Saturday 22 August 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க 16



லண்டன் ரயிலில் சங்க இலக்கியப் பாடல்
======================================

லண்டன் மாநகரில் சுரங்கப் பாதையில் ஓடும் ரயிலில், உலகின் மிகச்சிறந்த கவிதைகளை, அந்தந்த மொழியிலும் ஆங்கில மொழி பெயர்ப்போடும் எழுதி வைத்தனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் இந்தப்பாடல்களைத் தொகுத்து “மண்ணுக்கடியில் மலரும் பாக்கள்” (Poems on the underground) என்று நூலாக வெளியிட்டுள்ளனர்.

அப்படி அந்த ரயிலில் எழுதி வைக்கப்பட்டுள்ள கவிதைகளில் சங்க இலக்கியமான குறுந்தொகைப் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

ஆம். சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று குறுந்தொகை. இதை சங்க இலக்கியங்களுக்கு வாயில் என்று கூறலாம். மிகவும் எளிய பாடல்கள். படித்துப் புரிந்துகொள்ள எளிது. இதைப் படித்தால், சங்க இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.
இத்தகைய சிறப்பு பெற்ற குறுந்தொகையில் இருந்துதான் ஒரு பாடலை, லண்டன் ரயிலில் எழுதி வைத்துள்ளனர். அந்தப்பாடல் இதோ....

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே.

தலைவனும் தலைவியும் கூடி மகிழ்கின்றனர். அதன் பின்னர், தலைவன் தன்னைக் கைவிட்டுவிடுவானோ என்ற அச்சம் தலைவியிடம் ஏற்படுகிறது. இதை அவளது முகக்குறிப்பைக் கண்டு தெரிந்துகொண்ட தலைவன், நாம் உள்ளத்தால் கலந்துவிட்டோம். நம்மைப் பிரிப்பது அரிது என்று சொல்லி தலைவியைத் தேற்றுவதுதான் இந்தப்பாடல். பாடலின் பொருள் இதோ...

என்னுடைய தாய் யாரோ...உன் தாய் யாரோ. என் தந்தையும் உன் தந்தையும் எந்தவகையிலாவது உறவினரா என்றால்? அதுவும் இல்லை.உன்னை எனக்கு முன்பே தெரியுமா? என்றால் தெரியாது. உனக்கும் என்னை இதுவரை தெரியாது. ஆனாலும்காதலால் நம் நெஞ்சங்கள் கலந்துவிட்டன். எப்படிக் கலந்துள்ளன தெரியுமா?
செம்மண் நிலத்தில் விழுந்த மழை நீர் எப்படி அதன் தன்மையாகிவிடுகிறதோ அதுபோல நம் நெஞ்சங்கள் கலந்துவிட்டன என்று காதலியிடம் கூறுகிறான் தலைவன்.

செம்மண் நிலத்தில் விழும் மழை நீர், மண்ணின் நிறமான செந்நிறமாக மாறிவிடும். செம்மண்ணின் சுவையையும் மணத்தையும் பெற்றுவிடும். அப்படி செம்மண்ணின் தன்மையாக மாறிய அந்த நீரில் இருந்து, செம்மண் நிறத்தையோ, மணத்தையோ, சுவையையோ பிரிக்க முடியாது.
அதுபோல காதலர் இருவர் நெஞ்சமும் கலந்துவிட்டது. இருவர் நெஞ்சமும் வேறு வேறு அல்ல. ஒரே தன்மையுடையதாகிவிட்டது. இனி அந்தக் காதல் நெஞ்சங்களைப் பிரிக்க முடியாது என்று சொல்கிறார் கவிஞர்.

இந்த அற்புதமானப் பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அதனால், இந்தப் பாடலில் வரும் அற்புதமான சொற்றொடரையே அவரது பெயராக்கிவிட்டனர். ஆம், பாடலாசிரியருக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்,...

செம்புலப் பெயல்நீரார்.

2 comments:

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_