Sunday, 30 November 2014

எடுத்தது எங்கே -3


ராஜபார்வை படத்தில் வைரமுத்து எழுதிய அந்திமழை பொழிகிறது பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அதே நேரத்தில், அதிக விமர்சனத்துக்கும் ஆளானது.
“இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே”
என்று எழுதியிருந்தார் வைரமுத்து.
அது என்ன இந்திரன் தோட்டத்து முந்திரி? என்று கேட்டார்கள். “ஆண்மையை அதிகரிக்கும் சக்தி முந்திரிக்கு உண்டு. இந்திரன் அதிக ஆண்மை உள்ளவன். அதனால் அவன் தோட்டத்து முந்திரிக்கு அதிகமான ஆண்மை சக்தி இருக்கும் என்ற பொருள்பட எழுதினேன்” என்று ஒரு விளக்கம் அளித்தார் வைரமுத்து. முந்திரிக்கு எப்படியோ ஒரு விளக்கம் கொடுத்துவிட்டார்.
சரி; அது என்ன மன்மத நாட்டுக்கு மந்திரியே .. . மன்மத தேசம் என்பது அவன் மட்டுமே ஆளக்கூடியது. அதில் யாரும் மந்திரி வைத்துக்கொள்ளமாட்டார்கள். ஏதோ முந்திரியே மந்திரியே என்று இயைபுக்காக எழுதிவிட்டார் வைரமுத்து.
இப்படி இயைபுக்காக அவர் அடிக்கடி இடறி விழுவதுண்டு.
இளமைக்காலங்கள் படத்தில் ‘ஈரமான ரோசாவே என்னைப் பார்த்து ஏங்காதே’ பாடலில்
“தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து”
என்று எழுதியிருக்கிறார். இந்த இரண்டு அடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
“சாத்துக்குடி துõத்துக்குடி
என்ன நீயும் ஏத்துகடி”
என்ற பாடலைப் போன்றதுதான் இது.
“தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
எந்நாளும் மாறாது நான் கொண்ட அன்பு”
என்று எழுதியிருந்தாலும் ஓர் அர்த்தம் இருந்திருக்கும். பாவம் அவருக்கு ஏனோ அப்படி தோன்றவில்லை. முதல் அடி ‘பந்து’ என்று முடிந்ததால் அடுத்த அடி ‘சிந்து’ என்று முடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி எழுதியுள்ளார்.
சரி; ராஜ பார்வை பாடலுக்கு வருகிறேன்.
“தொட்டியில் நீர் கொதிக்குதடி- நீ
தொட்ட இடம் மட்டும் சில்லென்றிருக்குதடி”
என்று எழுதுவார் பாரதிதாசன்.
இதையே எதிர்மறையாக சிந்தித்து,
அந்தி மழை பொழிகிறது பாடலில் பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து.
தண்ணீ ர் கொதிக்கிறது. அவள் உடல் சில்லென்று இருக்கிறது. அதாவது கொதிக்கின்ற நீரில் கூட அவள் தொட்ட இடம் சில்லென்று ஆகிற அளவுக்கு அவள் குளிர்ச்சியாக இருக்கிறாள் என்று பாவேந்தர் எழுதியதை, அப்படியே திருப்பிப் போடுகிறார் வைரமுத்து.
“தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது”
என்று எழுதுகிறார்.
பாவேந்தர் பாடலில் நீர் கொதிக்கிறது.<உடல் சில்லென்று இருக்கிறது. வைரமுத்து அதை, தண்ணீர் சில்லென்று இருக்கிறது. அதில் நிற்கும்போதும் வியர்க்கும் அளவுக்கு அவன் உடல் கொதிக்கின்றது என்று எழுதுகிறார்.
“பருவம் ஒரு சிறகுதான்
வானில்
பறக்க வழியில்லாதபோது
சிறகே ஒரு சுமைதான்”
என்று எழுதியுள்ளார் மு. மேத்தா.
சிறகு இருந்தால் பறக்க வேண்டும். பறக்க முடியாத போது? பயன்படாத எந்த ஒன்றையும் துõக்கிச் சுமப்பது சுமைதானே.
இதையே இமையில் கொண்டுபோய் வைக்கிறார் வைரமுத்து. இமை என்பது, கண்மூடி உறங்குவதற்கு. உறங்க முடியாதபோது இமையும் சுமைதானே. ‘சிறகே ஒரு சுமைதான்’ என்று மேத்தா சொன்னதை
“இமைகளும் சுமையடி இளமையிலே”
என்று அந்தி மழை பொழிகிறது பாடலில் எழுதுகிறார் வைரமுத்து.
(எடுத்தது வரும்)

Saturday, 29 November 2014

கண்ணனே! என் கள்வனே!!



