Friday 19 December 2014

குறும்பு 9


விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் இளங்கலை(B.A. ன்னு தமிழ்ல சொன்னாதான் புரியுமோ) சேர்ந்தேன். அந்த ஆண்டுதான் இரு பருவ முறை (அதாங்க....செமஸ்டர்) அறிமுகப்படுத்தினார்கள். ஒரு பாடத்தின் 100 மதிப்பெண்களில் உள்ளிடை மதிப்பீடு ( இண்டர்னல்) மட்டும் 40 மதிப்பெண்கள். மீதி 40 மதிப்பெண்களுக்கு பல்கலைக்கழகத் தேர்வு.

உள்ளிடை மதிபெண்கள் எப்படி போடுவார்கள் என்று பேராசிரியர் விளக்கிக்கொண்டிருந்தார். ஒரு மணி நேரத் தேர்வும் 3 மணிநேரத் தேர்வும் நடத்துவோம். assignment கொடுப்போம். இதையெல்லாம் கணக்கிட்டுதான் உள்ளிடை மதிப்பெண் வழக்குவோம் என்றார்.

என் அருகில் அமர்ந்திருந்த வகுப்புத் தோழர் நண்பர் ரகுராமன் என்னிடம்,
‘அசைன்மெண்ட்” ன்னா என்னங்க?’
என்று கேட்டார்.

‘அது ஒண்ணுமில்லிங்க. ரொம்ப சிம்பிள்” என்றேன்.

அவர் விடவில்லை. வகுப்பு முடிந்ததும், “அசைன்மெண்ட்னா என்னங்க?” என்று கேட்டார்.

போகப் போக நீங்களே புரிஞ்சுப்பிங்க” என்றேன். நல்ல வேளை அதற்குமேல் கேட்கவில்லை.அமைதியாக இருந்துவிட்டார். நல்ல நட்பான பிறகு ஒரு நாள்,

அசைன்மெண்ட் நனா என்னன்னு கேட்டதுக்கு,விளக்கம் சொல்லாமல், போகப் போக தெரிஞ்சுப்பிங்கன்னு ஏன் சொன்னிங்க?

என்று கேட்டார். அப்போது அவரிடம் உண்மையைச் சொன்னேன்.. நான் சொன்னது.

”அசைன்மெண்ட் என்ற சொல்லை நானே அன்றுதான் கேள்விப்பட்டேன். ஆங்கிலத்துக்கும் எனக்கும் ரொம்ப தூரம். எனக்கும் தெரியாது என்று சொல்லவும் ஈகோ தடுத்தது. அதனால அப்படி சொல்லி சமாளித்தேன்.”

இதை இப்பொழுதுகூட சொல்லிச் சிரிப்பார் என் நண்பர் ரகுராமன்.


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_