Thursday, 24 September 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க 18



தமிழ் ருசிக்கலாம் வாங்க
==============================
ஒரு கடிதம், இரு உறவு.
+++++++++++++++++++++++++++

தன்னைப் பிரிந்து சென்ற கோவலனுக்குக் கவுசிகன் மூலம் ஒரு கடிதம் அனுப்புகிறாள் மாதவி. அதில் மாதவி எழுதியிருப்பதாக இளங்கோவடிகள் சொல்கிறார் பாருங்கள்....

அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்.
குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியொடு
இரவிடைக் கழிதற்குஎன்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடிதல் வேண்டும்,
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி.

கடிதத்தில் மாதவி கூறியிருப்பது இதுதான்....

அடிகளே உங்கள் முன் விழுந்து, உங்கள் திருவடிகளை வணங்குகிறேன். தெளிவற்ற என் சிறுமொழிகளை தயவு செய்து கேட்டருள வேண்டுகிறேன்.வயதான தாய் தந்தைக்கு அருகில் இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல், உயர்குடியில் பிறந்த கண்ணகியுடன் புகார் நகரை விட்டு சென்றது ஏன்? அதுவும், ஊரைவிட்டு் யாருமே செல்ல விரும்பாத சிறப்பு மிக்க பூம்புகார் நகரைவிட்டு மனைவியுடன் இரவோடு இரவாக, யாருக்கும் தெரியாமல் சென்றதற்கு, நான் செய்த தவறுதான் காரணமோ என்று என் மனம் சோர்வடைகிறது.அப்படி என்னுடைய தவறுதான் காரணம் என்றால், என்னுடைய சொல்லைப் பொருட்படுத்தாமல்,என்னை மன்னிக்க வேண்டுகிறேன். குற்றமற்ற அறிவை உடைய மேன்மை உடைய தங்களைப் போற்றுகின்றேன்.

இப்படி மாதவி எழுதிய மடலை வாசித்த கோவலன் மனம் நெகிழ்ந்தான். மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் என்றும் ஆடல் மகள் என்னிடமே நடித்தாள் என்றும் சொல்லிப் பிரிந்தவன், இந்தக க்டிதத்தைப் படித்தபின் மாதவி குற்றமற்றவள் என உணர்கிறான்.
“என் பெற்றோரிடம் சொல்லாமல், ஊரை விட்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி, மாதவியின் இந்தக் கடிதத்திலேயே உள்ளது. எனவே, இந்தக் கடிதத்தை, நான் கொடுத்ததாக என் பெற்றோரிடம் கோண்டுபோய்க் கொடு” என்று கவுசிகனை அனுப்பி வைக்கிறான் கோவலன்,

காதலன் கோவலனுக்கு மாதவி எழுதிய கடிதம், அதையே, கோவலன் தன் பெற்றோருக்கு அனுப்பக் கூடியதாக இருக்கிறது. ஒரே கடிதம், காதலனுக்கு அனுப்பினாலும் பொருந்துகிறது. பெற்றோருக்கு அனுப்பினாலும் பொருந்துகிறது.

ஆஹா... இந்தக் கடிதத்தைஎவ்வளவு அற்புதமாக வடித்திருக்கிறார் இளங்கோவடிகள்.

Monday, 21 September 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க 17


தமிழ் ருசிக்கலாம் வாங்க
========================
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
என்று திரைப்பாடலில் புதுக்கவிதை சிந்தனையை, புதிய சிந்தனையை புகுத்தியவர் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள்.
எது இல்லாத ஊரே இல்லை சொல்லுங்கள் பார்க்கலாம். நானும் யோசித்து யோசித்துப் பார்த்தேன். பிடிபடவே இல்லை.
தொடர்ந்து படிப்பதை நிறுத்திவிட்டு நீங்களும் யோசித்துப் பாருங்கள். பிறகுதான் உங்களுக்கும், “அட இது தோணலையே நமக்கு” என்று தோணும்..
எது இல்லாத ஊர் இல்லை?
சுரதா சொல்கிறார் இதோ...அதுவும் ஒரு திரைப்பாடலில்....காதல் பாடலில்.....
என்ன சொல்கிறார்?
--------------------------------------------------------------
நீலவானம் இல்ல்லாத ஊரில்லை - அன்பே
நீயின்றி நானில்லை.
-------------------------------------------------------------
அட....ஆமாம். இது நமக்குத் தோணலையேன்னு இப்ப தோணுதா உங்களுக்கு?. வானம் இல்லாத ஊர் இல்லை என்பது சாதாரண உண்மைதான். அது நமக்குத் தோணவில்லை. சுரதா எவ்வளவு அழகாக எளிமையாக சொல்லிவிட்டார் பாருங்கள்.
தாமரை, சூரியனைக் கண்டு மலரும். அல்லி, நிலவு கண்டு மலரும். தாழை மலர் எதைக் கண்டு மலரும்?
சுரதா சொல்கிறார்....
சுடர்மின்னல் கண்டு மலரும் தாழையைப் போல்....
என்று சொல்கிறார். மின்னல் கண்டு தாழை மலரும் என்கிறார்.
“எப்ப்படி ஐயா உங்களுக்குத் தெரியும்?” என்று அவரிடமே கேட்டேன். பட்டென்று அவர் சொன்ன பதில்.....
“எனக்கென்ன தெரியும்? நற்றிணையில் சொல்லியிருப்பதை நான் சொன்னேன்.
இதுதான் சுரதா அவர்களின் நேர்மை.

