Tuesday 9 December 2014

எடுத்தது எங்கே-5






குடும்பத்தலைவியை ‘இல்லாள்’ என்று சொல்கிறோம். ஆனால், குடும்பத்தலைவரை ‘இல்லான்’ என்று சொல்ல முடியாது. காரணம் ‘இல்லான்’ என்றால் ‘இல்லாதவன்’ என்ற பொருள்படும். தலைவன், தலைவி என்று சொல்வது போல, ‘புலவன்’ என்பதன் பெண்பாலாக ‘புலவி’ என்று சொல்ல முடியாது. புலவி என்றால் ஊடல் என்று பொருள்படும். பொதுவாக புலவன் என்று யாரும் சொல்வதில்லை. மரியாதை கருதி புலவர் என்றே சொல்கின்றனர். பெண்ணாக இருந்தால் ‘பெண்பால் புலவர்’ என்றே சொல்கின்றனர்.

ஒரு பெண்பால் புலவருக்கும் ஆண்பால் புலவருக்கும் மோதல் எற்பட்டதாம். ஆண்பால் புலவர் ஒரு நாள், “ஒரு காலில் நாலிலை பந்தலடி” என்று விடுகதை போட்டாராம். ‘டி’ என்றதால் கோபமடைந்த பெண்பால் புலவர், “ஆரையடா சொன்னாய்...அது ஆரைக் கீறையடா” என்று பதிலடி கொடுத்தாராம். ஒரு ‘டி’ போட்டதற்கு இரண்டு ‘டா’ போட்டார் பெண்பால் புலவர். என் சிறுவயதில் இப்படி ஒரு கதை சொன்னார் என் அப்பா.

புலவர்கள், இலக்கியவாதிகள் மோதிக்கொண்டால் கூட சுவாரசியமாகத்தான் இருக்கும். கற்கண்டும் கற்கண்டும் மோதிக்கொண்டால் கற்கண்டுதானே கிடைக்கும். அதனால்தான் புலவர்கள் திட்டினாலும் கூட தித்திக்கும். திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தவர் கண்ணதாசன். இது பற்றி ஒரு முறை கருணாநிதி கூறுகையில்,

‘திட்டுகின்றாய் என்றாலும்

தீந்தமிழால் என்பதனால்- அதை

பிட்டு என நினைத்தே சுவைத்திட்டேன்’

என்று சொன்னார்.

திரைப்பட பாடலாசிரியர் முத்துலிங்கத்துக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு முறை மோதல் வந்தது. மௌன கீதங்கள் படத்தில் “டாடி..டாடி.. ஓ மை டாடி...’ என்ற பாடலில்

“கøயோரம் நண்டெல்லாம்

தான் பெற்ற குஞ்சோடு

கைகோர்த்து விளையாடுதே”

என்று எழுதியிருப்பார் வைரமுத்து.

இதை விமர்சித்து ஒரு வார இதழில் எழுதினார் கவிஞர் முத்துலிங்கம்.

“நண்டு முட்டையிட்டுவிட்டு போய்விடும். கோழி போல அடை காக்காது. இதனால், தன் குஞ்சு எது என்றே நண்டுக்கு தெரியாது. இது தெரியாமல், ‘கரையோரம் நண்டெல்லாம் தான் பெற்ற குஞ்சோடு கைகோர்த்து விளையாடுதே’ என்று எழுதியிருக்கிறாரே. வைரமுத்துவுக்கு விவரம் தெரியவில்லை. என்ன பாட்டெழுதுகிறார் அவர்?” என்று கேட்டு கிண்டலடித்தார் முத்துலிங்கம்.

அடுத்த வாரம் வைரமுத்துவின் விமர்சனம். “முத்துலிங்கம் என்ன பாட்டெழுதுகிறார்?

‘புடி புடி கோழி

முட்டைக் கோழி- அதை

புடிச்சாந்து

கொழம்பு வைப்போம் வாடி’

என்று எழுதுகிறாரே முத்துலிங்கம். இதெல்லாம் ஒரு பாட்டா?” என்று கேட்டார் வைரமுத்து. இப்படி இவர்களின் மோதல் சுவாரசியமாக இருந்தது.

பாலைவனச் சோலை படத்துக்குதான் முதன்முதலாக எல்லா பாடல்களையும் வைரமுத்துவே எழுதினார். இந்தப் படத்தின் பாடலிலும் அவர் படித்தவை உருமாற்றம் பெற்று வரும்.

‘ஆளானாலும் ஆளு - இவ

அழுத்தமான ஆளு’

பாடலில் வரும் வரிகள் எங்கிருந்து வந்தது தெரியுமா?

 (எடுத்தது வரும்)

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_