Thursday 30 July 2015

தமிழ் ருசிக்கலாம் வாங்க.. 13



சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் டைரக்‌ஷன்.
==============================================
திரைப்படங்களில், குறிப்பாக கே. பாலச்சந்தர் படங்களில், பின்னால் நடக்கப்போவதை உணர்த்தும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பார்கள். அவள் ஒரு தொடர்கதை படத்தில், சுஜாதா ஒரு பாட்டுப் பாடுவார். அப்போது கூரை இல்லாத வீடு, துடுப்பு இல்லாத படகுகளைக் காட்டுவார் பாலச்சந்தர். அவளுக்கு வாழ்க்கை அமையப் போவதில்லை என்பதை, இந்தக்காட்சிகள்மூலம் உணர்த்துவார்.

இப்படி ஒரு காட்சியை சிலப்பதிகாரத்தில் வைத்துள்ளார் இளங்கோவடிகள்.

கண்ணகி திருமணம். மணவிழாவில் கலந்துகொண்ட பெண்கள் கண்ணகியை வாழ்த்துகிறார்கள். எப்படி தெரியுமா?

காதலற் பிரியாமல் கவவுக் கை ஞெகிழாமல்
தீது அறுக

என்று வாழ்த்துகிறார்கள். அதாவது, கணவன் மனைவி பிரியாமல், பிடித்த அவர்களின் கரங்கள் இறுக்கம் தளராமல், தீமைகள் ஒழிந்து வாழ்க என வாழ்த்துகிறார்கள்.

இன்றுபோல என்றும் சேர்ந்திருக்க வேண்டும். பிடித்த கைகள் இறுக்கியபடி இருந்து உங்கள் அன்பு அதிகரிக்க வேண்டும். உங்கள் வாழ்வில் நன்மையே நடக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் வாழ்த்தியதன் பொருள்.

ஆனால், “ கணவன் மனைவி பிரியாமல், பிடித்த அவர்களின் கரங்கள் இறுக்கம் தளராமல், தீமைகள் ஒழிந்து வாழ்க” என வாழ்த்துகிறார்கள்.

பிரியாமல்
தளராமல்
தீமை ஒழிந்து

என்று முழுக்க முழுக்க அமங்கலச் சொல்லால் வாழ்த்துகிறார்கள். மங்கலச் சொற்களால்தான் வாழ்த்துவார்கள். நல்லா இரு என்று வாழ்த்துவதுதான் மரபு. கெட்டுப் போகாமல் இரு என்று யாரும் வாழ்த்தமாட்டார்கள்.ஆனாலும் அமங்கலச் சொற்களால் வாழ்த்துவதாக எழுதியுள்ளார் இளங்கோவடிகள். ஏன்?
கண்ணகியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்த்தவே இப்படி அமங்கலச் சொற்களைப் போட்டு எழுதி குறிப்பால் உணர்த்துகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே, இளங்கோ அடிகள் டைரக்‌ஷன் எப்படி? வியக்க வைக்கிறதல்லவா?

2 comments:

  1. பிரியாமல்
    தளராமல்
    தீமை ஒழிந்து

    ஆஹா... அருமை...
    அப்பவே நம்மாளு டைரக்ஷன்ல கலக்கிட்டாரு போல...

    ReplyDelete
  2. அது போல ரோஹிணி தினத்தன்று திருமணம் நடைபெறுவதாக கூறுகிறார்.. ரோஹிணி திருமணத்திற்கு உகந்த நாள். நல்ல நாள் பார்த்து திருமணம் செய்தும் பிரிந்துவிட்டனர் என்று சொல்ல வருவது ஜோதிடத்தின் மீது அவர்க்கு இருந்த நம்பிக்கை இன்மையா அல்லது எதேச்சயாக நடந்த ஒன்றா தெரியவில்லை.

    ReplyDelete

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_