Saturday, 22 August 2015

அதுதான் சுதந்திரம்

என்ன சுதந்திரம்?
எங்கே சுதந்திரம்?
எவருக்கும் இல்லை
இங்கே சுதந்திரம்...

வெள்ளையரை விரட்டிவிட்டு
கொள்ளையர் கையில் நாடு..
கொள்ளையரினும்
வெள்ளையரே மேல்.

இரவிலே வந்ததால்
இருட்டிலே கிடக்கிறோம்...

என்ன சுதந்திரம்?
எங்கே சுதந்திரம்?

எழுதி முடித்து நிமிர்ந்த
என்னைப் பார்த்து
என் பேனா சொன்னது.....

இத்தனை எழுத
உனக்குக் கிடைத்ததே சுதந்திரம்
அதுதான் சுதந்திரம்

தமிழ் ருசிக்கலாம் வாங்க 16



லண்டன் ரயிலில் சங்க இலக்கியப் பாடல்
======================================

லண்டன் மாநகரில் சுரங்கப் பாதையில் ஓடும் ரயிலில், உலகின் மிகச்சிறந்த கவிதைகளை, அந்தந்த மொழியிலும் ஆங்கில மொழி பெயர்ப்போடும் எழுதி வைத்தனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் இந்தப்பாடல்களைத் தொகுத்து “மண்ணுக்கடியில் மலரும் பாக்கள்” (Poems on the underground) என்று நூலாக வெளியிட்டுள்ளனர்.

அப்படி அந்த ரயிலில் எழுதி வைக்கப்பட்டுள்ள கவிதைகளில் சங்க இலக்கியமான குறுந்தொகைப் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

ஆம். சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று குறுந்தொகை. இதை சங்க இலக்கியங்களுக்கு வாயில் என்று கூறலாம். மிகவும் எளிய பாடல்கள். படித்துப் புரிந்துகொள்ள எளிது. இதைப் படித்தால், சங்க இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.
இத்தகைய சிறப்பு பெற்ற குறுந்தொகையில் இருந்துதான் ஒரு பாடலை, லண்டன் ரயிலில் எழுதி வைத்துள்ளனர். அந்தப்பாடல் இதோ....

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே.

தலைவனும் தலைவியும் கூடி மகிழ்கின்றனர். அதன் பின்னர், தலைவன் தன்னைக் கைவிட்டுவிடுவானோ என்ற அச்சம் தலைவியிடம் ஏற்படுகிறது. இதை அவளது முகக்குறிப்பைக் கண்டு தெரிந்துகொண்ட தலைவன், நாம் உள்ளத்தால் கலந்துவிட்டோம். நம்மைப் பிரிப்பது அரிது என்று சொல்லி தலைவியைத் தேற்றுவதுதான் இந்தப்பாடல். பாடலின் பொருள் இதோ...

என்னுடைய தாய் யாரோ...உன் தாய் யாரோ. என் தந்தையும் உன் தந்தையும் எந்தவகையிலாவது உறவினரா என்றால்? அதுவும் இல்லை.உன்னை எனக்கு முன்பே தெரியுமா? என்றால் தெரியாது. உனக்கும் என்னை இதுவரை தெரியாது. ஆனாலும்காதலால் நம் நெஞ்சங்கள் கலந்துவிட்டன். எப்படிக் கலந்துள்ளன தெரியுமா?
செம்மண் நிலத்தில் விழுந்த மழை நீர் எப்படி அதன் தன்மையாகிவிடுகிறதோ அதுபோல நம் நெஞ்சங்கள் கலந்துவிட்டன என்று காதலியிடம் கூறுகிறான் தலைவன்.

செம்மண் நிலத்தில் விழும் மழை நீர், மண்ணின் நிறமான செந்நிறமாக மாறிவிடும். செம்மண்ணின் சுவையையும் மணத்தையும் பெற்றுவிடும். அப்படி செம்மண்ணின் தன்மையாக மாறிய அந்த நீரில் இருந்து, செம்மண் நிறத்தையோ, மணத்தையோ, சுவையையோ பிரிக்க முடியாது.
அதுபோல காதலர் இருவர் நெஞ்சமும் கலந்துவிட்டது. இருவர் நெஞ்சமும் வேறு வேறு அல்ல. ஒரே தன்மையுடையதாகிவிட்டது. இனி அந்தக் காதல் நெஞ்சங்களைப் பிரிக்க முடியாது என்று சொல்கிறார் கவிஞர்.

