Tuesday 25 November 2014

எடுத்தது எங்கே 2



இலக்கிய விழா ஒன்றில் பேசிய தமிழறிஞர் ஒருவர், “பொன்மாலைப் பொழுது என்று எழுதிய வைரமுத்துவைப் பாரட்டுகிறேன். மாலைப் பொழுதின் மகத்துவத்தை ‘பொன்மாலை’ என்று சொல்லியிருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது... இரண்டாயிரம் ஆண்டு இலக்கியத்தில் இல்லாத ஒரு சொல்லாட்சி இது” என்று சொல்லி வைரமுத்துவைப் பாராட்டினார்.

அடுத்து பேசிய நான். “வைரமுத்துவைப் பாராட்டவேண்டும் என்று விரும்பினால், வேறு எதாவது ஒரு வரியைச் சொல்லி பாராட்டுங்கள். ‘பொன்மாலைப் பொழுது’ என்று சொல்வது புதிதல்ல.

“ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம்

கை மூடுதே வெட்கம்

பொன்மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்”

என்று வாலி ஏற்கனவே எழுதிவிட்டார் என்று சொன்னேன்.

வைரமுத்துவை கவிஞர் நா.காமராசன் ஒருமுறை மனம் திறந்து பாராட்டினார். விழா ஒன்றில் பேசிய நா.கா.,

“எனக்கு மட்டும் சொந்தம் -உன்

இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும்- எனது

உயிர் உருகும் சத்தம்”

என்ற வரிகளைத் தந்த வைரமுத்துவைப் பாராட்டுகிறேன் என்று மனம் திறந்து பாராட்டினார்.

முதன் முதலில் திரைப்பாடலுக்குப் பாட்டெழுத பாரதிராஜாவிடம் இருந்து வைரமுத்துவுக்கு அழைப்பு வந்தது. முதல் பிரசவத்துக்காக மனைவி பொன்மணியை யை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பாராதிராஜாவை பார்க்கச் சென்றார் வைரமுத்து. நிழல்கள் திரைப்படத்துக்காக இளையராஜாவின் இசைக்கு பாடல் எழுதினார்.

மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. “எனக்கும் முதல் பிரசவம் ஆயிற்று” என்று, திரைப்படத்துக்கு தான் முதல் பாடல் எழுதியதை மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார் வைரமுத்து. “அந்தப் பாடல் உன் பெயரில்தான் தொடங்குகிறது” என்றும் சொன்னார்.

பொன்மாலைப் பொழுது என்ற அந்தப் பாடலிலேயே, அவர் ரசித்துப் படித்த பாரதிதாசன் தெரிவார்.

ஆம்.

அழகின் சிரிப்பில் கடலைப் பற்றி வர்ணிப்பார் பாவேந்தர். அந்திக் கருக்கல் நெருங்கியது. கறுப்பாக காட்சியளித்த கடல், நிலவு தோன்றியதும், அதன் ஒளிபட்டு பொன்னிறமாக ஜொலித்தது. இதை,

“அதோ பார் கடல்மகள்

தன்னுடை களைந்து

பொன்னுடை பூண்டாள்

என்னென்று கேள்

நிலவுப் பெண் ஒளிகொட்டிற்று”

என்று எழுதுவார் பாவேந்தர்.

இந்த வரிகள் வைரமுத்து மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதே கருத்து அவருடைய முதல் பாடலிலேயே உருமாற்றம் பெற்றுள்ளது. ஆம். பாவேந்தர் சொன்னதையே எதிர்மறையாக சிந்தித்துள்ளார் வைரமுத்து. கடல் என்று சொன்னதை, வானம் என்று சொல்கிறார் வைரமுத்து.

“கடல்மகள் தன்னுடை களைந்து

பொன்னுடை பூண்டாள்”

என்பதைத்தான்

“வானமகள் நாணுகிறாள்

வேறு உடை பூணுகிறாள்”

என்று சொல்கிறார் வைரமுத்து.

(எடுத்தது வரும்)


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_