திருமேனி கரியமலை தித்திக்கும்
திருக்கண்ணும் கரமும் திருவடியும்


தினம் மலரும் செந்தாமரை! குழல்
கானம் இசைத்தென்னை கவர்ந்திழுத்த

கள்வனே! நப்பிண்ணை கேள்வனே!
கள்ளூறும் இதழ்சுவைக்கும் குழலாய்

திருச்சங்காய் பிறந்திலனே! உள்ளூறும்
காதலினால் மாலே மனம் இளைத்தேனே

வலியே வளர்ச்சி

நிறையன்றி வேறில்லை -2

தாயின் தாலாட்டைக் கேட்டு
இதயம் இன்பத்தில் மிதந்திருக்கும்.
இமைகள் இரண்டையும்
நித்திரை தழுவியிருக்கும் நிச்சயம்.

உறங்கவைத்த தாலாட்டு
உள்ளம் குளிர்வித்த மகிழ்ச்சி
நினைவுகளில் ஏனோ
நிலை கொள்ளவில்லை.
சிறுவயதில் கேட்டதால்
சிந்தையில் படியவில்லை.

ஓதற்கரியவனே...!
உலகம்இதுவென
உணரும் வயதினில்
ஊருக்கு வெளியே என்னை
தனியே விட்டுவிட்டாய்...
பாலுக்கு ஏங்கும் குழந்தையாய்...
கொழுவுக்கு ஏங்கும் கொடியாய்...
அன்புக்கு ஏங்கும் அனாதையாய்...

புத்தகம் சுமக்கும் வயதில்
புத்தகம் சுமந்தேன்- கூடவே
சோகத்தையும் அல்லவா
சுமக்கவிட்டாய்...

அன்பைச் சுவைத்து
ஆதரவைப் பெறும் வயதில்
அன்புக்கு ஏங்கித் தவிக்கும்
அவலம் கொடுத்தாய்.

அவலம் மட்டுமே என்
அடிமனதில் ஆழப் பதிந்தது.
அன்றாட வாழ்க்கையாயும்
ஆகிப் போனது ...

மறதியைக் கொடுத்திருந்தால்
மனதுக்கு நிம்மதி.
எல்லையற்ற நினைவாற்றலை
எனக்குக் கொடுத்தாய்.
எல்லாரும் வியக்கிறார்கள்.
என்னால் மட்டும் அதில்
லயிக்க முடியவில்லை.

மகிழ்ச்சி மட்டுமே என்
மனதில் நின்றிருந்தால்
மகிழ்ந்திருப்பேன் நானும்...
வலியும் சேர்ந்தே அல்லவா
வரிசை கட்டி நிற்கிறது.

வரிசையில் நிற்பவற்றை
வகைப்படுத்திப் பார்க்கிறேன்...
மகிழத் தக்கதைக் காட்டிலும்
மறக்கத் தக்கவைகளே
அதிகம் நிற்கின்றன...
ஆதிக்கம் செலுத்துகின்றன.

வசைபாடல்கள் மட்டுமே
வரிசை கட்டி நின்று
நினைவுகளில் எப்போதும்
நிலை பெற்றிருக்கின்றன.

வலியின் நடுவில்
வருகிறது ஒரு மகிழ்ச்சி
குளிர்விக்க வந்த
கோடை மழை போல...
வானத்து மின்னல் போல
வந்த வேகத்தில் மறைகிறது

வலி மட்டும் ஏனோ
வடுவாகத் தங்கிவிடுகிறது...
வடு மறைந்தாலும்
வாழ்நாள் முழுவதும்
வலி தொடர்கிறது.

வலியில்லாத வாழ்க்கையில்லை- அதற்கும்
வயது ஒன்று இருக்கிறதல்லவா?
உலகம் இதுவென உணரும் வயதில்
உலகமே எனக்கு வலியாகிப் போனதே...

