Thursday 4 December 2014

விரும்பியே விழுந்தேன்



நிறையன்றி வேறில்லை -5


மானம் பெரிதென்று
மனம் சொல்கிறது....

மானம் ஊனம் ஆனாலும்
பணம் பெரிதென்று ஊர் சொல்கிறது...

பூமிப் பந்தின் சுழற்சி வேகம்
பொருளை நோக்கியே போகிறது...
ஆனாலும்...
பொருளைப் பெரிதாய்
மதிக்கவில்லை என் மனம்..
மானம் பெரிதென்று மார்தட்டியது...
மகிழ்ச்சிதான்...என்றாலும்...
அந்த மகிழ்ச்சிக்கு கொடுத்த விலை...?
மீண்டும் ஒரு வீழ்ச்சி....

வீழ்ந்தேன்...
விழப்போகிறேன் என்று தெரிந்து
விரும்பியே வீழ்ந்தேன்...

உயரத்தில் இருக்கும்வரை
மதித்துச் சென்றவர்கள்
விழுந்துகிடக்கும்போது
மிதிப்பார்கள் என்று தெரிந்தே விழுந்தேன்...
மிதிபடுவதன் வலி...
மிதிபடும்போதுதான் தெரிந்தது...

விழுந்துவிட்டானே என்று
வேதனையில் துடிப்பார்கள் என
யாரை எதிர்பார்த்தேனோ...
அவர்களும் மிதித்தபோது...
வலியின் ஆழம் அதிகமாகிப் போனது...
இதயத்தின் ஆழத்தையும் தாண்டி...
மூளையின் முடிவையும் தாண்டி...
நரம்புகளின் செல்களுக்குள்ளும்
வலி வரம்பின்றி வாட்டியது...

வலியால் துடித்தபோது...
ஆகாயத்துக்கு அப்பாலும்
கேட்கும் அளவுக்கு
உறக்கக் கத்தி...கதறித் துடிக்க
உள்ளம் தவித்தது...
உறுதி தடுத்தது...

எல்லாவற்றையும் துறந்த சன்னியாசி
இறுதியாக வைத்திருந்த ஒரே ஒரு
இடையாடையைப் போல
மீண்டும் எழுவேன் என்ற
நம்பிக்கை மட்டும்தான்
இருந்தது என்னிடம்...

விழுந்தவன் எழுவதற்குள்தான்
எத்தனை இடர்பாடுகள்...
விழுந்த இடம் மண்ணில்தான்...
ஆனாலும்...
கிடந்த இடங்கள் எங்கெங்கோ...

காட்டாற்று வெள்ளம்
கண்டபடி அடித்துச் சென்றது...
மூழ்க வைத்தது...
மூச்சுத் திணறச் செய்தது...
கல்லும்... மண்ணும்....
கருவேல மரங்களும் காயப்படுத்தின...

புரட்டிப் புரட்டிப் போட்டு
போகும் திசையெல்லாம் இழுத்துச் சென்றது...
ஏதோ ஒரு கொம்பு கண்ணில் தெரிந்தது...
பிடித்துக் கொள்ளளாம்...
பிழைத்துக் கொள்ளலாம்
என்று பிடித்தபோது...
பிடித்தது பாம்பென்று பிறகுதான் தெரிந்தது...

முகம் சிதைந்து...
முகவரி இழந்து...
மூச்சுத் திணறி....
முடியப் போகிறோம் என்று
முணகும் வேளையில்....

உயிர் துடிக்கும் ஓசை
உனக்குக் கேட்டிருக்குமோ...
எங்கிருந்தோ ஒரு கை வருகிறது...
தாங்கிப் பிடிக்கிறது...
அது நீயன்றி வேறில்லை
என்பதைக் கூட
உணர முடியாதவனாய் இருந்தேன்...

துயரத்தின் உயரத்தையும்
அவலத்தின் ஆழத்தையும்
அறியச் செய்தாய்...

விழுந்தவன் மீண்டும்
எழுந்து சிறந்திட
வேகத்தைக் கொடுத்தவனே!
வலியைக் கூட
வசதியாக்கிக் கொள்ளும் வகையில்
வசப்படுத்த கற்றுக்கொடுத்தாய்...
ஆனாலும் வலி...வலிதானே...


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_