Wednesday, 8 July 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க. 5



சந்தத்தில் சதிராடும் தமிழ்.
=========================
பரணி இலக்கியம் என்பது போரில் வெற்றி பெற்றவனை வாழ்த்திப் பாடுவது. அதுவும் சாதாரண வெற்றி பெற்ற வீரனுக்குப் பாடுவது அல்ல. ஆயிரம் யானைகளைப் போரிலே வெட்டி வீழ்த்தி, மாட்சிமை வீரனுக்குப் பாடப்படுவதுதான் பரணி.

ஆனைஆயிரம் அமரிடை வென்ற
மாணவனுக்கு வகுப்பது பரணி

என்று சொல்லப்படுகிறது.

பரணி இலக்கியங்களுள் சிறப்பானது எனப் போற்றப்படுவது கலிங்கத்துப் பரணி. செயங்கொண்டார் எழுதியது. இதில் சந்தத்தில் தமிழ் சதிராடும். மொத்தம் 150 சந்தங்களில் எழுதியுள்ளார். இந்த அளவுக்கு அதிகமான சந்தங்கள் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லை. பாட்லைப் படிக்கும் போதே, பொருள் புரியாவிட்டாலும் எதைப் பற்றி சொல்கிறது அந்தப் பாடல் என்பதை அதன் சந்தத்தை வைத்தே புரிந்துகொள்ள முடியும். படிக்கும்போதே பாடல் சொல்வது காட்சிகளாக கண்களில் விரியும். காதுகளில் ஒலிக்கும்.
கலிங்கத்து பரணியில் வரும், போர்க்கள ஒலியைச் சொல்லும் பாடல் ஒன்றைப் பார்ப்போம்.

எடும் எடும் எடும் என எடுத்ததோர்
இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே
விடுவிடு விடுபரி கரிக் குழாம்
விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே

போர்க்களத்து எழும் போரின் பேரொலியைச் சொல்லும் பாடல் இது.
போக்களத்தில் சோழப் படையினரும் கலிங்கர் படையினரும் குதிரைப்படை, யானைப் படையை போருக்கு ஏவுகின்றனர். எப்படி?

விரையட்டும் குதிரைப் படை,,,,, புறப்படட்டும் யானைப்படை.....என்று உரக்கக் கூவுகின்றனர். அந்த ஒலி, கடலோசையையும் வென்றது. எதிரிகள் மீது குதிரப்படையை ஏவுங்கள் ஏவுங்கள்.. யானைப்படையை எதிரிகளை நோக்கி விடுங்கள் விடுங்கள்...என்ற ஓசை மிகுந்து ஒலித்தது.....

இப்படி இந்தப்பாடலில் போரின் பேரொலியை சொல்கிறார் செயங்கொண்டார். இந்தப்பாடலில் பெரிதாக கற்பனை நயம் எதுவும் இல்லை. ஆனால் பாடலை வாய்விட்டுப் படித்துப் பாருங்கள். வேகமாகத்தான் படிக்க முடியும் இந்தப்பாடலை. போரின் வேகத்தையும் போர்க்கள ஒலியையும் பாடலின் சந்தமே சொல்லும். பாடலை கிடுகிடுவென படித்துப் பாருங்களேன்.

1 comment:

  1. ஓசைநயம் ஒன்று போதுமே.. பாடலைச் சிறப்பிக்க !

    ReplyDelete

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_