Thursday 4 December 2014

நான் மட்டும் யார்?



நிறையன்றி வேறில்லை -6


தயையான தத்துவனே

தமிழ் கொடுத்தாய்
தமிழால் உனைப்பாடும்
தகுதி கொடுத்தாய்...

பக்தி இல்லாமல்தான் பாடினேன்...
ஆனாலும்
பாடும் ஆற்றல் கொடுத்தாய்
அதன் வழி...
அன்பின் சுவையறிய ஞானமளித்தாய்...

பாலைவனப்பாதையில்
பரிதவித்தவன்
பசுஞ்சோலை கண்டதுபோல்
மனம் மகிழ்ந்தது...
உள்ளம் நெகிழந்தது...

சோலை சுகமும்
சொந்தமில்லை என்று
புழுதி புயல் வந்து தாக்கியது...
வழி தெரியாத அளவுக்கு
வந்து வந்து தாக்கியது
வலித்தது மனம்....

பாச தீபம் அணைந்துவிடுமோ என்று
பரிதவிக்கிறது மனம்... உன்
பாதம் கூட பணியாத நான்...
பாச தீபம் காக்க...அவர்களின்
பாதத்துக்கும் கீழாகப் பணிகிறேன்...

உறவு முறிந்தால்...
உ<ள்ளம் துடிக்கும்...
இன்னொரு வலி...
வலிக்கு வலிமை கூட்ட விரும்பாமல்
பணிகின்றேன் பாசத்துக்காக...
பாசத்தையும் பகட்டென்று
உதாசீனப்படுத்தி...
உதைத்தவர்கள் உண்டு...

எந்தப் பாறை
எங்கே வழுக்கும் என்ற
உண்மை தெரியாதவனாய்...
உலகம் புரியாதவனாய்....
உருள்கிறது வாழ்க்கை...
வழுக்கல் ஒவ்வொன்றிலும்
வலி வந்து கூடுகிறது...

எண்ணத்தில் இருப்பதினும்
எதார்த்தமே நிஜமென்பதை
ஏனோ எனக்கு உணர்த்த தவறிவிட்டாய்...
எதார்த்தம் உணர்ந்திருந்தால்
என் வலி கூடியிருக்காது...

நட்பு மலர் முகிழ்க்குமென்று
நாளும் எதிர் பார்த்திருக்கிறேன்
முட்புதர் அதுவென்று பிறகுதான் தெரிகிறது...

வாழக்கையையே
வழுக்கு மரம் ஆக்கிவிட்டவனே...

வலியைக் கொடுத்தாலும்
வழுக்குப் பாதையிலும்
வாழக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்...

வளம் சேர்கிறது...
நலம் கூடுகிறது...
சிகரம் தொட்டதாய் சிலநேரம்
சிந்தை மகிழ்கிறது...
சிறிது நேரத்தில்
சிலந்தி வலை பின்னுகிறது...

வலையில் விழாமல் இருக்க
வழுக்குப் பாறையில் விழுகிறேன்...
வலி... மீண்டும் வலி...

ஆனாலும்
அசராத மனம் கொடுத்தாய்...
எட்டாவது முறையாக
ஏன் விழுந்தேன் என்று வருத்தப்படாமல்
ஒன்பது முறை
உன்னால்தான் எழுந்திருக்க முடிந்திருக்கிறது...
இன்னொரு முறை முடியாதா என
உள்ளத் தெம்பு கொடுத்தாய்..

பார்த்துப் பார்த்தே
பாடம் படித்துவிட நினைக்கிறேன்..
நீயோ...
புடம் போட்டு புடம் போட்டே
புரிய வைக்கிறாய்...

சுயகொள்முதல்தான்
சுத்த நிர்குணம் என்கிறாய்...
வாழ்க்கையின்
வழி நெடுக தொடர்கிறது...
வலி...வாட்டம் தரும் வலி...

இனிப்பை மட்டுமே
இடைவிடாது கொடுத்துவிட்டு
இறுதியில் காரத்தைக் கொடுத்தால்
காரம் தாங்காமல்
கண்கள் சுரந்துவிடும்.

விழிகள் சிவக்குமளவுக்கு...
வியர்த்துக்கொட்டுமளவுக்கு...
மிளகாயை மட்டுமே
மீண்டும் மீண்டும் கொடுத்தாய்...
இறுதியில்
இனிப்பை கொடுத்தாய்....அதனால்
இதயத்தின் ஆழம் வரை இனிக்கிறது.
இனிப்பின் இன்பம்
இரு மடங்கு சுவைக்கிறது...

இறைவா...!
இனிமேலும் என்னை
உன்னோடு சண்டை போட விடாதே...

இன்பம் நீ...
துன்பம் நீ...
வாழ்வும் நீ...
வலியும் நீ....
எல்லாமும் நீ என்ற பிறகு...


நான் மட்டும் யார்? 

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_