இந்த அற்புதமானப் பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அதனால், இந்தப் பாடலில் வரும் அற்புதமான சொற்றொடரையே அவரது பெயராக்கிவிட்டனர். ஆம், பாடலாசிரியருக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்,...

செம்புலப் பெயல்நீரார்.

தமிழ் ருசிக்கலாம் வாங்க.. 15




கண்ணதாசனின் ஒற்றெழுத்து ஜாலம்.
===================================
பார்த்தேன்....ரசித்தேன்... 
பக்கத்தில் வரத் துடித்தேன்...
என்ற பாடலில்
மலைத்தேன் இதுவென மலைத்தேன்
என்று சொல்வார் கண்ணதாசன். மலைத்தேன் என்பதை ஒவ்வொரு
இடத்திலும் ஒவ்வொரு பொருளில் கையாள்கிறார்.
“மலைத்தேன்” ( மலையில் கிடைக்கும் தேன்) இதுவென மலைத்தேன். ஆச்சரியப்பட்டு மலைத்துப் போகிறேன் என்று அடுத்து பொருள் கொள்கிறார்.
இந்தப்பாடலில் இன்னொரு வரி.
மலர்த்தேன் என நான் இருந்தேன்
பருவத்தில் மலர்ந்தேன்
என்று சொல்கிறார்.
“மலர்த்தேன் என நான் இருந்தேன்” - மலரில் இருக்கும் தேனாக இருந்தேன். மலருக்குள் தேனாக இருந்தபோதும், மலராமல் இருப்பதால் வண்டு வந்து தேனருந்த முடியாத நிலை போல் இருக்கிறாள்.
”பருவத்தில் மலர்ந்தேன்” பருவம் வந்ததும் மலர்கிறாள். வண்டு வந்து தேனருந்தலாம்.
இங்குதான் கண்ணதாசன் தன் சூட்சமத்தைக் காட்டுகிறார்.
பருவம் எய்தும் முன் “மலர்த்தேன் என நான் இருந்தேன்” என்று சொல்கிறாள். இதில் ”மலர்த்தேன்” என்பதில் வருகின்ற “த்” வல்லின ஒற்று.பருவத்தில் மலர்ந்தேன்.... இதில, “மலர்ந்தேன்” என்பதில் வரும் “ந்” மெல்லினம்.
பருவமடைந்தபிந்தான் பெண்மைக்கு மென்மை கூடுகிறது. பருவம் அடையும் முன் அவள் மென்மையாக இருக்கமாட்டாள் என்பதால், .
“மலர்த்தேன் என்று வல்லின ஒற்றை பயன்படுத்துகிறார். பருவத்தில் மலர்ந்தேன் என்பதில், பருவடைந்ததும் மென்மை கூடுகிறாள் என்பதால் மெல்லின ஒற்றை போடுகிறார். ஆஹா...கவியரசர் அல்லவா?

தமிழ் ருசிக்கலாம் வாங்க 14



கவியரசர் கண்ணதாசனின் நுட்பம்.
=================================

என்னப் பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை

என்று ஒரு பாடலில் வரும்.

தமிழ் இலக்கணத்தில் ஒரு எழுத்து மறைவதை மெலிதல் என்பார்கள். அதாவது வல்லின ஒற்று மறையுமானால் வலி மெலியும் என்றும், இடையின ஒற்று மறைதலை இடை மெலிதல் என்றும் சொல்வார்கள்.

இந்தப்பாடல் வரிகளை மீண்டும் படியுங்கள்.

என்னப் பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை

இதில் “பார்வை” என்பதில் இடையின ஒற்று “ர்” உள்ளது. ர் மறைந்தால்
”பார்வை” என்பது “பாவை” ஆகும்.
அவன் பார்க்கிறான். அதனால் அவளுக்கு காதல் மிகுந்து காமமும் மிகுகிறது. அதன் காரணமாக இடை மெலிகிறாள். என்பதுதான் பாடல் பொருள். அதற்குள்ளும், “பார்வை” என்ற சொல், இடை மெலிந்தால் “பாவை” என்று எவ்வளவு நுட்பமாக சுவை கூட்டுகிறார் பாருங்கள் கவியரசர்.



விதைக்கப்பட்டுள்ளார்

அறிவு விதைக்கப்பட்டுள்ளது
ஆற்றல் விதைக்கப்படுள்ளது
அன்பு விதைக்கப்பட்டுள்ளது
கனவு விதைக்கப்பட்டுள்ளது
கலாம் புதைக்கப்படவில்லை
விதைக்கப்பட்டுள்ளார்.
இளைஞர்கள் இதயங்களில்..