வலியின் தவிப்பால் நான்
வழி தவறியதுண்டு...
ஆண்டு பலவாக சேர்த்த பெயரெல்லாம்
அடித்து நொறுக்கப்பட
அடித்தளம் போட்டதும் நானே ஆனேன்...

வண்டியை இயக்குவது என்னவோ
நான்தான்... ஆனால்
பின் இருக்கையில்
முதலாளியாய் அமர்ந்து
என்னை இயக்குவது நீதானே...
போகும்பாதை தவறென்றால்
யார் பொறுப்பு?

இயக்குவது நீ...
இழப்பு மட்டும் எனக்கு...
என்ன உன் திருவிளையாடல்...

தள்ளிவிடுகிறாய்...
ஆனாலும் தாங்கிப் பிடிக்கிறாய்.
அதுதான் உன்
தயாள குணம்...

விழ வைத்தாய்...
விழுந்தேன்...
விழுந்தாலும்...எழ வேண்டும் என்ற
வேகத்தைக் கொடுத்தாய்..
வீறுகொண்டுதான் எழுந்தேன்...

எழுந்தாலும் விழுந்தாலும்
என்றும் நிலைப்பது வலிதான்...
ஆனாலும்....
வலியைச் சுமந்தே
வாழப் பழகியதால்
வாழ்க்கை இதுவென்றுணர்ந்தேன்.

இறைவா...!
வலியைக் கொடுத்ததும் நீதான்...
வாழ்வைக் கொடுத்ததும் நீதான்...
வலியும் வாழ்வும் கலந்ததுதான்
வாழ்க்கை என்பதை உணரவைத்தாய்...
உள்ளம் தெளிய வைத்தாய்...

Tuesday, 25 November 2014

வலியும் வாழ்வும் ...

நிறையன்றி வேறில்லை -1

இறைவன் படைப்பில்
இரண்டும் உண்டு.
இரவு - பகல்
இருள்- வெளிச்சம்
இன்பம் - துன்பம்
இப்படி...

என் வாழ்க்கையும்
இதற்கு விதிவிலக்கல்ல...

நான் மகிழந்ததை...
உள்ளம் நெகிழ்ந்ததை..
நனவோடை நினைவுகள்
என்று எழுதினேன்.
என் மறு பக்கத்தை
மனம் திறக்கும் நூல் இது.

உன் வலியை
வார்த்தைகளாக்குவாய்
அதை நாங்கள்
வாசிக்க வேண்டுமா?
என்ற கேள்வி எழலாம்.

வார்த்தைகளாக
இந்நூலில் கிடப்பது
வலிகள் மட்டுமல்ல...
படைத்தவனுக்கும்
படைப்பாளிக்கும்
நடக்கும் உரிமைப் போராட்டம்.

இந்த நூலின் வரிகளை
வாசிக்கும்போது அதில்
உங்களை நீங்கள் பார்க்கலாம்...
இறுதியில் உங்கள்
இதயம் வருடப்படுவதை உணரலாம்.

வாசியுங்கள்...
நேசிப்பீர்கள்
என்னையும்
என் எழுத்தையும்.


கற்கண்டே.. தேனே...



கற்கண்டே தேன்பாகே கலைத்தெழுதா
ஓவியமே உயிரே என் உணர்வே உன்

குறும்பாத நடையழகும் கொள்ளைச்
சிரிப்பழகும் சிறுகண்ணும் நான்பாட

சிறிதேனும் முடியுமோ சிறுதேர்
ஓட்டிவரும் பேரழகே பெருமையே

ஓருருண்டை வெண்ணைநான் தரவே
உனைப்பாடத் தந்திடுவாய் தமிழெனக்கே!!


கமலம்... பாதகமலம்...


கமலம்... கண்ணா உன் பாத
கமலம், காண மயங்கிடுதேயென்
இதயம், உன் விழியம்பு தந்திடும்
சுகதாகம், தாங்குமோ தளிர்மேனி
விரகம், வேண்டுமே இப்பிறவி நானும்
உனைச் சேர ஒரு தருணம்.

கண்ணன் அமுது


மாயப் பெருமானே மாலே
மரிகடலே வஞ்சப் பேயாள்

தூயக் குழவியாம் உனக்கு
நஞ்சுப் பாலூட்ட அமுதாய்

ஆயனே அமுது செய்தாய்
அழித்திட்டாய் அரக்கியை

தூயனே தாயோனே தண்
துழாய் மார்பனே போற்றி!!