Thursday 18 December 2014

எடுத்தது எங்கே- 12



ஜீன்ஸ்(1998ல் வெளியானது) படத்தில் வரும் ‘ஹைர...ஹைர ஹைரோபா’ பாடலில்,

முத்தமழையில் நனைஞ்சுக்கலாமா

உதட்டின் மேலே படுத்துக்கலாமா

என்று வரிகள் வரும்.

உதட்டின் மேலே படுத்துக்கலாமா என்பதற்கு என்ன பொருள்? உதட்டின் மீது கன்னம் வைத்து படுத்துக்கொள்வதுதானே?

உள்ளத்தை அள்ளித் தா(1995ல் வெளியானது) படத்தில், ‘ஐ லவ் லவ் யூ சொன்னாளே...’ பாடலில்

உள்ளங்கையில் கன்னம் வைத்து

துõங்கப் பிடிக்கும்

என்று எழுதுவார் பழனி பாரதி. இதுதானே ஜீன்ஸ் படப்பாடலில்

உதட்டின் மேலே படுத்துக்கலாமா

என்று உருமாற்றம் பெற்றுள்ளது. உள்ளங்கை, இங்கே உதடு ஆனது அவ்வளவுதான்.

வயல்களில் வேலை செய்யும்போதும், தண்ணீர் இறைக்கும்போதும் அலுப்பு தெரியாமல் இருக்க தமிழ் மக்கள் பாட்டுப் பாடும் வழக்கம் உண்டு. அவர்களே பாட்டுக்கட்டி பாடுவார்கள். ராகமும் அவர்களே. வேலை செய்யும் போது பாடும் பழக்கம் படிப்படியாக பலவற்றுக்கும் பரவியது. தாலாட்டு பாடினர். ஒப்பாரி பாடினர். பின்னர், திருமணத்தின்போதும் மணமக்களின் குடும்பம் மணமக்கள் பற்றி பாடத் தொடங்கினர். இந்த திருமணப்பாடல்கள் மணமக்களுக்கு அறிவுரை கூறுவதாகவும் அமையும்.

செட்டிநாட்டு மக்கள் பாடிய திருமணப்பாடல் ஒன்றில்

வட்டுவப்பை வைக்க மறந்தாலும்

வண்டார் குழலாளை வைக்க மறவாதே

என்று வரும். வட்டுவப்பை என்பது பணம் வைத்து, அதைப் பாதுகாப்பாக இடுப்பில் கட்டிக்கொள்ள பயன்படுத்தப்படும் பை. அப்படி வட்டுவப்பையில் பணத்தை வைத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, அதன்மேல்தான் வேட்டி கட்டுவார்கள். அத்தகைய வட்டுவப்பையை பாதுகாப்பாக வைக்க மறந்துபோனாலும் பரவாயில்லை, வண்டார் குழலாளை அதாவது உன் மனைவியைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மறந்துவிடாதே என்று சொல்கிறது இந்தப் பாடல்.

இத்தகைய பாடல்களை காட்டுப்பாடல்கள் என்றும் நாடோடிப் பாடல்கள் என்றும் சொல்லி வந்தனர். பின்னர், அவற்றை கவுரவிக்கும் வகையில் மக்கள் பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் என்று அழைத்தனர். இத்தகைய பாடல்களை தொகுத்து ‘ஏட்டில் எழுதாக் கவிதைகள்’ என்ற அழகான தலைப்பில் நுõலாக வெளியிட்டுள்ளார் செ. அன்னகாமு.

இந்த நூõலில் வரும் ஒரு பாடல்.

பாடறியேன் படிப்பறியேன்

பள்ளிக்கூடம் நானறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன்

எழுத்துவகை நானறியேன்

ஏட்டிலே எழுதவில்லை

எழுதிநான் படிக்கவில்லை

வாயிலே வந்தபடி

வகையுடனே நான்படிப்பேன்

அட அப்படியா என்று வியப்பாக உள்ளதா உங்களுக்கு. நீங்கள் நினைப்பது சரிதான்.

சிந்துபைரவி படத்தில் சித்ரா பாடும் பாட்டுதான் இது. இந்த ஏட்டில் எழுதாக் கவிதையை எடுத்துதான் ஏட்டில் எழுதி இசைத்தட்டில் ஏற்றக் கொடுத்துவிட்டார் வைரமுத்து.

பாடறியேன் படிப்பறியேன்

பள்ளிக்கூடம் நானறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன்

எழுத்துவகை நானறியேன்

ஏட்டிலே எழுதவில்லை

எழுதி வச்சு படிக்கவில்லை

என்ற பாடல்தான் அது என்பது சொல்லாமலே உங்களுக்குப் புரியும்.

எழுதி நான் படிக்கவில்லை

என்பதை

எழுதிவச்சு படிக்கவில்லை

என்று மாற்றியதும் அதன் பிறகு வந்த வரிகளை எழுதியது மட்டும்தான் வைரமுத்து செய்திருக்கும் வேலை. பெரும்பாலான திரைப்பட பாடலாசிரியர்களுக்கு, இத்தகைய ஏட்டில் எழுதாக் கவிதைகளில் இருந்துதான் கச்சாப் பொருள் கிடைக்கிறது.

(எடுத்தது வரும்)

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_