் வைரமுத்து.

காதல் ஓவியம் படத்தில் வரும் ‘அம்மா அழகே’ என்பாடலில்

இசை கேட்டால் புவி அசைந்தாடும்

என்பதையே அப்படியே மாற்றி

ஆகாயம் என்பாட்டில் அசைகின்றது- என்

சங்கீதம் பொய் என்று யார் சொன்னது

என்று எழுகிறார்.

‘ (எடுத்தது வரும்)

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_